தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 354 பேர் கைது: 120 வாகனங்கள் பறிமுதல்; திருச்சியில் பட்டப்பகலில் பயங்கரம்:பிரபல ரவுடி படுகொலை

தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 354 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 120 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகளில் கண்காணிப்பு பணியை போலீசார் மேற்கொண்டனர். ஊரடங்கை மீறி மோட்டார் சைக்கிள்களில் சென்ற பலரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதேபோல் தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்திருந்தவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக மாவட்டம் முழுவதும் நேற்று இரவு வரை 354 பேர் கைது செய்யப்பட்டனர். 120 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சாராயம் காய்ச்சியது தொடர்பாக 13 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 50 லிட்டர் சாராயமும், 265 லிட்டர் ஊறலும் பறிமுதல் செய்யப்பட்டது.

சமூக வலைத்தளத்தில் குழந்தைகள் ஆபாச படங்களை பதிவிட்ட வாலிபர் கைது
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்-டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் ஆபாச படங்களை பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே பேஸ்புக், டிக்-டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் ஆபாச படங்கள் பதிவிட்டு இருந்ததை திண்டுக்கல் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டுபிடித்தனர். உடனே இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் அவர்கள் புகார் அளித்தனர். அவரது உத்தரவின்பேரில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நிலக்கோட்டை அருகே நோட்டகாரன்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 27) என்பவர், தனது உறவினரின் பெயரில் வாங்கப்பட்ட செல்போன் எண்ணை பயன்படுத்தி, பேஸ்புக், டிக்-டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் ஆபாச படங்களை பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து ராமமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது பேஸ்புக் நண்பரான சேலம் மாவட்டம் பனமரத்துபட்டியை சேர்ந்த வாலிபர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருச்சியில் பட்டப்பகலில் பயங்கரம்:பிரபல ரவுடி படுகொலை துண்டித்த தலையுடன் அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் போலீசில் சரண்
ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடி பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். துண்டித்த தலையுடன் சென்று அண்ணன், தம்பி உள்பட 3 பேர் போலீசில் சரணடைந்தனர்.

இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பிரபல ரவுடி

திருச்சி ஸ்ரீரங்கம் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன் என்ற தலைவெட்டி சந்துரு(வயது 39). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

சந்திரமோகன் நேற்று காலை தனது ஸ்கூட்டரில் 2½ வயது மகள் அபிநிதியுடன் ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் ரெயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த ஒரு கார், சந்திரமோகன் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் சந்திரமோகன், தனது குழந்தையுடன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

தலையை துண்டித்து கொலை

இது விபத்து என எண்ணிய சந்திரமோகன், தனது குழந்தைக்கு ஏதும் ஆகிவிட்டதோ என எண்ணி தூக்கினார். அப்போது காரில் இருந்து இறங்கிய 3 பேர், குழந்தையை அவரது கையில் இருந்து வாங்கி ஓரமாக வைத்து விட்டு, அக்குழந்தை கண் முன்னே சந்திரமோகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். ரத்தம் வெளியேறி அவர் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

ஆனாலும் அவர்களுக்கு ஆத்திரம் தீரவில்லை. பின்னர் அவர்களில் ஒருவர், கொலையுண்ட சந்திரமோகனின் தலையை அரிவாளால் துண்டித்து தனியே எடுத்தார். பின்னர் உடலை மட்டும் மேம்பாலத்திலேயே போட்டு விட்டு, தலையை எடுத்து தாங்கள் வந்த காரின் முன்புற சீட்டின் கீழ் வைத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்திற்கு சென்று மூவரும் சரணடைந்தனர்.

போலீசில் சரண்

ரத்தம் சொட்ட, சொட்ட துண்டித்த மனித தலையுடன் 3 பேர் போலீஸ் நிலையத்திற்கு வந்ததை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் சந்துருவை கொன்று தலையை கொண்டு வந்திருப்பதாக தெரிவித்து சரண் அடைந்தனர். இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் ஸ்ரீரங்கம் ரெயில்வே டிரைனேஜ் தெருவை சேர்ந்த சுரேஷ் (35), அவரது தம்பி சரவணன் (30) மற்றும் இவர்களது சித்தப்பா மகன் செல்வகுமார் (25) என்று தெரியவந்தது.

முன்விரோதம்

இவர்களில் சரவணன் வழக்கு ஒன்றில் சிக்கி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டில் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார். அப்போது கோர்ட்டுக்கு வந்த ரவுடி சந்திரமோகன், ‘நீ என்ன ஸ்ரீரங்கத்தில் என்னைவிட பெரிய ஆளா? ஒழுங்காக இருக்காவிட்டால் உன் தலையை வெட்டி வீசிவிடுவேன் என சரவணனை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில், தன்னை தீர்த்து கட்டுவதற்குள் முந்திக்கொண்டு, தனது தம்பிகளுடன் சேர்ந்து சந்திரமோகன் தலையை வெட்டி துண்டாக்கி படுகொலை செய்ததாக சரவணன் போலீசில் தெரிவித்துள்ளார்.

பரபரப்பு

பின்னர் மேம்பாலத்தில் கிடந்த தலை இல்லாத உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகள் வந்த கார் மற்றும் கொலையுண்டவரின் ஸ்கூட்டர் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன் வழக்குப்பதிந்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

ஊரடங்கு நேரத்தில், ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரதட்சணை கொடுமையால் திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தற்கொலை - போலீஸ்காரர் மீது போலீசில் புகார்
வரதட்சணை கொடுமையால் திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ்காரர் மீது இளம்பெண்ணின் தாய் புகார் செய்து உள்ளார்.

மீஞ்சூரை அடுத்த வல்லூரில் உள்ள வடசென்னை அனல் மின்நிலைய குடியிருப்பில் வசிப்பவர் வெற்றிச்செல்வன். இவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்களுடைய மகள் பத்மபிரியா(வயது 24). இவர்களுக்கு திவ்யபிரகாஷ்(22) என்ற மகனும் உள்ளார்.

பத்மபிரியாவுக்கும், மேலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம்(25) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. ராஜாராம், ஆவடி 5-வது பட்டாலியனில் போலீஸ்காரராக உள்ளார். ராஜாராம், தனது மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் பத்மபிரியா, கணவருடன் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த பத்மபிரியா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரி, இதுபற்றி மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார்.

அதில், திருமணமான 2 மாதத்தில் எனது மகளிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு ராஜாராம், அவரது குடும்பத்தினர் தகராறு செய்தனர். இதனால் எங்கள் வீட்டுக்கு வந்து தங்கி இருந்த பத்மபிரியா, தன்னை கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி ஆவடி 5-வது பட்டாலியன் கமாண்டோவிடம் புகார் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜாராம், போனில் எனது மகன் திவ்யபிரகாசை மிரட்டினார். இதனாலேயே எனது மகள் தற்கொலை செய்து கொண்டாள் என கூறி இருந்தார்.

இதுபற்றி மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் ராஜாராம் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் விசாரித்து வருகின்றனர். திருமணமான 2-வது மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

கரூர் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கரூர் மாவட்டம், நொய்யல் புன்னம்சத்திரம் அருகே உள்ள நடுப்பாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் மண்மங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரபாவதி (வயது 32). இவர் எம்.ஏ., பி.எட் படித்து முடித்து உள்ளார். இந்த தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை பிரபாவதி எழுதி உள்ளார்.

இதில் அவர் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட பிரபாவதிக்கு அவரது கணவர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறியுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரபாவதி வீட்டின் படுக்கை அறையில் தனியாக தூங்கி உள்ளார். சிவக்குமார் தனது மகளுடன் வீட்டின் உள்ளே வராண்டாவில் தூங்கினார். நள்ளிரவு நேரத்தில் பிரபாவதியின் மகள் தனது தாய் அறைக்கு சென்று கதவை தட்டியுள்ளார். பலமுறை கூப்பிட்டும் அவர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து சிவக்குமாரும் கதவை தட்டி உள்ளார். அப்போதும் பிரபாவதி கதவை திறக்கவில்லை.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் சந்தேகம் அடைந்த சிவக்குமார் வீட்டின் மேல்புறத்தை உடைத்து உள்ளே இறங்கி பார்த்துள்ளார். அப்போது பிரபாவதி மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் கதறி அழுதார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வந்து பிரபாவதியை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad