Matrimony OTT-Platforms Jobs Coupons Business

ராயபுரம் மண்டலம் முதலிடம்: சென்னையில் 373 பேர் கொரோனாவால் பாதிப்பு - இதுவரை 8 பேர் பலி; கொரோனா வார்டில் இருந்து தப்பி ஓடிய பெண்;

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 373 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ராயபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 1,629 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 662 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


சென்னையை பொறுத்தவரை பெண்கள் 33.87 சதவீதமும், ஆண்கள் 66.13 சதவீதமும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா வைரஸ் 30 வயது முதல் 39 வயதினரை அதிகம் குறிவைக்கிறது. அடுத்ததாக 20 முதல் 29 வயதினரும், 40 முதல் 59 வயதினரும் அடுத்தடுத்ததாக பாதிக்கப்பட்டுள்ளன.

9 வயது வரை உள்ள குழந்தைகள் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 80 வயதுக்கு மேல் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராயபுரம் முதலிடம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரம் மண்டலம் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. அதிகபட்சமாக ராயபுரத்தில் 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பத்தூர் நேற்று முன்தினம் தனது முதல் கணக்கை தொடங்கியதையடுத்து, மணலி மண்டலமும் நேற்று தனது முதல் கணக்கை தொடங்கியுள்ளது. இந்த 2 மண்டலங்களிலும் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் திருவொற்றியூர் மண்டலத்தில் 13 பேரும், மாதவரம் மண்டலத்தில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

8 பேர் இறப்பு

இதேபோல் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 46 பேர், திரு.வி.க நகர் மண்டலத்தில் 45 பேர், அண்ணாநகர் மண்டலத்தில் 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேனாம்பேட்டை மண்டலத்தில் 44 பேர், கோடம்பாக்கம் மண்டலத்தில் 36 பேர், வளசரவாக்கம் மண்டலத்தில் 10 பேர், ஆலந்தூர், அடையாறு மண்டலங்களில் தலா 7 பேர், பெருங்குடி மண்டலத்தில் 8 பேர், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வேறு மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் சென்னையில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளார். இதுவரை சென்னையில் கொரோனா தொற்றுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆகும். மேலும் 103 பேர் பூரணமாக குணமடைந்து சென்னை மண்டலத்தில் வீடு திரும்பியுள்ளனர்.

செந்துறை அருகே சிறுவன் உள்பட 2 பேருக்கு கொரோனா
செந்துறை அருகே 12 வயது சிறுவன் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று

அரியலூர் மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டிற்கு 5 பேர் சென்று வந்தனர். இதில் செந்துறையை சேர்ந்த ஒருவர் மருந்து கடை நடத்தி வருகிறார். அவரை ஏற்கனவே மருத்துவ குழுவினர் அரியலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சோதனை மேற்கொண்டனர். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் அவரது மருந்து கடையில் வேலை பார்த்த ஊழியர்களை பரிசோதனை செய்தனர். அவர்களில் செந்துறையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், ராயம்புரம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

2 பேர் பாதிப்பு

அதனை தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ராயம்புரம் கிராமத்தை சேர்ந்த பெண்ணின் எதிர்வீட்டில் வசித்த 12 வயது சிறுவனுக்கும், பக்கத்து தெருவில் உள்ள 36 வயது கூலித்தொழிலாளிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு குழுவினர் அவர்கள் 2 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். மேலும் அவர் களுடன் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களின் ரத்த மாதிரிகளையும் பரிசோதனைக்கு எடுத்து சென்ற னர். இது அப்பகுதி மக்கள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரிசோதனைக்காக நாகர்கோவிலில் வியாபாரிகள் 125 பேரின் சளி மாதிரி சேகரிப்பு
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலைய வியாபாரிகள் 125 பேருக்கு கொரோனா பரிசோதனைக்கான சளி சேகரிக்கப்படுகிறது.

125 வியாபாரிகள்

நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தை ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டுள்ளது. இதனால் வடசேரி பஸ் நிலையம், சந்தையாக மாற்றப்பட்டது. இந்த சந்தையில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை காய்கறிகள் மற்றும் பழ வகைகள், மளிகை பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. சுமார் 125 வியாபாரிகள் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.


நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் வடசேரி பஸ் நிலைய வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்கிச் செல்கிறார்கள். இதனால் அவர்கள் மூலமாக தங்களுக்கு கொரோனா வைரஸ் பரவி விடுமோ? என்ற அச்சத்துடனேயே வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து வியாபாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி மொத்தம் உள்ள 125 வியாபாரிகளுக்கு மதியத்துக்கு பிறகு அதாவது அவர்கள் விற்பனையை முடித்தபிறகு இரண்டு நாட்கள் கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகளை சேகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டனர்.

முதல் நாளில்...

அதன்படி முதல் நாளான நேற்று நாகர்கோவில் வடசேரி நகர்நல மையத்தில் வியாபாரிகளிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அப்போது நகர்நல மைய டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சளி மாதிரி சேகரிக்க பிரத்யேக கூண்டு அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்தபடி வியாபாரிகளிடம் தொண்டை மற்றும் மூக்கு பகுதிகளில் இருந்து சளி மாதிரிகளை சேகரித்தனர். நேற்று மட்டும் 60 வியாபாரிகளிடம் இருந்து சளி சேகரிக்கப்பட்டதாக மாநகர நகர்நல அதிகாரி கின்சால் தெரிவித்தார்.

பின்னர் அந்த சளி மாதிரிகள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள கொரோனா பரிசோதனை ஆய்வகத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன. 2-வது நாளாக இன்று (வியாழக்கிழமை) மீதமுள்ள வியாபாரிகளிடம் இருந்தும் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட உள்ளன.

ஓசூர் அரசு ஆஸ்பத்திரி: கொரோனா வார்டில் இருந்து தப்பி ஓடிய பெண்
ஓசூர் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் இருந்து தப்பி ஓடிய பெண்ணை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காளேகுண்டா பகுதியை சேர்ந்த 40 வயது பெண் நேற்று முன்தினம் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார்.

அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதை அறிந்தனர். இதையடுத்து அவர் அங்குள்ள கொரோனா சிறப்பு வார்டில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அன்று மாலை அந்த பெண் திடீரென கொரோனா வார்டிலிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் ஓசூர் போலீசாரின் உதவியுடன் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பெண் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி வீட்டுக்கு சென்றது தெரியவந்தது. பின்னர், போலீசார் அவரை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இச்சம்பவம், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு ஆஸ்பத்திரி பணியாளர்கள் உள்பட மேலும் 4 பேருக்கு கொரோனா - மதுரையில் பாதிப்பு எண்ணிக்கை 50-ஆனது
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் பணியாளர்கள் உள்பட 4 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50-ஆனது.

மதுரையை பொறுத்தமட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிறப்பு வார்டு உள்ளது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 46 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இவர்களில் 27 பேர் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதம் உள்ளவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு அறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களது ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது.

2 தினங்களாக மதுரையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில் நேற்று மதுரையை சேர்ந்த மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அவர்களில் ஒருவர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர். மற்றொருவர் 68 வயதுடைய வண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் வெளியூர் சென்று வந்ததாக எந்த தகவலும் இல்லை. இருப்பினும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரியவருகிறது. அதன் மூலம் இவர்கள் 2 பேருக்கும் தொற்று பரவியிருக்கலாம் என சுகாதாரத் துறையினர் சந்தேகிக்கின்றனர். அதன்பேரில் அவர்கள் சென்று வந்த இடங்கள் குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதுபோல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மதுரை ராஜாக்கூர் மற்றும் கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ஏற்கனவே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய ஒப்பந்த பணியாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, மருத்துவ பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 4 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து இவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் சீல் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. மேலும் சுகாதார துறையின் மூலம் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பை சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இவர்கள் 4 பேரையும் சேர்த்து, மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50-ஆனது.

இதற்கிடையே மதுரை கள்ளந்திரி பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து நேற்று பூரண குணமடைந்ததைத் தொடர்ந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவர் 15 நாட்களுக்கு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார். இதனால் குணமானவர்கள் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்தது.

சேந்தமங்கலம் அருகே கொரோனா பாதித்தவர் வந்து சென்ற 2 தெருக்களுக்கு ‘சீல்’
சேந்தமங்கலம் அருகே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வந்து சென்ற 2 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் 2 மருந்து கடைகளை மூடவும் கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி மேற்கு வீதியை சேர்ந்த ஒருவரின் உறவினரான 32 வயதுடைய இன்சூரன்ஸ் அலுவலருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதியானது. முன்னதாக அவர் காளப்பநாயக்கன்பட்டிக்கு வந்து சென்றது தெரியவந்தது.


இதையடுத்து நேற்று முன்தினம் அந்த பகுதியில் கிருமி நாசினி வீடு, வீடாக தெளிக்கப்பட்டது. அங்கு வசித்து வருபவர்களுக்கு மருத்துவ குழுவினர் தீவிர பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக அங்கு 2 தெருக்கள் உடனடியாக மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது.

இதையடுத்து அங்குள்ள 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் வெளியே செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு பால், காய்கறிகள், அரிசி, சமையல் பொருட்கள் போன்றவற்றை பேரூராட்சி பணியாளர்கள் வாகனத்தில் கொண்டு சென்று வழங்கி வருகின்றனர்.

இதற்கிடையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் அங்குள்ள மருந்து கடை ஒன்றிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலுடன் சென்று உள்ளார். அப்போது கடை உரிமையாளர் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தன்னிச்சையாக மாத்திரை கொடுத்து உள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறைக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. இந்த தகவல் தற்போது வருவாய்த்துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் காளப்பநாயக்கன்பட்டி பகுதியில் திடீர் ஆய்வு செய்த கலெக்டர் மெகராஜ், அந்த மருந்து கடை உள்பட 2 மருந்து கடைகளுக்கு ‘சீல்‘ வைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைகுமார் முன்னிலையில் நேற்று மருந்து கடைகளுக்கு வருவாய்த்துறையினர் ‘சீல்’ வைத்தனர். இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் சென்று வந்த ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து கொல்லிமலைக்கு செல்லும் பிரதான சாலை மூடப்பட்டதால் அப்பகுதியில் வழக்கமாக இயங்கி வந்த காய்கறி கடை, மருந்து கடை, பலசரக்கு கடை அனைத்தும் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை மாவட்டத்தில்மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54 ஆக உயர்வு
தஞ்சை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ்

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில், மாவட்டத்திலேயே முதன் முதலில் பாதிக்கப்பட்ட கும்பகோணத்தை சேர்ந்த சமையல் தொழிலாளி குணம் அடைந்ததால் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நேற்று முன்தினம் 3 பேர் குணம் அடைந்ததை தொடர்ந்து அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த 25 வயதான ஆண், அதிராம்பட்டினத்தை சேர்ந்த 36 வயதான ஆண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒரத்தநாடு நெய்வாசல் பகுதியை சேர்ந்த 29 வயதான பெண், 34 வயதான பெண், 45 வயதான பெண் ஆகிய 3 பெண்களுக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் 3 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

54 ஆக உயர்வு

இவர்கள் 5 பேரும் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்களை சந்தித்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக 14 பேர் அனுமதி

இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டோர் சிகிச்சை பிரிவில் சளி, இருமல், தொடர் காய்ச்சல் காரணமாக 14 பேர் நேற்று சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு தொண்டை சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கான முடிவுகள் விரைவில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் 7 பேர் செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்திலுள்ள கொரோனா தடுப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடி சென்று வந்த 2 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
சங்கரன்கோவில் லெட்சுமியாபுரம் பகுதியை சேர்ந்த 2 பேர் ஒரு மோட்டார்சைக்கிளில் நேற்று முன்தினம் புளியங்குடியில் துக்க வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளனர்.

இதனை அறிந்த நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) முகைதீன்அப்துல்காதர் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் பாலசந்தர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் நேற்று அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கு தனிமைப்படுத்துதல் நோட்டீசை ஒட்டி அவர்களை தனிமைப்படுத்தினர். பின்னர் அவர்களது வீடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதி தீவிர கண்காணிப்பில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புளியங்குடியில் இருந்து முள்ளிக்குளம் வழியாக சங்கரன்கோவிலுக்கு வரும் பிரதான சாலையை தவிர திருவேட்டநல்லூர், பாம்புக்கோவில் சந்தை, நொச்சிகுளம் வழித்தடம், புன்னையாபுரம், ராமசாமியாபுரம், வீரசிகாமணி வழித்தடம், சிந்தாமணி, சுப்பிரமணியபுரம், தாருகாபுரம், மலையடிக்குறிச்சி, அச்சம்பட்டி வழியாகவும் பாதை உள்ளது.

இந்த வழிகளில் அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் சிலர் வந்து செல்வதாகவும், எனவே போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலோசனை கூட்டம்

இதனிடையே சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடிக்கு செல்லும் பாதைகளில் பாதுகாப்பை தீவிரப்படுத்த அமைச்சர் ராஜலட்சுமி தலைமையில் ஆலோனை கூட்டம் நேற்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. உதவி கலெக்டர் முருகசெல்வி, நகராட்சி ஆணையர் முகைதீன் அப்துல்காதர், சுகாதார அலுவலர் பாலசந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், சோதனை சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு 3 ஷிப்டுகளாக வருவாய் துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

கொரோனா பரவும் வேகம் குறைந்து வருகிறது: நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இதுவரை 35 பேர் ‘டிஸ்சார்ஜ்’
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவும் வேகம் குறைந்து வருகிறது. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் ‘டிஸ்சார்ஜ்‘ ஆகி உள்ளனர். தூத்துக்குடியில் 8 பேர் வீடு திரும்பினர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு வருகிற 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட இடங்களில் சுகாதாரப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலப்பாளையம் பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருந்ததால், அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஊருக்குள் செல்லும் சாலைகள் அடைக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம், என்.ஜி.ஓ. காலனி, நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகர், நெல்லை டவுன், பேட்டை, பாளையங்கோட்டை சிவன் கோவில் தெரு, கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள டார்லிங் நகர் பகுதி, களக்காடு, பத்தமடை ஆகிய 9 இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

அந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நெல்லை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தினந்தோறும் சுகாதாரப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

35 பேர் ‘டிஸ்சார்ஜ்’

இந்த தொடர் நடவடிக்கையால் நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறைந்து வரு கிறது. நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிறப்பு வார்டில் 64 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்களுக்கு தனிமை வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் 35 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்‘ ஆகி உள்ளனர். இவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

மீதி உள்ள 29 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதவிர, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 31 பேருக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் 27 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் ஒரு மூதாட்டி இறந்து உள்ளார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த காயல்பட்டினம், தூத்துக்குடி, பேட்மாநகரம், ஆத்தூர் பகுதிகளை சேர்ந்த 7 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

அதே போன்று பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அய்யனாரூத்தை சேர்ந்த ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் குணமடைந்து உள்ளனர். மற்றவர்களும் வேகமாக குணமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

புதிய தொற்று இல்லை

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக புதிதாக நோய் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்படவில்லை. கொரோனா அறிகுறியுடன் ஆஸ்பத்திரிக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பரவலின் வேகம் குறைந்து உள்ளது.

இந்த நிலை நீடித்தால் விரைவில் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்குள் தூத்துக்குடி அடியெடுத்து வைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்யாறு அருகே, சுகாதார ஆய்வாளருக்கு கொரோனா அறிகுறி - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
செய்யாறு அருகே சுகாதார ஆய்வாளருக்கு கொரோனா அறிகுறி உள்ளது. அவர், திருவண்ணாமலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா முக்கூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் சுகாதார ஆய்வாளர் உள்பட சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு 20-ந்தேதி கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இந்தநிலையில் சுகாதார ஆய்வாளர் வழக்கம்போல் முக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

நேற்று காலை 11 மணியளவில் சளி, ரத்த மாதிரி பரிசோதனை முடிவில் சுகாதார ஆய்வாளருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பணியில் இருந்த சுகாதார ஆய்வாளரை திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுகாதார ஆய்வாளர் வசிக்கும் பகுதியான கீழ்மட்டை கிராமத்தில் உள்ள 7 தெருக்களுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, கிராமத்தைச் சுற்றி உள்ள 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆக்கூர் ஆரம்ப சுகாதார வட்டார மருத்துவ அலுவலர் அருண்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார ஆய்வாளரின் மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்பட உறவினர்கள் 8 பேரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறியுடன் இருக்கும் சுகாதார ஆய்வாளர், செய்யாறு மற்றும் அதைச் சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களை கண்காணிக்கும் பணியை மேற்கொண்டவர். கொரோனா தொற்று யாருக்கும் இல்லாத நிலையில் அவருக்கு எப்படி கொரோனா அறிகுறி வந்தது? எனக் கேள்வி எழுந்துள்ளது.

உடல் நலக்குறைவோ, பாதிப்போ வெளியே தெரியாத நிலையில் கொரோனா அறிகுறி உள்ளதால், சுகாதாரத் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா தொற்று அறிகுறியால் பாதிக்கப்பட்டுள்ள சுகாதார ஆய்வாளர் வருகிற 30-ந்தேதி பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad