Matrimony OTT-Platforms Jobs Coupons Business

ஈரோடு மாவட்டத்தில் மளிகை கடைகளுக்கு வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் மளிகை கடைகளுக்கு வாரத்தில் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று கலெக்டர் சி.கதிரவன் அறிவித்து உள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க காலை நேரத்தில் மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை மளிகை கடைகள், காய்கறி மார்க்கெட்டுகள், பால் விற்பனை நிலையங்கள் போன்றவை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

சில கடைகளில் கூட்ட நெரிசல் அதிகரித்து வருகிறது. ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் பொதுமக்கள் நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கி சென்றனர். மேலும் அத்தியாவசிய பொருட்களை வாங்க தினமும் பொதுமக்கள் வெளியே வந்த வண்ணம் உள்ளனர். எனவே வாரத்தில் 3 நாட்களுக்கு மளிகை கடைகளுக்கு விடுமுறை அளித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறிதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி பேக்கரிகள் திறக்க தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மளிகைக்கடை, காய்கறி மார்க்கெட் ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் தினமும் வந்து பொருட்களை வாங்கி செல்கிறார்கள். அங்கு சமூக இடைவெளி கடைபிடிப்பதில் கவனம் செலுத்துவதில்லை.

அத்தியாவசிய பொருட் களை வாங்க வேண்டுமென்ற காரணத்தை கூறி தினமும் சிலர் வெளி வருகிறார்கள். எனவே பொதுமக்கள் தினமும் கடைகளுக்கு செல்வதை தவிர்க்க ஞாயிற்றுக்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை என வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு முடியும் வரை நடைமுறையில் இருக்கும். பொதுமக்கள் முன்எச்சரிக்கையாக தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்து கொள்ளவும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக காஞ்சீபுரம் நகராட்சி 5 மண்டலங்களாக பிரிப்பு - மாவட்ட கலெக்டர் பொன்னையா தகவல்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக காஞ்சீபுரம் நகராட்சி 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்களின் அவசர தேவைக்கு கட்டுப்பாட்டு அறை ‘வாட்ஸ்-அப்’ எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் நகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. அதில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிப்புக்குள்ளான 22, 24, 25, 28, 29, 32, 33, 34 மற்றும் 36 ஆகிய 9 வார்டுகள் மாவட்ட நிர்வாகத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த பகுதியில் செயல்பட்டு வந்த ராஜாஜி சந்தை மற்றும் ரெயில்வே சாலையில் செயல்பட்டு வந்த மளிகை கடைகள் வையாவூர் மற்றும் ஓரிக்கை பகுதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தால் காஞ்சீபுரம் நகராட்சியின் மூலம் அண்ணா அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறையின் மூலம் நடமாடும் காய்கறி கடைகள், மளிகை பொருட்கள், பொது சுகாதார தூய்மை பணிகள், குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை அடைப்புகள் போன்ற அடிப்படை வசதிகள் உடனுக்குடன் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீதமுள்ள 42 வார்டுகளும் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

42 வார்டுகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அவசர தேவைகளுக்காக பொதுமக்கள் சென்றுவர ஒவ்வொரு வார்டுகளிலும் தற்காலிக வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

5 மண்டலங்களாக பிரிப்பு

அதன்படி 42 வார்டுகளிலுள்ள குடியிருப்புகள் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலமும் ஒரு பாதுகாக்கப்பட்ட மண்டலமாக செயல்படும். ஒவ்வொரு மண்டலங்களிலும் உள்ள மளிகை கடைகள், மருத்துவமனைகள், இறைச்சி கடைகள், பால், தண்ணீர் கேன் கடைகள் மற்றும் ஏ.டி.எம். மையங்கள் இருக்கும் இடம் ஆகியவை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் தினமும் வெளியில் சென்று பொருட்கள் வாங்கி வர வெள்ளை நிற அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் தங்களின் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வீட்டைவிட்டு ஒரு முறை மட்டும் வெளியில் சென்றுவர இளஞ்சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை, ஆரஞ்சு ஆகிய 5 நிற அட்டைகள் தயாரிக்கப்பட்டு ஒரு குடும்பத்துக்கு தலா ஒரு அட்டை வீதம் வழங்கப்படவுள்ளது. அட்டையில் குறிப்பிட்ட கிழமைகள் தவிர பிற நாட்களில் வீட்டைவிட்டு வெளியில் செல்ல அனுமதி இல்லை.

கட்டுப்பாட்டு அறை

பொதுமக்கள் தங்கள் வார்ட்டினை உள்ளடக்கிய மண்டல பகுதிக்குள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர். ஒரு மண்டல பகுதியில் இருந்து வேறு மண்டல பகுதிக்கு சென்று வர அனுமதி இல்லை. தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தங்களது மண்டல பகுதியிலேயே வாங்கிக் கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் மருத்துவ சேவை போன்ற மிகமுக்கியமான, இன்றியமையாத தேவைகளுக்கு அட்டையில் தெரிவிக்கப்பட்டுள்ள அந்தந்த மண்டல கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்-அப் எண்களை தொடர்பு கொண்டால் உடனடியாக நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அவசர பயணச்சீட்டு வாங்க குவிந்த பொதுமக்கள் - கலெக்டர் கண்டிப்பு
வெளியூர் செல்வதற்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்ததால், தேவையின்றி அவசர பயணச்சீட்டு வாங்க வரக்கூடாது என்று கலெக்டர் வீரராகவ ராவ் கண்டித்தார்.

நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவின்படி அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதால் அவசர அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் செல்ல அவசர அனுமதி பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. மாநில அரசின் அறிவுறுத்தலின்படி இறப்பு, மருத்துவம் போன்றவைகளுக்கு மட்டும் இந்த சிறப்பு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி மாவட்டத்தில் மேற்கண்ட கோரிக்கைகளுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் இலவச அனுமதி பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இலவச அனுமதி பயணச்சீட்டு வழங்கக்கோரி ஏராளமானோர் விண்ணப்பங்களுடன் குவிந்தனர். இதை அறிந்து அங்கு வந்த கலெக்டர் வீரராகவ ராவ், ஒவ்வொருவரிடமும் விண்ணப்பிப்பதற்கான காரணங்களை விசாரித்தார். அப்போது ஒருசிலர் வெளியூரில் உடல்நிலை சரியில்லாதவர்களை பார்க்க செல்ல வேண்டும், பேரன்-பேத்திகளுக்கு எங்களை பார்க்காமல் உடல்நிலை பாதிக்கப்படுகிறது, எங்களை பார்க்க வேண்டும் என்று அழுகின்றனர், மகள்-மகனை பார்க்க செல்ல வேண்டும் என்று உடல்நிலை சரியில்லாதது போன்ற காரணங்களை கூறினர்.

இதனை கேட்ட கலெக்டர் வீரராகவ ராவ் மக்கள் நலனுக்காகத்தான் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் என்ன காரணத்திற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். முக்கிய உறவினர் இறப்பு, அவசர மருத்துவ பரிசோதனை போன்றவற்றிற்காக மட்டுமே இந்த சிறப்பு அனுமதி பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. இதுபோன்ற தவிர்க்க கூடிய தருணங்களில் நீங்களாகவே தவிர்த்து உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும் நோய் பரவாமல் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும். நாம் இவ்வாறு தேவையின்றி செல்வதால் நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர வேண்டும்.

இதுபோன்ற ஊரடங்கு சமயத்தில் இலவச அனுமதி பயணச்சீட்டு வாங்கி செல்வதை தங்களின் செல்வாக்காக காட்டிக்கொள்ள நினைக்கக்கூடாது. எனவே சின்ன சின்ன காரணங்களுக்கு எல்லாம் பயணச்சீட்டு கேட்டு வரக்கூடாது என்று கண்டித்தார். மேலும் அங்குள்ள அலுவலர்களிடம் மருத்துவம், இறப்பு போன்ற காரணங்களை தவிர பிற காரணங்களுக்கு பயணச்சீட்டு வழங்கக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவிட்டார்.

சிவகங்கையில் கொரோனா நோயாளிகள் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்
சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த 6 பேர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற வந்த சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் பூரண குணமடைந்ததால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர். அவர்களை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவமனை டீன் ரத்தினவேல் ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது;-

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இது போல் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர். இவர்களில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும் பூரண குணம் அடைந்தனர். இதையொட்டி அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது சிவகங்கை மருத்துவமனையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும், ராமநாத புரம் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவ கண்காணிப்பில் இருந்த 41 பேரில், ஏற்கனவே 21 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் மேலும் 17 பேர் மருத்துவ பரிசோதனைக்குபின் நலமுடன் உள்ளதால் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். இன்னும் 3 பேர் மட்டுமே மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மருத்துவ கண்காணிப்பு அலுவலர் டாக்டர் மீனாள், துணை இயக்குனர் யசோதாமணி, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் 18 பேரும் நல்ல நிலையில் உள்ளனர் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 18 பேரும் நல்ல நிலையில் உள்ளனர் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 26 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் ஏதேச்சையாக சந்தித்தவர்கள் போன்று குறைந்த தொடர்பு உடையவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு உள்ளது.

அவர்களில் இதுவரை சுமார் 400 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளில் மே மாதம் 3-ந் தேதி வரை தொடர்ந்து கிருமி நாசினி தெளிப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும், காய்ச்சல், சளி, இருமலுடன் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

மத்திய அரசு தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள சிறு, குறு தொழில்கள் தொடங்க அனுமதி அளித்து உள்ளது. அதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 2 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மற்ற 18 பேரும் நல்ல நிலையில் உள்ளனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் - முககவசம் அணியாவிட்டால் ரூ.100 விதிக்கப்படும்
திருப்பூர் மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதமும், முக கவசம் அணியாவிட்டால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை முற்றிலும் தடுத்திடும் வகையில் சமூக தனிமைப்படுத்துதலை தீவிரப்படுத்தும் வகையில் தமிழக அரசு உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக சந்தைகள், மளிகை கடைகள், பழக்கடைகள், மருந்தகங்கள், இறைச்சி கடைகளில் கூடும் பொதுமக்கள் போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

பொது இடங்களில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். அவ்வாறு முக கவசம் அணியாவிட்டால் அவர்களுக்கு ரூ.100 உடனடி அபராதம் விதிக்கப்படும். அதுபோல் பொது இடங்களில் எச்சில் துப்பினால் அவர்களுக்கு உடனடியாக ரூ.500 அபராதம் மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி துறை அதிகாரிகளால் விதிக்கப்படும். இந்த நடவடிக்கை இன்று (வியாழக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது.

திருப்பூர் மாவட்ட மக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். மேற்கண்ட தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad