இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1684 பேருக்கு கொரோனா தொற்று - மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கொரோனா வைரஸ் பரவலின் வேகம் கட்டுக்குள் வந்த பாடில்லை.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் லாவ் அகர்வால் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 23,077 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 718 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 28 நாட்களில் 15 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் ஏற்படவில்லை. கடந்த 14 நாட்களில் கொரோனா தொற்று ஏற்படாத மாவட்டங்கள் 80 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வருவோர் விகிதம் 20.57 ஆக உள்ளது” என்றார்.
நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்தின் இயக்குநர் சுஜித் சிங் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சமூகப் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும், சமூக கண்காணிப்பை மேற்கொள்வதற்கும் ஊரடங்கு சிறப்பாக பலனளித்துள்ளது. சமூக கண்காணிப்பை மேற்கொள்ள மாநில அரசுகள் மிகப்பெரிய அளவில் பங்களிப்பை அளித்துள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில், கொரோனா பாதிப்பு சந்தேக நபர்களைக் கண்டறிய வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதன் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்” என்றார்.