நெல்லையில் ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க 10 குழுக்கள் அமைப்பு - கலெக்டர் ஷில்பா தகவல்

நெல்லை மாநகராட்சி பகுதியில் ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க தாசில்தார்கள் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நெல்லை மாநகராட்சி பகுதியில் தகுந்த காரணம் இல்லாமல் வாகனங்களில் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால், விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

நெல்லை டவுன் வழுக்கோடை முதல் பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரி வரையும், பழைய பேட்டை பகுதி முழுவதும் கண்காணிக்க நெல்லை கோட்ட கலால் அலுவலர் சங்கர் தலைமையிலும், நெல்லை டவுன் பகுதிகள் முழுவதும் கண்காணிக்க மானூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோமதிசங்கரநாராயணன் தலைமையிலும், தச்சநல்லூர், தாழையூத்து மற்றும் உடையார்பட்டி பகுதிகளை கண்காணிக்க வருவாய் நீதிமன்ற உதவி கலெக்டர் அலுவலக கண்காணிப்பாளர் சுப்பு தலைமையிலும், நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை பகுதிகளை கண்காணிக்க பறக்கும் படை தாசில்தார் ராஜீ தலைமையிலும், பாளையங்கோட்டை மார்க்கெட், பஸ்நிலையம், சமாதானபுரம் பகுதிகளை கண்காணிக்க கனிமம் மற்றும் சுரங்க அலுவலக துணை தாசில்தார் செந்தில் தலைமையிலும் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

புதிய பஸ்நிலையம் பகுதி

பாளையங்கோட்டை மகாராஜநகர், ஐகிரவுண்டு பகுதிகளை கண்காணிக்க நெல்லை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராதாகிருஷ்ணன் தலைமையிலும், சாந்திநகர், ரகுமத்நகர், கே.டி.சி.நகர், வி.எம்.சத்திரம் பகுதிகளை கண்காணிக்க பறக்கும் படை துணை தாசில்தார் குமார் தலைமையிலும், அன்புநகர், பெருமாள்புரம் பகுதிகளை கண்காணிக்க அம்பை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பிரபாகர் அருள்செல்வம் தலைமையிலும், என்.ஜி.ஓ காலனி, பெருமாள்புரம், புதிய பஸ்நிலையம் பகுதிகளை கண்காணிக்க மாவட்ட தேர்தல் பிரிவு துணை தாசில்தார் விஜய்ஆனந்த் தலைமையிலும், தியாகராஜநகர், புறவழிச்சாலை பகுதி முழுவதும் கண்காணிக்க நெல்லை உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் மாரியப்பன் தலைமையிலும், குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவினர் ஒரு வாகனத்தில் ஒவ்வொரு பகுதியாக சென்று கண்காணிப்பார்கள். இவர்களுக்கு ஊரடங்கு உத்தரவினை செயல்படுத்துவதற்கும். சட்டம் ஒழுங்கை பராமரித்திடவும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். அப்போது விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டால் உடன் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்து வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவர்கள் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்குள் அவர்கள் எடுத்த நடவடிக்கை விவரத்தை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை பிரிவு அலுவலக மேலாளருக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2-ம் நிலையில் உள்ளது - கலெக்டர் தகவல்
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2-ம் நிலையில் இருப்பதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லி சென்று நீலகிரி திரும்பிய 8 பேரும் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது ரத்த மாதிரி முடிவில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த 30 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரி முடிவுகள் இன்று மாலை(அதாவது நேற்று) தெரியவரும்.

full-width மற்ற 4 பேருக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்து, 15-வது நாளில் ரத்த மாதிரி எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. முதல் 14 நாட்களில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தது. தற்போது பாதிப்பு இருப்பதால் மீண்டும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி, ரத்தம், சளி மாதிரி ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி காந்தல் பகுதியில் 2 பேர், குன்னூரில் 2 பேர், கோத்தகிரியில் 3 பேர் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நேற்று(அதாவது நேற்று முன்தினம்) ஒருவர் பாதிக்கப்பட்டதை அடுத்து, எஸ்.கைகாட்டி பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. 3 கிராமங்களில் மக்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கணக்கெடுப்பு நடந்து வருகிறது. சீல் வைக்கப்ப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியே வரவும் கூடாது, உள்ளே யாரும் செல்லவும் கூடாது.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2-ம் நிலையில் உள்ளது. டயாலிசிஸ் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் வசதி இருக்கிறது. கூடலூர், பந்தலூரில் புற்றுநோய், இதயம் பாதிப்புக்கு உள்ளானவர்கள் டாக்டரிடம் சான்றிதழ் பெற்று கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டுக்கு சிகிச்சைக்காக செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அம்மா மருந்தகங்களில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு ஏற்பட்டது தெரியவந்து உள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட தனிக்குழு மருந்து, மாத்திரைகள் மற்றும் உணவு பொருட்கள் என்ன தேவைப்படுகிறது என்று ஆய்வு செய்யும்.

தேயிலை தொழிற்சாலைகள் 50 சதவீத தொழிலாளர்களை கொண்டு தேயிலைத்தூள் உற்பத்தி செய்வதற்கான ஆலோசனை கூட்டம் முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெற உள்ளது. காந்தல், ராஜாஜி நகர், கடைவீதி பகுதி, எஸ்.கைகாட்டி ஆகிய 4 தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வீடு, வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் 440 குழுக்கள் ஈடுபட்டு உள்ளது. நீலகிரியில் தற்போது 314 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

கிருஷ்ணகிரி, ஓசூரில் ஊரடங்கையொட்டி கட்டுப்பாடு: இருசக்கர வாகன ஓட்டிகள் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டும் வெளியே வர அனுமதி - கலெக்டர் பிரபாகர் உத்தரவு
கிருஷ்ணகிரி, ஓசூரில் ஊரடங்கையொட்டி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி நகராட்சி, ஓசூர் மாநகராட்சியில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க விதிமுறைகள் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி இருசக்கர வாகனங்களில் காலை 6 மணி முதல் ஒரு மணி வரையில் காவல் துறை, வட்டார போக்குவரத்து துறை சார்பில் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே வெளியே வர அனுமதி அளித்து ஒவ்வொரு நாளும் ஒரு நிறம் ஒதுக்கப்பட்டு வாகனங்களின் பெயர் பலகையில் பெயிண்ட் பூசப்படும். சனி, செவ்வாய் வெளியே வர மஞ்சள் பெயிண்டும், ஞாயிறு, புதன் வெளியே வர சிவப்பு வண்ணமும், திங்கள், வியாழன் வெளியே வர பச்சை வண்ணமும் பூசப்படும்.

இதைத் தவிர மருத்துவ தேவை, இதர அவசர தேவைக்கு உரிய ஆவணங்களை இருசக்கர வாகன ஓட்டிகள் காவல்துறையிடம் காட்ட வேண்டும். அத்தியாவசிய உணவு பொருட்கள், காய்கறிகள் அரசு நிர்ணயித்த விலையில் விற்க வேண்டும். அதிக விலைக்கு விற்றால் சம்பந்தப்பட்ட கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும். கிருஷ்ணகிரி உட்கோட்டத்திற்குட்பட்ட மூத்த குடிமகன்கள் யாருக்காவது மருந்து, மாத்திரைகள் மற்றும் பொருட்கள் வாங்க வேண்டிய தேவையிருப்பின், காவலர் படை எண்களான 9498170673, 9498101113, 8883672901 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும், கிருஷ்ணகிரி வீட்டு வசதி வாரியம் பகுதி 1, பகுதி 2, பாரதியார் நகர், ராஜீவ்நகர், காமராஜ் நகர், திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மூத்த குடிமகன்கள் 9498101110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இதேபோல ஓசூரில் வாகன ஓட்டிகள் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணிக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மருந்து, மாத்திரைகள் மற்றும் இதர பொருட்கள் தேவைபடுவோர் 94981 01093 மற்றும் 94981 01104 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று கண்டறிய மாதிரி எடுக்கும் மையம் - கலெக்டர் பார்வையிட்டார்
தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று கண்டறிய சளி மாதிரி எடுக்கும் மையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் பார்வையிட்டார்.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு உள்ளதா? என அறிய புதிதாக ஒரு மாதிரி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நோயாளிகளுக்கு மூக்கிலும், தொண்டையிலும் சளி மாதிரி எளிதில் பாதுகாப்பாக எடுக்க முடியும். இந்த புதிய சேகரிப்பு மையத்தில் சளி மாதிரி எடுக்கும்போது ஒரு கொரோனா தொற்று நோயாளியிடம் இருந்து இன்னொரு நோயாளிக்கோ அல்லது நோயாளியிடம் இருந்து மருத்துவமனை பணியாளர்களுக்கோ பரவ வாய்ப்பில்லை.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின், பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் நலனுக்காக சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் முருகவேல் ஆலோசனையின்படி இந்த புதிய வித்தியாசமான சளி மாதிரி சேகரிப்பு மையத்தை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உருவாக்கியுள்ளார். இதனை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று பார்வையிட்டார்.

தானியங்கி அமைப்பு

இதுபற்றி டாக்டர் ஜெஸ்லின் கூறுகையில், கொரோனா தொற்றின் வீரியத்தையும், அது பரவும் வேகத்தையும் கருத்தில் கொண்டு, நோயாளிகளின் நலன் கருதியும், மருத்துவமனை பணியாளர்களின் நலன் கருதியும் மற்றவர்களுக்கு பரவாமல் இருப்பதற்காக புது முயற்சியாக இணை இயக்குனர் ஆலோசனையின்படி அனைத்து மருத்துவர்களின் ஒத்துழைப்புடன் இந்தப் புதிய சளி சேகரிப்பு மையத்தை உருவாக்கியுள்ளோம். இந்த மையத்தில் ஒரு நோயாளிக்கு சளி மாதிரி எடுத்தவுடன் 5 நிமிடத்தில் அந்த மையத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த தானியங்கி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எங்களின் எண்ணங்களையும் தேவைகளையும் கூற அதை அப்படியே ஏற்று உடனடியாக வடிவமைத்துக் கொடுத்த அரசு பொறியாளர்கள் இப்ராஹிம், உதயகுமார் ஆகியோருக்கு நன்றி கூறுகிறேன்“ என்றார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படும் - கலெக்டர் சிவன்அருள் பேட்டி
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படும் என்று கலெக்டர் சிவன்அருள் கூறினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அரசு அதிகாரிகள், வணிகர் சங்க பிரதிநிதிகள், தோல் தொழிலதிபர்கள் சங்கத்தினர் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆம்பூர் வர்த்தக மையத்தில் மாவட்ட கலெக்டர் ம.ப. சிவன் அருள் தலைமையில் நடந்தது.

மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பொ.விஜயகுமார், வாணியம்பாடி உதவி கலெக்டர் காயத்ரி சுப்பிரமணி, துணைபோலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், தாசில்தார் செண்பகவல்லி, நகராட்சி ஆணையாளர் த.சவுந்தரராஜன், மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரகு, நலங்கிள்ளி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் கலெக்டர் சிவன்அருள் கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் 7 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆம்பூரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 13 பேர் உள்ளனர். அதனால் ஆம்பூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தடை உத்தரவு அமலில் இருந்தாலும் பொதுமக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியில் வந்து சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் சுயகட்டுப்பாட்டுடன் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டியது அவசியமாகும். ஆம்பூரில் அதிகபட்சமாக 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஊரடங்கு உத்தரவை கடுமையாக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆம்பூரிலிருந்து தடை உத்தரவு படிப்படியாக திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கடுமையாக்கப்பட உள்ளது. காய்கறி உள்பட அனைத்து கடைகளையும் மூடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இது படிப்படியாக அமல்படுத்தப்படும். மருந்து, காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவை பொதுமக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று குறித்து ராப்பிட் பரிசோதனை மேற்கொள்ளும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆவின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் காப்பகத்திற்கு தினமும் 100 லிட்டர் பால் - கலெக்டர் வழங்கி தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மனநலம்பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் காப்பகத்துக்கு ஆவின் மூலம் தினமும் 100 லிட்டர் இலவச பால் வழங்குவதை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கிவைத்தார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலை மாவட்ட ஆவின் சார்பில் அரசு அங்கீகாரம் பெற்ற, மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு தினமும் 100 லிட்டர் பால் தடையின்றி இலவசமாக வழங்கப்படும் என மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று செங்கம் சாலையில் செ.அகரம் கிராமத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு இலவச பால் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆவின் தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஆவின் உதவிப்பொது மேலாளர் எம்.நாச்சியப்பன் முன்னிலை வகித்தார்.

இதில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்துகொண்டு மனநலம் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு பால் வழங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மேக்களூர் கிராமத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் காப்பகத்தில் உள்ளவர்களுக்கும், இலவசமாக பால் வழங்கப்படும் என தெரிவித்தார்.

ஆவின் மேலாளர் காளியப்பன், இயக்குனர் கீதா கலியபெருமாள், பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர் பரணி, தலைவர்கள் மணி, அய்யனார், மாநில கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் அமுதா அருணாச்சலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர்: கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க பாரம்பரிய மருத்துவம் பயனளிக்கிறது - கலெக்டர் தகவல்
கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க பாரம்பரிய மருத்துவம் பயனளிக்கிறது என்றும், அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது என்றும் கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா போன்ற வைரஸ் வராமல் தடுக்கும் முயற்சியில் நமது பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவ முறைகள் பயனளிக்கிறது. சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல் உள்ளவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்கள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் கபசுர குடிநீரை பருகுவது நல்லது.

தற்போது பென்ட்லேண்ட் மருத்துவமனையிலும், சி.எம்.சி. மருத்துவமனையிலும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. இது தவிர தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் நில வேம்பு கசாயம் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும்.

நில வேம்பு கசாயமும், கபசுர குடிநீரும் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தின் பாதிப்பை வெகுவாக குறைக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் உள்ள சித்தா மருத்துவப் பிரிவில் இவை இலவசமாக வழங்கப்படுகிறது.

நிலவேம்பு கசாயத்தை அனைவருமே தொடர்ந்து 3 நாட்களுக்கு குடித்து வந்தால் நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். கபசுர குடிநீர் பருகுவதால் தொண்டை வலி, இருமல், தும்மல், சளி மற்றும் இடைவிடாத காய்ச்சல் முதலிய பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

வயிற்றுப்புண், மூலம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் கர்ப்பிணிகள், மாதவிடாய் காலங்களில் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி பருகுவது நல்லது.

இது தவிர தினமும் காலை, மாலை இருவேளைகளில் உப்பு கலந்த சுடு தண்ணீரில் வாய் கொப்பளிக்கலாம். மிதமான சுடு நீரை குடிக்கலாம். தொண்டை வலி, இருமல், தும்மல் மற்றும் சளி இருந்தால் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் தைலம் அல்லது நொச்சி அல்லது துளசி இலைகளை போட்டு மூக்கு, தொண்டைக்கு நீராவி பிடிக்கலாம்.

காலை 10 மணிக்கு முன் மாலை 4 மணிக்கு மேல் சூரியக்குளியல் எடுக்கலாம். மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் நம்முடைய பிராணவாயுவை அதிகரிக்கச் செய்யலாம். துளசிச் சாறு, நெல்லிக்காய் சாறு, இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு, மஞ்சள் கலந்து பருகலாம்.

வைட்டமின் சி, புரதச் சத்து அதிகமுடைய பழங்கள், தானிய வகைகள், முட்டை மற்றும் சுண்டல் ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad