மதுரையில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் உள்பட 4 பேருக்கு கொரோனா; சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் தப்பி ஓட்டம்

மதுரையில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் உள்பட 4 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 60 ஆக உயர்வு
மதுரையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் உள்பட 4 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 56 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 28 பேர் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ளவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

மேலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு அறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மதுரையை சேர்ந்த மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் மதுரை மேலமாசி வீதியை சேர்ந்த 38 வயது நபர், மற்றொருவர் செல்லூர் பகுதியை சேர்ந்த 21 வயது நபர். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து நோய் தொற்று பரவியதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.மற்ற 2 பேரும் காவல்துறையை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் தெற்குவாசல் போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அவருக்கு வயது 51. மற்றொருவர் போக்குவரத்து பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.

இவர்கள் 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணியில் ஈடுபட்ட போது இவர்களுக்கு கொரோனா பரவி இருக்கலாம் என தெரியவருகிறது.

நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 4 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து அவர்கள் வசித்த செல்லூர், மேலமாசி வீதி, பழங்காநத்தம், பெருங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டன. மேலும் சுகாதார துறையின் மூலம் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பை சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதுபோல் காவல் நிலையத்தில் அவர்களுடன் பணியாற்றிய சக போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மேலவாசல் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுபோல் போலீஸ் நிலையத்தை சுற்றிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மதுரையில் போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இதையடுத்து தற்போது மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது.

போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று: குனியமுத்தூர் போலீஸ் நிலையம் மூடப்பட்டது
ஊரடங்கு பாதுகாப்பு பணியை மேற்கொண்ட கோவை நகர தெற்கு பகுதியை சேர்ந்த 6 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 3 பேர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிபவர்கள். இவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக அங்கு பணியாற்றிய காவலர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வலியுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், போத்தனூர் போலீஸ் நிலையம் சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் போத்தனூர் போலீஸ் நிலையம் தற்காலிகமாக செயல்படுகிறது. 6 போலீஸ்காரர்களில் ஒருவர் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றியவர். ஒருவர் ஆயுதப்படை, ஒருவர் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணியாற்றியவர்கள்.

குனியமுத்தூர் போலீஸ்நிலையத்தில் பணியாற்றிய போலீஸ்காரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அந்த போலீஸ் நிலையம் மாநகர் போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி நேற்று மூடப்பட்டது. தற்போது குனியமுத்தூர் போலீஸ்நிலையம் கோவைப்புதூர் பிரிவில் உள்ள குமரன் மகாலில் தற்காலிகமாக செயல்படுகின்றது. அங்கு பணியாற்றிய 60 போலீஸ்காரர்களுக்கும் நேற்று கொரோனா மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

கொரோனா தொற்று காரணமாக போத்தனூர் போலீஸ் நிலையத்தை தொடர்ந்து போலீஸ் நிலையமும் மூடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் தப்பி ஓட்டம்
சென்னையில் உள்ள ஓமந்தூரார் மற்றும் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சைக்கு பயந்து தப்பி ஓடி விட்டனர்.

சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் 50-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இங்கு தினசரி 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் சிந்தாதிரிப்பேட்டை வெல்லர் சாலையை சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவருக்கு சளி, இருமல் இருந்ததால், அவர் கொரோனா பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை டாக்டர்கள் பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வாலிபரின் சளி மாதிரிகளை எடுத்து டாக்டர்கள் பரிசோதனைக்கு அனுப்பி, ஆஸ்பத்திரியின் 2-வது கட்டடத்தின் 3-வது மாடியில் அவரை அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென அந்த வாலிபர் மருத்துவமனையில் இருந்து மாயமானார். அவரை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் மற்றும் போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் அந்த வாலிபர் சிகிச்சைக்கு பயந்து ஓடி விட்டதாகவும், தற்போது அவரை போலீசார் பிடித்து ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளதாகவும், மீண்டும் அவர் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவார் என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் பரிசோதனை முடிவு வந்த பிறகு தான் அவருக்கு கொரோனா தொற்று குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதேபோல் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் திடீரென ஆஸ்பத்திரியில் இருந்து மாயமானார்.

அந்த முதியவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைக்கு பயந்து அந்த முதியவர் ஓடிவிட்டதாகவும், அவரை தற்போது தேடும் பணியில் சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த முதியவர் வெளியே எங்கும் செல்லாமல் மருத்துவமனையின் வளாகத்தில் உள்ளே மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்ததை கண்ட மருத்துவமனை போலீசார், அவரை பிடித்து வார்டில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் சென்னையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா பாதித்த லாரி டிரைவருடன் பயணித்தவர்: ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் மாற்று டிரைவருக்கு சிகிச்சை
கொரோனா பாதித்த லாரி டிரைவருடன் பயணித்த மாற்று டிரைவருக்கு, ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட லாரி டிரைவருடன் தொடர்பில் இருந்த மாற்று டிரைவர் திருவண்ணாமலையில் மீட்கப்பட்டார். அவருக்கு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எலவடை கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதை கண்டறிந்த மருத்துவ அதிகாரிகள் அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து விசாரித்தனர். இந்த நிலையில் அவருடன் மாற்று டிரைவராக தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள நரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஒரு டிரைவர் சென்றது தெரியவந்தது.

இதற்கிடையில் அந்த மாற்று டிரைவர் மாயமானார். அவரை அதிகாரிகள் தேடி வந்தனர். அவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா தானிப்பாடி கிராமத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கண்டுபிடித்த அதிகாரிகள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என கண்டறிய மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இதன் முடிவிலேயே அவருக்கு கொரோனா உள்ளதா? இல்லையா? என தெரியவரும். இதற்கிடையே தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இவரை, திருவண்ணாமலை மாவட்டத்தில் மீட்ட நிலையில், ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு விட்டு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மாற்று டிரைவரின் ஆதார் அட்டை உள்ளிட்டவை தர்மபுரியில் இருப்பதாகவும், இந்த நிலையில் அவரை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் விட்டு சென்றதாகவும் பொதுமக்கள் சிலர் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தர்மபுரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட லாரி டிரைவருடன் உடன் இருந்த மற்றொரு டிரைவர் இன்று(நேற்று) ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. முடிவுகள் வரவில்லை. அவர் கடைசியாக கடந்த 3-ந் தேதி பர்கூர் வந்து சென்றுள்ளார்.

ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரும் ஒருவரை நமது மாவட்டம் இல்லை என்றாலும், அவரை அலைக்கழிப்பது முறையல்ல. அவருக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. அவருக்கு தேவையான சிகிச்சை அளிப்பதற்கும், தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

புளியங்குடியில் பெண்கள் உள்பட மேலும் 5 பேருக்கு கொரோனா - தென்காசியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆக உயர்வு
புளியங்குடியில் 4 பெண்கள் உள்பட மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் தென்காசி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ளது.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நேற்று முன்தினம் வரை 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

புளியங்குடியில் நோய் தொற்று அதிகமாக காணப்படுவதால் நகர் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தொற்று மேலும் பரவாமல் தடுக்க நகரசபை சுகாதார ஊழியர்கள் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகள் முற்றிலுமாக ‘சீல்‘ வைக்கப்பட்டு உள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டு உள்ள பகுதிகள் மற்றும் புளியங்குடி நகரின் அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு பணிகளில் காவல்துறையினர், நகரசபை ஊழியர்கள், சுகாதாரத்துறையினர், வருவாய் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் 5 பேருக்கு கொரோனா

இந்த நிலையில் நேற்று முன்தினம் பலரது சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதில் 4 பெண்கள் உள்பட 5 பேருக்கு நோய் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையடுத்து புளியங்குடியில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30-ல் இருந்து 35 ஆக அதிகரித்து உள்ளது. இதன்மூலம் தென்காசி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து இருக்கிறது. இதையொட்டி புளியங்குடி நகர் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad