Matrimony OTT-Platforms Jobs Coupons Business

மதுரையில் நர்சு உள்பட மேலும் 4 பேருக்கு கொரோனா; கொரோனா பரப்பியதாக கைதான 6 பேர் புழல் சிறையில் அடைப்பு

மதுரையில் நர்சு உள்பட மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் 4 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையை சேர்ந்த 15 பேருக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மதுரையில் மேலும் 4 பேருக்கு நேற்று நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்களில் ஒருவர் மதுரை கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர். ஏற்கனவே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் மூலமாக இவருக்கு பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுபோல் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவருக்கு எப்படி பரவியது என்பது குறித்து சுகாதாரத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்ததாக மதுரை மேலமாசி வீதி பகுதியை சேர்ந்த 64 வயது முதியவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்ததால் இவருக்கு கொரோனா பரவியிருக்கலாம்.

இதுபோல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் பணியாற்றி வரும் 40 வயது நர்சு ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் மதுரை புறநகர் பகுதியை சேர்ந்தவர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளிடமிருந்து இவருக்கு பரவியிருக்கிறது. ஏற்கனவே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய நர்சு ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நர்சுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேருக்கும், மதுரை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து இவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் சீல் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. மேலும் சுகாதார துறையின் மூலம் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பை சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79-ஆக உயர்ந்தது.

ஈரோட்டில் கொரோனா பரப்பியதாக கைதான 6 பேர் புழல் சிறையில் அடைப்பு; பெருந்துறை ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டு செல்லப்பட்டனர்
ஈரோட்டில் கொரோனா பரப்பியதாக கைதான தாய்லாந்து நாட்டினர் 6 பேரை புழல் சிறையில் அடைக்க பெருந்துறை ஆஸ்பத்திரியில் இருந்து போலீசார் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த 7 பேர் சுற்றுலா விசாவில் ஈரோடு வந்தனர். கொல்லம்பாளையம், சுல்தான் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தங்கி மத பிரசாரம் செய்தனர். இவர்களில் 2 பேர் ஈரோட்டில் இருந்து மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு செல்வதற்காக கோவை விமான நிலையம் சென்றனர். அப்போது 2 பேருக்கும் அங்கு இருந்த டாக்டர்கள் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என பரிசோதனை செய்தனர்.

அப்போது சிறுநீரக பாதிப்பால் ஒருவர் இறந்தார். அதைத்தொடர்ந்து மற்றொருவரும், ஈரோட்டில் தங்கியிருந்த 5 பேரும் என மொத்தம் 6 பேரும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன்பின்னர் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 3 பேரும் குணமடைந்தனர். மேலும், தாய்லாந்து நாட்டினர் 6 பேரும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியிலேயே வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இதற்கிடையே ஈரோட்டில் கொரோனா தொற்றை பரப்பியதாக தாய்லாந்து நாட்டினர் 6 பேர் மீதும் சூரம்பட்டி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை ஆஸ்பத்திரியிலேயே போலீஸ் காவலில் வைத்து சிகிச்சை அளிக்க ஈரோடு கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து வழக்கு ஐகோர்ட்டு விசாரணைக்கு சென்ற நிலையில் வருகிற 30-ந் தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் அவர்கள் 6 பேரும் ஆஸ்பத்திரியிலேயே வைத்து கண்காணிக்கப்பட்டனர்.

இதற்கிடையே கடந்த 24-ந் தேதி தாய்லாந்து நாட்டினர் 6 பேரும் ஜாமீன் கேட்டு ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை சென்னை புழல் சிறையில் அடைக்க போலீசார் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தனர்.

அதன்படி அரசு உத்தரவிட்டதையடுத்து பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்த தாய்லாந்து நாட்டினர் 6 பேரையும் போலீசார் நேற்று இரவு சென்னை புழல் சிறையில் அடைக்க அழைத்து சென்றனர். இதில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அவர்களை கொண்டு சென்றனர்.

கொரோனா தொற்று: மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு நிலையம் மூடல்
மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மட்டும் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கோவிலில் பணிபுரிந்த பட்டரின் தாயார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதைதொடர்ந்து கோவிலில் பணிபுரிந்த ஊழியர்கள், அலுவலர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் கோவில் பட்டர்கள் என 300 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று முன்தினம் வெளிவந்தது.

அதில் கோவிலில் பணிபுரியும் எலக்ட்ரீசியன், தற்காலிக ஊழியர் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு நிலைய வீரர் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரின் உறவினர்கள் அனைவரையும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் அவர்கள் குடியிருக்கும் வீடுகள் அமைந்த பகுதியில் அனைத்து தடுப்புகள் அமைத்து தனிமைப்படுத்தப்பட்டன. மேலும் அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

அதே நேரத்தில் தீயணைப்பு வீரர் பணியாற்றிய மதுரை மேல சித்திரை வீதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு நிலையத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த தீயணைப்பு வாகனம் பெரியார் பஸ் நிலையம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின்னர் அந்த தீயணைப்பு நிலையம் மூடப்பட்டது.

அதுதவிர அவருடன் பணியாற்றிய தீயணைப்பு வீரர்கள் 12 பேருக்கும் மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறையினரால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதேபோன்று மதுரை தெற்குவாசல் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமை காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் பணியாற்றிய தெற்குவாசல் போலீஸ் நிலையம் மூடப்பட்டது. அதை தொடர்ந்து அந்த போலீஸ் நிலையத்திற்கு எதிரே தற்காலிக போலீஸ் நிலையம் நேற்று அமைக்கப்பட்டது. விரைவில் அருகில் உள்ள ஏதாவது கல்யாண மண்டபம், அரசு கட்டிடத்தில் மாற்றப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் போலீசாருடன் பணியாற்றிய சக போலீஸ்காரர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்களுடன் நெருங்கிய உறவில் இருந்த போலீஸ்காரர்கள் 40 பேரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மதுரை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் போலீசார் இருவருக்கும், தீயணைப்பு வீரர் ஒருவர், 3 ஒப்பந்த சுகாதார பணியாளர்கள், ஒரு அரசு மருத்துவமனை செவிலியர் என தடுப்பு பணிகளில் ஈடுபட்டோருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் மதுரையில் கொரோனா சமூக தொற்றுக்கான நிலைக்கு சென்று விட்டதாக கருதி பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

புளியந்தோப்பு, பாடிகுப்பம் பகுதியில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி
சென்னை புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதியில் ஒரே வீட்டில் வசிக்கும் அண்ணன், தம்பிகள் 3 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களின் நண்பர்கள் 4 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதேபோல் நரசிம்மன் நகர், கன்னிகாபுரம் பகுதியில் உள்ள 5 பேர் என நேற்று ஒரே நாளில் புளியந்தோப்பு பகுதியில் மட்டும் 2 பெண்கள் உட்பட 12 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.

இவர்களில் 2 பெண்கள் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கும், மற்றவர்கள் ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்களுக்கு அப்பகுதியில் ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் பரவி இருப்பது தெரியவந்துள்ளது.

அம்பத்தூர் மண்டலம்

அதேபோல் சென்னை அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட பாடிகுப்பம், அங்காளம்மன் கோவில் தெருவில் வசித்து வந்த கோயம்பேடு மார்க்கெட்டில் கொத்தமல்லி வியாபாரம் செய்து வந்த வியாபாரிக்கு 25-ந்தேதி கொரோனா வைரஸ் உறுதியானது. இதையடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 37 பேர் கண்டறியப்பட்டு அவர்களின் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் நேற்று 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். இந்த 13 பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் 5 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் இருந்த பகுதிகள் அனைத்தும் திருமங்கலம் போலீசார் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

13 நாட்களாக கொரோனா தொற்று இல்லை:பச்சை மண்டலமாக மாற குமரி மாவட்டத்துக்கு வாய்ப்பு
குமரியில் கடந்த 13 நாட்களாக கொரோனா தொற்று யாருக்கும் இல்லை. இதனால் ஊரடங்கு காலம் முடிவதற்குள் பச்சை மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.

7 பேர் குணமடைந்தனர்

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் 16 பேர் பாதிக்கப்பட்டனர். 15-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த மாவட்டம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டமும் சிவப்பு மண்டல பட்டியலில் சேர்க்கப்பட்டது. தற்போது பாதிக்கப்பட்டவர்களில் ஒன்றிரண்டு பேராக பூரண குணம் அடைந்து வருகிறார்கள். இதுவரை 7 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். அவர்களில் நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவரும், அவருடைய 4 வயது மகனும் குணமடைந்த பிறகும் ஆஸ்பத்திரியிலேயே இருந்து வருகிறார்கள். அதாவது, அவர்களுடைய குடும்பத்தினர் கொரோனா தொடர் சிகிச்சையில் இருப்பதால், வீட்டுக்கு செல்ல மறுத்து அங்கேயே உள்ளனர்.

6 பேருக்கு மீண்டும் பரிசோதனை

மற்ற 5 பேரும் தேங்காப்பட்டணம், நாகர்கோவில், மணிக் கட்டி பொட்டல் அனந்தசாமிபுரத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வீடு திரும்பி விட்டனர். இதனால் 9 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். அதில், 6 பேருக்கு நேற்று மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அதற்கான முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள், கொரோனா தொற்றுள்ளவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் என மொத்தம் 4,466 பேர் அவரவர் வீடுகளில் 28 நாட்கள் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டு இருந்தனர். அதில் தற்போது 218 பேர் மட்டுமே தனிமைப்படுத்துதலில் உள்ளனர். மற்ற அனைவரும் அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எண்ணிக்கை குறையும்

குமரி மாவட்டத்தில் கடைசியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் கண்டறியப்பட்டது கடந்த 14-ந் தேதி ஆகும். அதன் பிறகு 13 நாட்கள் ஆகியும் இதுவரை யாருக் கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. அதன்படி புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லாததாலும், பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் குணமடைந்து விட்டதாலும், ஒன்றிரண்டு நாட்களில் இன்னும் சிலர் குணமடைய இருப்பதாலும் குமரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய உள்ளது.

பச்சை மண்டலமாக...

இதனால் ஊரடங்கு காலம் முடிவதற்குள் குமரி மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலமாக மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 1,644 பேருக்கு கொரோனா தொற்று இல்லை. இன்னும் 340 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீல் வைக்கப்பட்ட பகுதிகளை திறக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ராஜாஜி நகரில் வசித்து வந்த 2 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜாஜி நகரில் 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தனிமைப்படுத்தப்பட்டது. அங்குள்ள சின்ன பள்ளிவாசல், மாடல் அவுஸ், உழவர் சந்தை, ரெய்லி காம்பவுண்ட், பழைய ஆஸ்பத்திரி லைன் ஆகிய பகுதிகள் சீல் வைத்து மூடப்பட்டது. மேலும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டதால், பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். ஆனால் தனிமைப்படுத்தப்பட்ட அந்த பகுதிகளில் வசித்து வருகிறவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் சரிவர கிடைக்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதற்கிடையே சமீபத்தில் கொரோனா தொற்று பாதித்து தீவிர சிகிச்சை பெற்று வந்த ராஜாஜி நகரை சேர்ந்த 2 பேரும், குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

பொதுமக்கள் போராட்டம்

இந்த நிலையில் நேற்று குன்னூரில் தனிமைப்படுத்தப்பட்டு, சீல் வைக்கப்பட்ட பகுதிகளை திறக்கக்கோரி பள்ளிவாசல் பகுதி பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வீட்டை விட்டு வெளியே வந்து போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்றிருந்தனர். இதனால் அங்கு போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு எவ்வித தடையும் இன்றி அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் உள்ளவங்கி ஏ.டி.எம். மையங்களில் கிருமி நாசினி வைக்காவிட்டால் நடவடிக்கை
திருச்சி மாவட்டத்தில் வங்கி ஏ.டி.எம். மையங்களில் கிருமி நாசினி வைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கிருமி நாசினி

திருச்சி மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம்.மையங்களில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக கையில் தடவும் கிருமி நாசினி (ஹேண்ட் வாஷ்) வைத்திட வேண்டும். பொதுமக்கள் வசதிக்காக வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் மூலம் பணபரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பணம் எடுப்பதற்கும் பணம் செலுத்துவதற்கும் ஏ.டி.எம். மையங்களை அதிகஅளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும் முன்பாக கிருமி நாசினியை கைகளில் தடவிக்கொள்ள வேண்டும். பரிவர்த்தனை முடிந்த பின்னரும் கிருமி நாசினியை கைகளில் தடவிக் கொள்ள வேண்டும்.

நடவடிக்கை

ஏ.டி.எம்.களில் காவலர்கள் இருந்தால் அவர்களிடம் கிருமி நாசினி வழங்கி பொதுமக்கள் பணம் எடுக்கும் போதும், பணம் எடுத்த பின்பும் உபயோகப்படுத்திட அறிவுறுத்த வேண்டும். ஏ.டி.எம். களில் கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளதா? என்பதை முன்னோடி வங்கி மேலாளர் கண்காணிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றாத வங்கிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் ஊரக மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் வைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம்.மையங்களில் கிருமி நாசினி வைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணித்து மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

ஜி கார்னர் மார்க்கெட்டில் சமூக விலகலை கடைபிடிக்காத வியாபாரிகள்- பொதுமக்கள்
பொன்மலை ஜி கார்னர் மார்க்கெட்டில் சில்லரை வியாபாரத்துக்கும் திடீர் என அனுமதி வழங்கப்பட்டதால், சமூக விலகலை கடைபிடிக்காமல் வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர்.

காய்கறி மொத்த வியாபாரம்

கொரோனா பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் திருச்சி காந்தி மார்க்கெட் மூடப்பட்டு விட்டது. காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் அரியமங்கலம் பழைய பால்பண்ணை பகுதியில் திருச்சி- சென்னை பைபாஸ் ரோடு அணுகுசாலையில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் வியாபாரம் செய்து வந்தனர். அங்கு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சமூக விலகலை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் தினமும் இரவு நேரத்தில் ஆயிரக்கணக்கில் குவிந்ததால் கொரோனா வைரஸ் தொற்று பரவிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

ஜி கார்னருக்கு மாற்றம்

இதனை தொடர்ந்து ஜி கார்னர் மைதானத்திற்கு காய்கறி மார்க்கெட் மாற்றப்பட்டு நேற்று முன்தினம் முதல் காய்கறி மொத்த வியாபாரம் தொடங்கியது. இங்கு இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மொத்த வியாபாரம் மட்டும் நடத்தி கொள்ளலாம், சில்லரை வியாபாரத்துக்கு அனுமதி கிடையாது. பொதுமக்கள் காய்கறி வாங்குவதற்கு இங்கு வரக்கூடாது, மீறி வந்தால் அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் கலெக்டர் அறிவித்து இருந்தார்.

கலெக்டர் உத்தரவின்படி நேற்று முன்தினம் மொத்த வியாபாரம் மட்டும் நடந்தது. இரண்டாவது நாளான நேற்று ஜி கார்னர் மைதானத்தின் ஒரு பகுதியில் சில்லரை வியாபாரமும் நடந்து வந்தது. இதனால் காய்கறி வியாபாரிகள் மட்டும் இன்றி பொதுமக்களும் ஏராளமான அளவில் வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர்.

சமூக விலகல் இல்லை

மொத்த வியாபாரம் நடந்த பகுதியிலும் சரி, சில்லரை வியாபாரம் நடந்த பகுதியிலும் சரி சமூக விலகல் என்பது கேள்விக்குறியானது. வியாபாரிகளும், பொதுமக்களும் சமூக விலகலை கடைபிடிக்கவில்லை. பெரும்பாலான வியாபாரிகளும், பணியாளர்களும் முக கவசம் கூட அணிந்து கொள்ளவில்லை. லாரிகள், வேன்கள், ஆட்டோக்கள், தட்டு வண்டிகளில் காய்கறிகள் மூட்டை மூட்டையாக இறங்கியபோது யாரையும் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. போலீசார் மார்க்கெட்டின் நுழைவு வாயில் பகுதியில் தான் பாதுகாப்புக்காக நின்றார்கள். கூட்டம் அதிக அளவில் வந்ததால் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இப்படி வரும் பொதுமக்களை தடுத்து நிறுத்தவும் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தவும் கூடுதல் போலீசாரும், அவர்களுக்கு உதவியாக என்.சி.சி. மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்படவேண்டும். இல்லை என்றால் இங்கு அதிகமாக வரும் பொதுமக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.

இதே நிலை தொடர்ந்தால் மார்க்கெட்டை மாற்றினாலும் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தில் இருந்து திருச்சி மாநகர மக்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டு விடும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

தஞ்சையில் பரபரப்பு சம்பவம்:கொரோனா வார்டில் இருந்து தப்பி வந்ததாக கூறிய நபர் 108 ஆம்புலன்சில் அழைத்து சென்று பரிசோதனை
கொரோனா வார்டில் இருந்து தப்பி வந்ததாக கூறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. 108 ஆம்புலன்சில் அழைத்துச்சென்று பரிசோதனை செய்யப்பட்டது.

தஞ்சையில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் காய்கறி சந்தை இயங்கி வருகிறது. இந்த சந்தையில் 50 வயது மதிக்கத்தக்க நபர் வெகுநேரமாக அங்கு நின்று கொண்டிருந்தார். அதைப்பார்த்த வியாபாரிகள் அவரிடம் ஏன் நீண்ட நேரமாக இங்கு நிற்கிறாய்? இங்கிருந்து செல் என கூறி உள்ளனர்.

அதற்கு அவர், நான் கொரோனா நோயாளி. தஞ்சையை அடுத்த காசவளநாடுபுதூரை சேர்ந்தவன். நான் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தேன். அங்கிருந்து தப்பி ஓடி வந்து விட்டேன் என்று கூறினார். அவர் அவ்வாறு கூறியதை கேட்டதும் அங்கிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

முரணான தகவல்

பின்னர் அந்த நபர், அங்கிருந்து வேக, வேகமாக நடக்க தொடங்கினார். இது குறித்து கொரோனா தடுப்பு தன்னார்வ படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அவர்கள் அங்கு உடனடியாக வந்து அந்த நபரை விரட்டிச்சென்றனர். இந்த நிலையில் அந்த நபர், தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள ஒரு கடையின் முன்பு அமர்ந்தார்.

பின்னர் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் மாநகர்நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், தாசில்தார் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள், அந்த நபரிடம் விசாரணை நடத்திய போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார்.

108 ஆம்புலன்ஸ்

இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த நபர் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் அந்த நபர் அமர்ந்த பகுதிகளில் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் தஞ்சையில் நேற்று சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை-திருவாரூரில், ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 12 பேர் குணம் அடைந்தனர்
தஞ்சை, திருவாரூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 12 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

55 பேர் பாதிப்பு

தஞசை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 9 பேரும், திருவையாறு பகுதியை சேர்ந்த 3 பேரும், திருவோணம் பகுதியை சேர்ந்த ஒருவரும் அடங்குவர். மேலும் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 5 பேர், அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த 11 பேர், அம்மாப்பேட்டையை சேர்ந்த 4 பேர், தஞ்சையை சேர்ந்த 3 பேரும் அடங்குவர்.

இவர்களில் கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபரான கும்பகோணத்தை சேர்ந்த சமையல் தொழிலாளி உள்பட 18 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பினர். மீதம் உள்ள 37 பேருக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மேலும் 6 பேர் வீடு திரும்பினர்

இந்த நிலையில் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த 3 பேர், திருவையாறு பகுதியை சேர்ந்த ஒருவர், கும்பகோணம் பகுதியை சேர்ந்த 2 பேர், என 5 ஆண்கள், ஒரு பெண் உள்பட 6 பேர் நேற்று குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 31 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்

குணம் அடைந்தவர்களுக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் குமுதா லிங்கராஜ் மற்றும் டாக்டர்கள் பழங்கள் மற்றும் குணம் அடைந்ததற்கான சான்றிதழ் வழங்கி வழியனுப்பி வைத்தனர். மேலும் குணம் அடைந்து வீடு செல்லும் 6 பேரும் தொடர்ந்து 14 நாட்கள் அவரவர் இல்லத்தில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

111 பேர் காத்திருப்பு

காய்ச்சல், சளி, இருமல் ஆகிய அறிகுறிகளுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ராஜா மிராசுதார் மருத்துவமனையிலும், செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியிலும் தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் சிகிச்சை பெற்ற 2 ஆயிரத்து 946 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2,780 நபர்களுக்கு அறிகுறி இல்லை என தெரிய வந்துள்ளது. 111 நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

திருவாரூர்

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 பேர், நாகை மாவட்டத்தை சேர்ந்த 21 பேர் என மொத்தம் 38 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் நேற்று திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், நாகை மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 6 பேர் முழுவதுமாக குணம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 6 பேரும் நேற்று ஆம்புலன்ஸ் மூலமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

டாக்டர்கள் உற்சாகம்

முன்னதாக 6 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் வெளி நோயாளிகள் பிரிவு முன்பு தனித்தனியாக அமர வைக்கப்பட்டு இருந்தனர். அப்போது அவர்களிடம், 14 நாட்களுக்கு தனிமையில் இருக்கும்படி மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் அறிவுறுத்தினார். இதையடுத்து அவருடைய தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள் உற்சாகமாக கைத்தட்டி அவர்களை வழியனுப்பி வைத்தனர். திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 15 பேர், நாகை மாவட்டத்தை சேர்ந்த 17 பேர் என மொத்தம் 32 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad