Matrimony OTT-Platforms Jobs Coupons Business

ஊரடங்கு தளர்வா, நீட்டிப்பா? மே 2ல் தமிழக அமைச்சரவை கூட்டம்; வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல அனுமதி

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீடிக்குமா? எடப்பாடி பழனிசாமி தலைமையில் மே 2-ந்தேதி அமைச்சரவை கூடி முடிவு
இந்தியாவில் கொரோனா தொற்று பரவிவிடாதபடி நாடெங்கும் கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் 14-ந்தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு உத்தரவு முடியும் நிலையில் கடந்த 11-ந்தேதி தமிழகம் உள்பட பல்வேறு மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

பின்னர், மே 3-ந்தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 27-ந்தேதி அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அவர் கேட்டறிந்தார். சில மாநிலங்கள், ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் மே 2-ந்தேதியன்று (சனிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூட உள்ளது. மே 3-ந்தேதியோடு ஊரடங்கு உத்தரவு முடியும் நிலையில், அதற்கு முந்தைய நாள் அமைச்சரவையை முதல்-அமைச்சர் கூட்டியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

மே 3-ந்தேதிக்கு பிறகான ஊரடங்கு உத்தரவு குறித்த அறிவிப்பை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. இதில் சில இனங்களில் மாநிலங்களே முடிவெடுக்க அனுமதிக்கலாமா? என்பது பற்றிய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் உத்தரவுக்கு ஏற்ப தமிழக அரசு முடிவெடுக்கும் என்று தெரிகிறது. இதற்காக அமைச்சரவை மே 2-ந்தேதி கூட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்
கை படிப்படியாக தளர்த்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட கலெக்டர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார். கொரோனா பரவும் வேகம் குறையாமல் இருப்பதால் தமிழகத்தில் மே 3ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீடிப்பதா, தொடர்வதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க மே 2ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார்.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அரசு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ளது.

இதனால் தமிழகமே ஸ்தம்பித்துள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், ரயில், பஸ், ஆட்டோ, டாக்சி, பெரிய கடைகள், தியேட்டர், சிறு, குறு தொழிற்சாலைகள் என எதுவுமே இயங்காததால் தமிழகத்தின் பொருளாதார நிலை கேள்விக்குறியாகி உள்ளது. தனியார் நிறுவன தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை இல்லாமல் சம்பளம் கிடைக்காமல் ஒரு வேளை சாப்பாட்டுக்கே அவதிப்பட்டு வருகின்றனர். தமிழக அரசு ஏப்ரல் மாதம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்கியது. மேலும் ஏப்ரல் மற்றும் மே மாதம் ரேஷன் கடைகளில் இலவச அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது. ரூ.500க்கு 19 மளிகை பொருட்கள் அடங்கிய பை வழங்கப்படுகிறது.

ஆனாலும், பெரும்பாலானவர்கள் ரேஷன் கடைகளில் வழங்கும் பொருட்களை வாங்கவில்லை. தனியார் கடைகளிலேயே பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் தினசரி கூட்டம் அதிகளவில் உள்ளது. தொழில்கள் முடங்கி உள்ளதால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமலும், தங்கள் கம்பெனிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமலும் பல தொழில் நிறுவனங்கள் கஷ்டத்தில் உள்ளன. ெபரும்பாலோனோர் வங்கிகளில் வாங்கிய கடனுக்கு இஎம்ஐ கட்ட வேண்டியுள்ளது. மத்திய அரசு வங்கிகளில் வாங்கிய கடனுக்கு 3 மாதம் இஎம்ஐ கட்ட வேண்டாம் என்று கடந்த மாதம் அறிவித்தது. ஆனால் எந்த வங்கியும் மத்திய அரசு உத்தரவை மதிக்கவில்லை.

தற்போது கட்டாவிட்டாலும், பின்னர் வட்டியுடன் அந்த பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்று இமெயில் மற்றும் எஸ்எம்எஸ் அனுப்பி மிரட்டுகிறது. இப்படித்தான் அரசு அறிவிப்புகள் அனைத்தும் உள்ளது. இதுபோன்ற அறிவிப்புகள் பெரிய முதலாளிகளுக்கு மட்டுமே பொருந்துகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மத்திய-மாநில அரசுகள் அறிவிப்பு எதுவும் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றே கூறப்படுகிறது. அதனால் ஊரடங்கை தமிழகத்தில் படிப்படியாக தளர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில்தான், சென்னை தலைமை செயலகத்தில், தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள 12 குழுவில் இடம் பெற்றுள்ள 40 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, நேற்று காலை 10 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதல்வர், “தமிழகத்தில் கிராமங்கள், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் மக்கள் அதிகளவில் உள்ளதால், முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வரும்போது அதிகளவில் நெருக்கடி ஏற்படுகிறது. அதேபோன்று காய்கறி கடைகள், மார்க்கெட்களிலும் சமூக இடைவெளியை பின்பற்ற மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு டோக்கன் வழங்க வேண்டும். டோக்கனில் வழங்கப்பட்ட தேதி, நேரத்தில் மட்டுமே வர வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் தடையின்றி செயல்பட அனுமதிக்க வேண்டும். அரிசி, எண்ணெய் ஜவ்வரிசி, முந்திரி பதப்படுத்தும் ஆலைகள் செயல்படலாம். 100 நாள் வேலை நடைபெறலாம். அங்கு 50 பேருக்கு மேல் பணியில் இருக்க கூடாது.

முக கவசம் கட்டாயம். 55 வயதுக்கு மேல் உள்ளவர்களை பணியில் ஈடுபடுத்தக்கூடாது. பச்சை பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் படிப்படியாக தொழில் துவங்க அரசு உரிய நேரத்தில் உத்தரவு வழங்கும். சிமெண்ட், சர்க்கரை, ஸ்டீல், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் செயல்பட எந்த தடையும் இல்லை. அதேநேரம் தடை செய்யப்பட்ட பகுதியில் அனுமதி கொடுக்க கூடாது. தற்போது சிவப்பு மண்டல பகுதியாக உள்ள பகுதிகளை ஆரஞ்சு பகுதியாகவும், ஆரஞ்சு பகுதியை பச்சை பகுதியாகவும் மாற்ற மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி படிப்படியாக மாற்றினால் இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். தொழிற்சாலைகளும் இயங்க அனுமதி கொடுக்க முடியும். இதன்மூலம் நாட்டு மக்கள் இயல்பாக தங்கள் பணிகளை செய்ய முடியும்’ என்றார்.

இதையடுத்து ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தங்கள் மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு எந்த நிலையில் உள்ளது, மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர். கொரோனாவை கட்டுக்குள் வைத்துள்ள மாவட்ட கலெக்டர்களை முதல்வர் பாராட்டினார். இந்த கூட்டத்தை தொடர்ந்து மே 2ம் தேதி (சனிக்கிழமை) மாலை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்தும், வருகிற மே 3ம் தேதிக்கு (ஞாயிறு) பிறகு தமிழகத்தில் ஊரடங்கை தளர்த்துவதா, நீட்டிப்பதா என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுத்து அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தற்போதுள்ள நிலையை பார்க்கும்போது சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகர் பகுதிகளில்தான் கொரோனா தொற்று அதிகம் உள்ளது. குறிப்பாக சென்னையில் மிக அதிகமாக பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதே நேரம் கிராமம், பேரூராட்சி, நகராட்சி பகுதிகள் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதாக முதல்வர் எடப்பாடியும் நேற்று அறிவித்துள்ளார். அதனால் நகர் பகுதிகளை விடுத்து கிராமம், பேரூராட்சி, நகராட்சி பகுதியில் மே 3ம் தேதிக்கு பிறகு படிப்படியாக ஊரடங்கு தளர்த்துவது குறித்து அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேநேரம், தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு மே 17ம் தேதி வரை அனுமதி அளிக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது

* சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகர் பகுதிகளில்தான் கொரோனா தொற்று அதிகம் உள்ளது. சென்னையில் மிக அதிகமாக பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

* கிராமம், பேரூராட்சி, நகராட்சி பகுதிகள் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. எனவே இப் பகுதிகளில் மே 3ம் தேதிக்கு பிறகு படிப்படியாக ஊரடங்கு தளர்த்துவது குறித்து அறிவிக்கப்படலாம்.

* தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு மே 17ம் தேதி வரை அனுமதி அளிக்க வாய்ப்பில்லை.

வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல அனுமதி - பஸ்களில் அனுப்பி வைக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பிற மாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அவர்களை பஸ்களில் அனுப்பி வைக்குமாறு மாநிலங்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறது.

கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அத்தியாவசிய சேவைகள் தவிர பஸ், ரெயில் உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு இருப்பதால், பல்வேறு மாநிலங்களிலும் வேலை செய்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். இதேபோல் பிற மாநிலங்களில் தங்கி படிக்கும் மாணவர்கள், சுற்றுலா சென்றவர்களும் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் அங்கேயே இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட ஊர்களில் கட்டிட பணி உள்ளிட்ட வேலைகளை செய்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இதேபோல் ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம் போன்ற மாநிலங்களிலும் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் இருக்கிறார்கள். கட்டுப்பாடுகளை மீறி சொந்த மாநிலத்துக்கு செல்ல முயற்சிக்கும் தொழிலாளர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

வெளிமாநில தொழிலாளர்களை நீண்ட நாட்கள் தங்க வைக்காமல் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது. மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே வழக்கும் தொடரப்பட்டது.

வெளிமாநில தொழிலாளர்களை ஒரு மாதத்துக்கும் மேலாக வைத்து பராமரிப்பது ஒவ்வொரு மாநில அரசுக்கும் பெரும் பிரச்சினையாக இருப்பதோடு, நிதிச்சுமையும் ஏற்படுகிறது.

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கோரி சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்தியது.

அத்துடன், வெளிமாநிலங்களில் இருக்கும் தங்கள் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை திரும்ப அழைத்து வந்து தனிமைப்படுத்தி வைத்து பராமரிப்பதில் ஒவ்வொரு மாநில அரசுக்கு பிரச்சினை உள்ளது.

இதனால் இந்த விவகாரத்தை எப்படி கையாளுவது என்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது. இந்த நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-

ஊரடங்கின் காரணமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கி தவிக்கிறார்கள். தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அவர்களை அனுமதிக்க வேண்டும்.

இதற்காக மாநில, யூனியன் பிரதேச அரசுகள் தனி அதிகாரிகளை நியமித்து, அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தங்கள் மாநிலங்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்து, அவர்களில் யார்-யாரெல்லாம் சொந்த ஊர் செல்ல விரும்புகிறார்கள் என்பதை கேட்டு அறியவேண்டும்.

அவர்களில் கொரோனா தொற்று இல்லாதவர்களை மட்டும் பஸ்களில் ஏற்றி அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். பஸ்களில் தொழிலாளர்கள் முக கவசம் அணிந்து, குறிப்பிட்ட இடைவெளியில் அமர்ந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அந்த பஸ்கள் பல்வேறு மாநிலங்கள் வழியாகவும் தடையின்றி செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களை அனுப்பி வைக்கும் முன்னால், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடமும் இதுபற்றி கலந்து ஆலோசிக்க வேண்டும்.

தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்தை சென்று அடைந்ததும், அங்குள்ள சுகாதார அதிகாரிகள் அவர்களை பரிசோதித்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கு வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லை என்றால் அவர்களை மொத்தமாகவும் தனிமைப்படுத்தி வைக்கலாம். அவ்வப்போது அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

இதேபோல், கொரோனா பாதிப்பின் காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், வளைகுடா நாடுகளுக்கு சென்றுள்ள ஏராளமான இந்தியர்கள் அங்கிருந்து தாய்நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள்.

இது தொடர்பாகவும், கொரோனா பாதிப்புகள் குறித்தும் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நயான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

இதைத்தொடர்ந்து, மே 3-ந் தேதி ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு வளைகுடா நாடுகளுக்கு இந்திய கடற்படை கப்பல்கள், விமானங்கள், ராணுவ சரக்கு விமானங்களை அனுப்பி, அங்கு தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பான ஏற்பாடுகளை செய்யுமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் டெல்லியில் நேற்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்காக தங்கள் தளங்களை தயாராக வைத்திருக்குமாறு விமானப்படை, கடற்படைகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டு இருப்பதாகவும், வளைகுடா நாடுகளில் உள்ளவர்களை அழைத்து வந்த பின் ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிற நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

3-ந் தேதியுடன் ஊரடங்கு முடிந்துவிட்டால், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை உடனடியாக மீட்டு அழைத்து வருவதில் தாமதம் ஏற்படாது என்று கூறப்படுகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad