Matrimony OTT-Platforms Jobs Coupons Business

சென்னை போலீஸ் நிலையம் அருகே, துணிக்கடை ஊழியரிடம் மோட்டார் சைக்கிள் பறிப்பு; திண்டுக்கல் மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவை மீறிய 41 கடைகளுக்கு ‘சீல்’

சென்னை வேப்பேரி போலீஸ் நிலையம் அருகே துணிக்கடை ஊழியரின் மோட்டார் சைக்கிளை 2 பேர் பறித்துச்சென்று விட்டனர். ஊர்க்காவல் படை வீரர்கள் என்று ஏமாற்றிய அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 24). இவர் துணிக்கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்கிறார். இவரது தாயார் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்கிறார். நேற்று முன்தினம் தனது தாயாரை மருத்துவமனையில் வேலைக்காக இறக்கி விட்ட பிரகாஷ், தனது மோட்டார் சைக்கிளில் வண்ணாரப்பேட்டைக்கு மீண்டும் சென்று கொண்டிருந்தார்.

சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே 2 மர்மநபர்கள் பிரகாஷின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பிரகாஷ் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். வழிமறித்த அவர்கள் தங்களை ஊர்க்காவல் படை வீரர்கள் என்றும், பணி முடிந்து வீடு செல்வதாகவும், வழியில் இறங்கி கொள்வதாகவும் தெரிவித்தனர். உடனே அவர்களை பிரகாஷ் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டார்.

மோட்டார் சைக்கிள் பறிப்பு

ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்றதால் வேப்பேரி போலீஸ் நிலையம் அருகே அவர்களை போலீசார் வழிமறித்து விசாரித்தார்கள். பிரகாஷ் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கி போலீசாரிடம் பேசிக்கொண்டு நின்றார். அந்த நேரத்தில் மற்ற இருவரும் பிரகாஷின் மோட்டார் சைக்கிளை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

இதை எதிர்பாராத பிரகாஷ் அதிர்ச்சி அடைந்தார். அவரும், போலீசாரும் சிறிது தூரம் விரட்டிச் சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர்.

வலைவீச்சு

இதுதொடர்பாக பிரகாஷ் கொடுத்த புகார் அடிப்படையில், வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் தப்பிச்சென்ற இருவரும் ஊர்க்காவல் படை வீரர்கள் இல்லை என்று தெரிய வந்தது. அவர்கள் பழைய குற்றவாளிகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஊர்க்காவல்படை வீரர்கள் என்று ஏமாற்றி, மோட்டார் சைக்கிளை பறித்து சென்று விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுப்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார் - சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்
கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புதுப்பெண்ணின் தந்தை புகார் செய்து உள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள தேர்வாய் கண்டிகை கிராமம் அன்னை இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 33). விவசாயி. இவருக்கும், அதே பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். தெருவைச் சேர்ந்த சேகர் (54) என்பவரது மகள் சுனிதா (28) என்பவருக்கும் 7 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புதுப்பெண் சுனிதா, வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதையடுத்து சுனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு கார்த்திக் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுனிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கார்த்திக் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு சுனிதாவின் உடல் கயிற்றில் இருந்து இறக்கி கீழே கிடத்தப்பட்டு இருந்தது. அவரது தலையில் ரத்த காயம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சாவில் சந்தேகம்

இதையடுத்து சுனிதாவின் தந்தை சேகர், பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். மேலும் அந்த புகாரில் கூறி இருப்பதாவது:

எனது மகள் சுனிதாவை கார்த்திக் என்பவருக்குக் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந் தேதி திருமணம் செய்து கொடுத்தேன். அப்போது தேவையான சீர்வரிசை பொருட்களை கொடுத்தேன். திருமணமான ஒரு மாதத்திலேயே கூடுதலாக வரதட்சணையாக பணம் கேட்டு கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர் சுனிதாவை துன்புறுத்தி, எங்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.

பின்னர் சமாதானம் செய்து சுனிதாவை மீண்டும் கார்த்திக் வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைத்தோம். ஆனால் அதன்பிறகும் சுனிதாவிடம் கார்த்திக்கும், அவரது குடும்பத்தினரும் அடிக்கடி சண்டை போட்டு வந்து உள்ளனர். எனவே எங்கள் மகள் சாவில் சந்தேகம் உள்ளது. வரதட்சணை கேட்டு எனது மகள் சுனிதாவை கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர் அடித்துக்கொலை செய்து விட்டு உடலை தூக்கில் தொங்க விட்டு இருக்கலாம் என சாவில் சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்ற பாதிரிவேடு போலீசார், சுனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாதிரிவேடு போலீசார் சந்தேக சாவாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுனிதாவுக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவை மீறிய 41 கடைகளுக்கு ‘சீல்’
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 41 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி திறக்கப்படும் கடைகள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் வரை மொத்தம் 42 கடைகளை அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று நகரில் பல்வேறு இடங்களில் அத்தியாவசிய கடைகளை தவிர இதர கடைகளும் திறந்து இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நாகல்நகர், பாரதிபுரம், பெரிய கடைவீதி, மேற்குரதவீதி உள்பட நகர் முழுவதும் மாநகராட்சி துப்புரவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி 5 மிட்டாய் கடைகள் மற்றும் மிக்சர் கடை, நகை அடகு கடை என அத்தியாவசிய பொருட்களை விற்காத 10 கடைகள் திறந்து இருந்தன. இதையடுத்து அந்த கடைகளை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

இதற்கிடையே ஒருசில மளிகை கடைகள், எண்ணெய் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கும்பலாக நின்று பொருட்களை வாங்குவதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கடைக்காரர்கள் எந்தவித ஏற்பாடும் செய்யவில்லை.

மேலும் சில கடைக்காரர்கள் முக கவசம் அணியாமல், கைக்குட்டையை அணிந்து வியாபாரம் செய்தனர். இதையடுத்து சமூக இடைவெளி கடைபிடிக்காதவை, முக கவசம் அணியாதவரின் கடைகளையும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதன்மூலம் நேற்று ஒரே நாளில் மொத்தம் 23 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதே போல் நேற்று பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பழனி நகர்நல அலுவலர் வேல்முருகன் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் பழனி நகர் பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது காந்திமார்க்கெட், புதுதாராபுரம் ரோடு, ஆர்.எப்.ரோடு ஆகிய பகுதிகளில் துணிக்கடைகள், சிப்ஸ் கடைகள், இரும்புக்கடைகள் ஆகியவை திறந்திருந்தன. இதையடுத்து அந்த கடைகளை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். அதன்படி மொத்தம் 12 கடைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

மேலும் பழனி நகராட்சி அதிகாரிகள் மார்க்கெட் ரோடு, திண்டுக்கல் சாலையில் முககவசம் அணியாமலும், மோட்டார் சைக்கிளில் 2 பேர் சென்றவர்களையும் பிடித்து அபராதம் விதித்தனர். அதன்படி மொத்தம் 50 பேரிடம் இருந்து ரூ.100 வீதம் ரூ.5 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. தொடர்ந்து வரும் நாட்களில் முககவசம் அணிந்து வரும்படி எச்சரித்து அனுப்பினர். நத்தத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி அனுமதியின்றி திறந்து வைத்திருந்த 6 கடைகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி தலைமையில் போலீசார் ‘சீல்’ வைத்தனர்.

கரூர் அருகேதனியார் பள்ளி ஆசிரியர் தற்கொலை காதல் மனைவி வீட்டிற்கு வராததால் விபரீத முடிவு
கரூர் அருகே தாய் வீட்டிற்கு சென்ற காதல் மனைவி வீட்டிற்கு வராததால் தனியார் பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் அருகே தாய் வீட்டிற்கு சென்ற காதல் மனைவி வீட்டிற்கு வராததால் தனியார் பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடற்பயிற்சி ஆசிரியர்

கரூர் அருகே உள்ள மண்மங்கலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் சுபாஷ் ( வயது 25). தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் சர்மிளா (25) என்பவரை காதலித்து, கடந்த 50 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து சுபாசின் வீட்டில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.


இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சர்மிளா சென்றுள்ளார். பின்னர் தாய் வீட்டிற்கு சென்ற அவர் மீண்டும் வீட்டிற்கு வர வில்லை. சுபாஷ் வீட்டிற்கு வரச் சொல்லி அழைத்தும் சர்மிளா வரவில்லையாம். இதனால் மனமுடைந்த சுபாஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.

தற்கொலை

இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுபாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து வாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின்பேரில் வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் ஆன சில நாட்களிலேயே புதுமாப்பிள்ளை இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த 18 கடைகளுக்கு ‘சீல்’
ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த 18 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். பின்னர் காய்கறி, மளிகை, மருந்துக்கடை போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் மதியம் 1 மணி வரை இயங்க அரசு அனுமதித்தது. இந்நிலையில் புதுக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறி சில கடைகள் திறந்திருப்பதாக புதுக்கோட்டை வருவாய் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி புதுக்கோட்டை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி திறக்கப்பட்ட கடைகளை மூட பல முறை அறிவித்தும் அவர்கள் கடைகளை மூட வில்லை.

18 கடைகளுக்கு ‘சீல்’

இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, மேலராஜவீதி, திலகர் திடல் உள்பட நகரின் பல்வேறு இடங்களுக்கு சென்று வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த இரும்புக்கடை, பேன்சி கடைகள், வாகன உதிரிபாக கடைகள், ஜெராக்ஸ் கடைகள் உள்ளிட்ட 18 கடைகளை பூட்டி ‘சீல்’வைத்தனர். இதுபோன்று ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடைகள் திறந்திருந்தால் கண்டிப்பாக மூடி ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

மீமிசல் அருகேபள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
மீமிசல் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி தற்கொலை

மீமிசல் அருகே தத்தணி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 40). அவரது மகள் கிருஷ்ணபிரியா (13) அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். நாராயணனை நேற்று மது விற்றதாக சந்தேகத்தின் அடிப்படையில் மீமிசல் போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டில் இருந்த கிருஷ்ணபிரியா திடீரென தூக்கில் தொங்கினார். உடனடியாக அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து கிருஷ்ணபிரியா உடலை, உறவினர்கள் ஊருக்கு கொண்டு வந்து விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீமிசல் போலீசார் கிருஷ்ணபிரியாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் கிருஷ்ணபிரியாவின் உறவினர்கள் உடலை தரமாட்டோம் என்று கூறினர். இதையறிந்த கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் சம்பவ இடத்திற்கு வந்து, கிருஷ்ணபிரியாவின் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, கிருஷ்ணபிரியாவின் உடலை, அவரது உறவினர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் கிருஷ்ணபிரியா உடலை பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணபிரியா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாராய ஊறல்கள் அழிப்பு

*கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் (42) என்பவரின் தோட்டத்தில் சாராய ஊறல் உள்ளதாக கீரமங்கலம் போலீசாருக்கு வந்த தகவலின்படி, போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் மற்றும் போலீசார் வாழைத் தோட்டத்தை சோதனை செய்த போது மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பழைய மண் பானையில் 50 லிட்டர் சாராய ஊறல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஊறலில் உள்ள சாராயத்தை கொட்டி அழிக்கப்பட்டு பானை உடைக்கப்பட்டது. மேலும் போலீசார் வருவதை பார்த்து தப்பியோடிய ரவிக்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

*கறம்பக்குடி அருகே உள்ள பட்டத்திகாடு பகுதியில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி கறம்பக்குடி தாசில்தார் சேக்அப்துல்லா, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு இருவேறு இடங்களில் தோட்டங்களில் இருந்து 900 லிட்டர் சாராய ஊறல்கள், சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருட்கள், பேரல்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் சாராய ஊறல்களை அழித்தனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூதாட்டி பலி

*பொன்னமராவதி அருகே உள்ள சுந்தரசோழபுரத்தை சேர்ந்த சின்னக்கருப்பன் மனைவி பெசலி (77). இவர் வீட்டின் அருகே உள்ள கிணறு பக்கத்தில் கால்நடைகளுக்கு இலை தழைகளை அறுத்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மயங்கி கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதையறிந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி பெசலி உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

கஞ்சா விற்ற 2 பேர் கைது

*மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த கருவிடைச்சேரி பகுதியை சேர்ந்த ஆறுமுகம், கூலாங்கொல்லையை சேர்ந்த செல்வராஜ் ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடையை மீறி கறி விருந்து; 12 பேர் கைது
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சிங்கம்புணரி அருகே கறி விருந்தில் பங்கேற்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் ஒரு தோப்பில் சிலர் பன்றி கறி சமைத்து விருந்து நடத்தினர். மேலும் இந்த விருந்து நிகழ்ச்சியை சமூக வலைதளங்களிலும் பரப்பினர்.

இதுகுறித்து சிங்கம்புணரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு 12 பேர் பன்றி கறி சமைத்து விருந்து நடத்தியது தெரியவந்தது. அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் கிருங்காக்கோட்டையை சேர்ந்த சரவணன் (வயது42), ராஜேந்திரன் (60), சேகர் மகன் விஜயகுமார் (26), அன்புச்செல்வன் மகன் இளமாறன் (23), அன்புச்செல்வன் மகன் ஜெயபிரகாஷ் (21), கருணாநிதி மகன் கபிலன் (21), சேதுரத்தினம் மகன் ஜெயசீலன்(26), மணி மகன் ஜெயந்த் (23), ரஜேந்திரன் மகன் கதிரவன் (39), சத்தியமூர்த்தி மகன் அழகு பாண்டி (23), மாரிமுத்து மகன் ஸ்டீபன் (19) மற்றும் சிங்கம்புணரியை சேர்ந்த செல்வம் மகன் மணிகண்டன் (24) என தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 5 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

நெல்லை அருகே ஊரடங்கில் விபத்து: ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது
நெல்லை அருகே ஊரடங்கு நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியானார்கள்.

இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கார் மோதியது

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே உள்ள குமாரசாமிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவனின் மகன் மாதவன்துரை (வயது 35). அவருடைய மனைவி ராஜேஸ்வரி (30). இவர்களுடைய மகன் பாரத் ராஜா (5).


நேற்று மாதவன்துரை தனது மனைவி, மகனுடன் ஒரு மோட்டார்சைக்கிளில் முக்கூடலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் மாலையில் அங்கிருந்து புறப்பட்டு ஊருக்கு திரும்பினார். முக்கூடல் அருகே பாப்பாக்குடி மெயின் ரோட்டில் சென்றபோது எதிரே வந்த கார், மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

3 பேர் பலி

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து மாதவன்துரை, அவரது மனைவி ராஜேஸ்வரி, மகன் பாரத்ராஜா ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் மாதவன்துரை, அவரது மகன் பாரத்ராஜா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்ததும் பாப்பாக்குடி போலீசார் விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜேஸ்வரியை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார். பலியான 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவரிடம் விசாரணை

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அம்பை அகஸ்தியர்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பதும், வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. நேற்று அகஸ்தியர்பட்டியில் இருந்து நெல்லையில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் நிரப்புவதற்காக வந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. மேலும், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் பலியான ராஜேஸ்வரி, கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு நேரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கார் மோதி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆத்தூரில் பரிதாபம்: என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆத்தூரில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவர் ஏரல் அரசு நூலகத்தில் நூலகராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தெய்வநாயகி. இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் குரு பிரசாத் (வயது 20), நெல்லையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் குரு பிரசாத் தனது வீட்டில் இருந்தார். நேற்று மதியம் வீட்டில் அனைவரும் டி.வி. பார்த்து கொண்டிருந்தனர். அப்போது குரு பிரசாத்திடம் நன்றாக படிக்குமாறும், கல்லூரி திறந்ததும் பெயிலான பாடங்களை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுமாறும் தந்தை பாபு அறிவுரை வழங்கி கண்டித்தார்.

தற்கொலை

இதனால் மனமுடைந்த குரு பிரசாத் தனது அறையில் சென்று மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் நீண்ட நேரமாகியும் குரு பிரசாத் தனது அறையில் இருந்து வெளியே வராததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, கதவை உடைத்து திறந்து பார்த்தனர். அப்போது குரு பிரசாத் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று, குரு பிரசாத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றாக படிக்குமாறு தந்தை கண்டித்ததால், என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஸ்ரீவைகுண்டம் அருகே, ஊருணியில் மூழ்கி சிறுவன் பலி - அண்ணன்-அக்காள் கண் எதிரே பரிதாபம்
ஸ்ரீவைகுண்டம் அருகே அண்ணன்-அக்காள் கண் எதிரே ஊருணியில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே சாமியாத்து கீழத் தெருவைச் சேர்ந்தவர் சுப்புகுட்டி மகன் கணேசன் (வயது 34). கூலி தொழிலாளியான இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவருடைய மனைவி தங்க துரைச்சி. இவர்களுக்கு பிரியதர்ஷினி (10) என்ற மகளும், சுந்தர் (7), பிரவீன் (4) ஆகிய 2 மகன்களும் இருந்தனர்.

அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பிரியதர்ஷினி 5-ம் வகுப்பும், சுந்தர் 2-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். பிரவீன், அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தான். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பள்ளிகள், அங்கன்வாடி மையம் மூடப்பட்டது. இதனால் 3 பிள்ளைகளும் வீட்டில் இருந்தனர்.

ஊருணியில் மூழ்கி...

நேற்று காலையில் கணேசன் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள காட்டுப்பகுதிக்கு ஓட்டிச் சென்றார். அப்போது அவர் 3 பிள்ளைகளையும் தன்னுடன் அழைத்து சென்றார். அப்போது காட்டுப்பகுதியில் ஒரு ஆடு திடீரென்று காணாமல் போனது. எனவே கணேசன் 3 பிள்ளைகளையும் அங்குள்ள ஊருணி அருகில் அமர வைத்து விட்டு, காணாமல் போன ஆட்டை தேடிச் சென்றார்.

அப்போது சிறுவன் பிரவீன், ஊருணியில் இறங்கி விளையாடினான். அப்போது எதிர்பாராதவிதமாக அவன் தண்ணீரின் ஆழமான பகுதியில் மூழ்கினான். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனுடைய அக்காளும், அண்ணனும் கூச்சலிட்டனர்.

போலீசார் விசாரணை

உடனே கணேசன் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, பிரவீனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பிரவீனை பரிசோ தித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரென்னிஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. அண்ணன்-அக்காள் கண் எதிரே ஊருணியில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மதுபோதையில் தகராறு: வாலிபர் அடித்து கொலை - நண்பர் கைது
மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்திகாப்பான் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் யுவராஜ் (வயது 22). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் தினேஷ்பாபு (22). இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவார்கள். கூலி தொழிலாளியான இவர்கள் ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் யுவராஜ், தினேஷ்பாபு இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு அதிக பணம் கொடுத்தது, ரஜினியா? விஜய்யா? என்று அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த தினேஷ்பாபு, யுவராஜை கையால் பலமாக தாக்கி கீழே தள்ளினார். தரையில் கிடந்த கல்லில் யுவராஜின் தலை மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் கீழே சுருண்டு விழுந்து மயங்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள், யுவராஜை மீட்டு சிகிச்சைக்காக மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், யுவராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தினேஷ்பாபுவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad