நெல்லை ரெயில் நிலையத்தில் 20 ரெயில் பெட்டிகள் கொரோனா தனிமை வார்டுகளாக மாற்றம்
நெல்லை ரயில் நிலையத்தில் கொரோனா தனிமை வார்டுகளாக 20 ரெயில் பெட்டிகள் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் வருகிற 14- ந் தேதி வரை ஊரடங்கு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. பொதுமக்கள்
தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் சமூக இடைவெளியை பின்பற்ற
வேண்டும் எனவும், மத்திய, மாநில அரசுகள்
அறிவுறுத்தி உள்ளன.
நாடு முழுவதும் முக்கிய தலைநகரங்களில் ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை
வார்டாக மாற்றுவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சரக்கு ரயில்களை
தவிர மற்ற ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் பெட்டிகளில், கொரோனா நோயாளிகளை
தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில் தயார் செய்யப்படுகின்றன.
நெல்லை ரயில் நிலையத்திலும், ரயில் பெட்டிகள் கொரோனா தனிமை வார்டுகளாக
மாற்றம் செய்யும் பணி கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இந்த பணி இரவும், பகலுமாக
பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அங்குள்ள பிட்லைன் எனப்படும் பராமரிப்பு
மையத்தில் நடந்து வருகிறது.
20 ரயில் பெட்டிகள் முதல் கட்டமாக தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பெட்டியிலும் டாக்டர்கள் தங்குவதற்கான அறை, சுகாதார வளாக வசதி, ரயில்
பெட்டியில் உள்ள இருக்கைகள் அகற்றப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளன. நேற்று மாலை
கொரோனா தனிமை வார்டில் கொசுவலை பொருத்தப்பட்டன. திரை சீலைகள் மூலம் கொரோனா
நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். வித்தியாசமான வண்ணத்தில் பெட்டிகள் தயார்
செய்யப்பட்டுள்ளன.
மதுரை கோட்டத்தை சேர்ந்த தெற்கு ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில், “ரயில்வே துறை உயர் அதிகாரிகள்
உத்தரவின் பேரில் நெல்லை ரயில் நிலையத்தில் ஒரு பெட்டிக்கு 32 படுக்கை வசதிகள்
தயார் செய்யப்பட்டுள்ளன. 20 கொரோனா தனிமை வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக
ரயில்பெட்டிகளை தயார் செய்ய வேண்டும் என உயர் அதிகாரிகள் கேட்டு கொண்டால் தயார்
செய்வோம். இந்த பெட்டிகளை எப்படி பயன்படுத்த வேண்டும்? என அதிகாரிகள்
தெரிவிப்பார்கள்” என்றார்.