Matrimony OTT-Platforms Jobs Coupons Business

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 29,435-ஆக உயர்வு; அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி ரத்து

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 29,435-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 934-ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,380-லிருந்து 9,15229,435-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 886-லிருந்து 934-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 6,362-லிருந்து 6,869-ஆக உயர்ந்துள்ளது.

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி ரத்து: 15 நாள் லீவ் சரண்டருக்கும் தடை: தமிழக அரசு அதிரடி உத்தரவு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் 15 நாள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து பணம் பெறுவதற்கு தடை விதித்தும், 18 மாத அகவிலைப்படி கிடையாது என்றும் தமிழக அரசு நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது. இதன்மூலம் அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொது ஊரடங்கு நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை நீடிக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வராமல் முடங்கியுள்ளனர். நாடு முழுவதும் தொழில், வர்த்தகம், இதர பணிகளும் முடங்கியதால் மத்திய அரசுக்கு வர வேண்டிய வருவாய், தமிழகம் உள்பட மாநில அரசுகளுக்கு வரவேண்டிய பல ஆயிரம் கோடி நின்றுவிட்டது.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரிய பொருளாதார சிக்கலை மத்திய, மாநில அரசுகள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் மத்திய-மாநில அரசுகளுக்கு, பொதுமக்கள் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதன்பேரில் பலரும் அரசுக்கு நிவாரண நிதியும் வழங்கி வருகின்றனர். ஆனால் மாநில அரசுகள் நிதி இல்லாமல் தடுமாறி வருகின்றன. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே அறிவித்த 4 சதவீத அகவிலைப்படியை வழங்க முடியாது என்று மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள், மத்திய அரசு சங்க நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசும் தற்போது ஒரு அரசாணையை பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர அரசுப் பணியில் உள்ளவர்கள் தங்களின் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து பணம் பெற்றுக் கொள்ள தடைவிதித்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என தமிழகத்தில் மொத்தம் 20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 30 நாள் ஈட்டிய விடுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 15 நாள் விடுப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், அந்த 15 நாட்களை அவர்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்து ஒரு ஆண்டுக்கு ஒரு முறையோ (15 நாள்) அல்லது 2 ஆண்டுக்கு ஒரு முறையோ (15+15=30 நாள்) அந்த ஈட்டிய  விடுப்பைஒப்படைத்து பணமாக பெற்றுக் கொள்வார்கள்.

இப்படி பணமாக பெற்றுக் கொள்ளவதை பெரும்பாலான ஆசிரியர்கள் ஏப்ரல் மாதத்தில் தான் ஒப்படைப்பு செய்வது வழக்கம். இதன்மூலம் பெறும் பணத்தை வீட்டுக் கடன், கல்விக்கான செலவு அல்லது கல்விக் கடன் செலுத்துவது போன்ற மிக அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.  இதுபோக மீதம் உள்ள 15  நாள் ஈட்டிய விடுப்பு அவர்களின் சர்வீஸ் புத்தகத்தில் சேமிப்பு கணக்கில் வைக்கப்படும். இதை அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு பெறுவார்கள். இது தான் வழக்கம். இந்நிலையில் தான் கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வீட்டில் முடங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இருப்பினும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை கொரோனாவுக்காக வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில்தான், அவர்களின் ஈட்டிய விடுப்பில் ஒரு ஆண்டுக்கான பணத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெற முடியாத வகையில் அரசு தடை விதித்துள்ளது. இதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பும், கண்டனமும் கிளம்பியுள்ளது.  இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்று பிரச்னையால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை அடுத்து, அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு ஆண்டில் 15 நாள் ஒப்படைப்பு செய்து பணம் பெறுவது அல்லது 2 ஆண்டில் ஒப்படைப்பு செய்து பணம் பெறும் முறை ஒரு ஆண்டுக்கு தடை செய்யப்படுகிறது. இந்த தடை இந்த ஆணை பிறப்பிக்கப்படும் நாளில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

இதையடுத்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒப்படைப்பு செய்ய அளித்துள்ள விண்ணப்பங்கள் அனைத்தும் பணம் பெறுவதற்காக தயார் நிலையில் இருந்தாலும் அவை மேற்கொண்டு செயல்படுத்தப்பட மாட்டாது. பணம் பட்டுவாடா செய்வதற்கான அனுமதி வழங்கி இருந்தாலும் அவை ரத்து செய்யப்படும். அதனால் அந்த ஈட்டிய விடுப்புகள் மீண்டும் அதே விடுப்புக்கான கணக்கில் சேர்க்கப்படும்.  இந்த அரசாணை அரசு பணியில் உள்ளவர்கள், மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், பல்கலைக் கழகங்கள், ஆணையங்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளுக்கு பொருந்தும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

18 மாத அகவிலைப்படியும் பிடித்தம்: இந்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வு ஊதியதாரர்கள், குடும்ப ஓய்வு ஊதியம் பெறுவோர் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டிய 18 மாதத்துக்கான அகவிலைப்படியை வழங்க முடியாது என்று மத்திய அரசு போல தமிழக அரசும் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: மத்திய அரசு அறிவித்துள்ள ஜனவரி 2020 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி, ஜூலை 2020 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி, ஜனவரி 2021க்காக அகவிலைப்படி ஆகியவை தற்போது வழங்கப்பட மாட்டாது. மேலும், 2021 ஜனவரி மற்றும் 2021 ஜூலைக்கான அகவிலைப்படி தலா 4 சதவீதம் என 12 சதவீத தொகை 2021 ஜூலையில் வழங்கப்படும். அப்போது, வழங்கப்படும் அகவிலைப்படியில் நிலுவைத்தொகை ஏதும் வழங்கப்பட மாட்டாது.

இந்த ஆணை ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியில் இருப்போர், நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றுவோர், உள்ளாட்சி பணியாளர்கள், யுஜிசி, ஏஐசிடிஇ ஆகியவற்றின் ஊதியம் பெறுவோர், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், வருவாய்த்துறையில் பணியாற்றும் கிராம உதவியாளர்கள், மதிய உணவு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், குழந்தை நல ஒருங்கிணைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள், எழுத்தர்கள், ஆகியோருக்கு பொருந்தும்.  இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களின் 15 நாள் ஈட்டிய விடுப்பு மற்றும் 18 மாத அகவிலைப்படியை அரசு பிடித்தம் செய்தால், தமிழக அரசுக்கு 5,000 கோடி வரை மிச்சமாகும்” என்றார்.

பிடித்தம் எவ்வளவு? அகவிலைப்படி பிடித்தம் என்பது எப்படி இருக்கும் என்று
ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி என்பது ஜனவரி 2020 முதல் ஜனவரி 2021 வரை அறிவிக்கப்பட்டது. ஜனவரி 2020ல் இருந்து 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு என்று கணக்கிட்டால் ஒருவர் மாத ஊதியமாக 50 ஆயிரம் பெற்றால்,

ஜனவரி 2020க்கு 4 சதவீதம்    2000
ஜனவரி-ஜூன் வரை 6 மாதம்    2000X6 = 12000
ஜூலை 2020க்கு கணக்கிட்டால்    4%+4% = 4000
ஜூலை-டிசம்பர் வரை 6 மாதம்    4000X6 = 24000
ஜனவரி 2021க்கு கணக்கிட்டால்    4%+4%+4% = 6000
ஜனவரி-ஜூலை வரை 6 மாதம்    6000X6 = 36000
மொத்தம்    12000+24000+36000 = 72000

எனவே மேற்கண்ட கணக்குப்படி 50 ஆயிரம் ஊதியம் பெறும் ஒருவர் 72 ஆயிரம் இழக்க வேண்டி வருகிறது. இதுதவிர மற்ற தொகைகளில் ஊதியம் பெறுவோர் மேற்கண்ட முறைப்படி கணக்கீடு செய்து கொண்டால் பல கோடி ரூபாய் அரசுக்கு கிடைக்கும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 15 நாள் இஎல் மற்றும் 18 மாத அகவிலைப்படி பிடித்தம் செய்யப்படுவதால் ஒரு அரசு ஊழியருக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரத்தில் இருந்து அதிகப்பட்சமாக 1.50 லட்சம் வருமானம் இழப்பு ஏற்படும். ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 3 லட்சம் வரை இழப்பு ஏற்படும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad