Matrimony OTT-Platforms Jobs Coupons Business

காஞ்சீபுரம் அருகே சாராயம் விற்பனை செய்த 2 பேர் கைது; ஓசூரில் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கு: பிரபல ரவுடி உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

படப்பை அருகே சாராயம் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள எருமையூரை சேர்ந்தவர் பிரகாஷ், (வயது 26). இவர் பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்ட நாட்டு சாராயத்தை எருமையூர் பகுதியில் விற்பனை செய்வதாக சோமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலையடுத்து, போலீசார் அவரை தேடி வந்த நிலையில், மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் தலைமையில் சோமங்கலம் போலீசார், எருமையூர் பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்த பிரகாஷை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், எருமையூர் சமுதாயக்கூடம் பின்புறம் உள்ள முட்புதர் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டதாகவும், மேலும் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டுள்ளதாகவும் பிரகாஷ் தெரிவித்ததையடுத்து அங்கு அவரை அழைத்துச் சென்றனர்.

2 பேர் கைது

அப்போது அங்கு இருந்த 180 லிட்டர் எரிசாராய ஊறல் மற்றும் ஊறலுக்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் 20 லிட்டர் நாட்டு சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.மேலும் இது தொடர்பாக பழந்தண்டலம் பகுதி அம்பேத்கர் தெருவை சேர்ந்த அருண்குமார், (29) என்பவரையும் போலீசார் பிடித்தனர்.

இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்து, ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஓசூரில் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கு: பிரபல ரவுடி உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இமாம்பாடா பகுதியை சேர்ந்தவர் மன்சூர் அலி (வயது 55). இவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளராக இருந்தார்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 2-ந் தேதி இரவு ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு நடைபயிற்சிக்கு சென்ற அவர் ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக ஈரோடு மாவட்டம் கொடுமுடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஓசூர் சாந்திநகரை சேர்ந்த கஜா என்ற கஜேந்திரன்(32), ஓசூர் அருகே எஸ்.முதுகானபள்ளியை சேர்ந்த கிச்சு என்ற சந்தோஷ்குமார் (25), தேன் கனிக்கோட்டை அருகே மருதாளப்பள்ளியை சேர்ந்த யஷ்வந்த்குமார்(25), தளி கொத்தனூரை சேர்ந்த அலிபாபா என்ற கோவிந்தராஜ் (23) ஆகிய 4 பேர் சரணடைந்தனர்.

மேலும் கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த குலு என்ற ஜிதின்(30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், முன் விரோதம் காரணமாக, மன்சூர் அலி வெட்டிக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் 5 பேரையும், குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று மாவட்ட கலெக்டர் பிரபாகர், கஜா உள்பட 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

ஓசூரை சேர்ந்த பிரபல ரவுடியான கஜா என்ற கஜேந்திரன், கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி ஓசூரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயலாளர் சூரி என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார் என்றும், அந்த வழக்கில் குண்டர் சட்டத்திலும் அவர் கைது செய்யப்பட்டார் என்றும், இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடி கொலை வழக்கில் கைதான 5 பேர் சிறையில் அடைப்பு பரபரப்பு வாக்குமூலம்
ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். தலையை வெட்டிவிடுவேன் என்று மிரட்டியதால் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பிரபல ரவுடி கொலை

திருச்சி திருவானைக்காவல் வெள்ளிதிருமுற்றம் பகுதியை சேர்ந்தவர் சந்துரு என்கிற சந்திரமோகன்(வயது 38). இவருக்கு தலைவெட்டி சந்துரு என்கிற மற்றொரு பெயரும் உண்டு. பிரபல ரவுடியான இவர் மீது தஞ்சை, விராலிமலை, உறையூர், தில்லைநகர், கண்டோன்மெண்ட், ஸ்ரீரங்கம், எடமலைப்பட்டிபுதூர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி உள்பட 31 வழக்குகள் உள்ளன. சந்துருவுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் காலை சந்துரு தனது மகளை ஸ்கூட்டரில் ஏற்றி கொண்டு ஸ்ரீரங்கம் ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து தேவி தியேட்டர் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

அப்போது எதிரே வந்த கார், சந்துருவின் ஸ்கூட்டரை இடித்து தள்ளியது. அந்த காரில் இருந்து இறங்கிய 3 பேரில் ஒருவர் குழந்தையை தூரமாக கொண்டு சென்று விட்டார். மற்ற 2 பேரும் அரிவாளால் சந்துருவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

5 பேர் கைது

பின்னர் சந்துருவின் தலையை துண்டித்து காரில் வைத்துக்கொண்டு 3 பேரும் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்களிடம் விசாரித்தபோது, ஸ்ரீரங்கம் ரெயில்வே டி பிரிவு பகுதியை சேர்ந்த சரவணன்(35), அவரது தம்பி சுரேஷ்(30), சரவணனின் சித்தப்பா மகன் செல்வம்(24) என்பதும், முன்விரோதம் காரணமாக சந்துருவை ஸ்ரீரங்கம் ரெயில்வே மேம்பாலத்தில் வைத்து வெட்டி கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று தலை இல்லாத அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த கொலையில் சந்துரு வீட்டை விட்டு வெளியே வரும்போது, கண்காணித்து சரவணன் உள்ளிட்ட 3 பேருக்கும் தகவல் தெரிவித்த ஸ்ரீரங்கம் ஆர்.எஸ்.ரோட்டை சேர்ந்த விஜயஅமல்ராஜ்(25), பிரகாஷ்(32) உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய அரிவாள்கள், கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான சரவணன் மீதும் ஸ்ரீரங்கம், கொள்ளிடம், ஜீயபுரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

பரபரப்பு வாக்குமூலம்

இந்த கொலை சம்பவம் குறித்து சரவணன் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கு தொடர்பாக நான் கோர்ட்டில் ஆஜராக சென்றபோது, அங்கு வந்த சந்துரு என்னிடம், நீ என்ன பெரிய ஆளா, இப்போது நினைத்தாலும் உன் தலையை வெட்டி கையில் கொடுத்துவிடுவேன் என்று மிரட்டினான். அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்ட நான் சந்துருவால் எப்போது வேண்டுமானாலும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என நினைத்தேன்.

இதனால், சிறையில் இருந்தபோது சந்துருவை கொலை செய்ய திட்டமிட்டேன். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த வாரம் எனக்கு ஜாமீன் கிடைத்து சிறையில் இருந்து வெளியே வந்தேன். கடந்த 3 நாட்களாக என்னை யாரோ நோட்டமிடுவதுபோல் இருந்தது. இது சந்துருவின் வேலையாக தான் இருக்கும் என நினைத்த நான், அவன் முந்திக் கொள்வதற்கு முன் நான் முந்திக்கொண்டு சந்துருவை கொலை செய்து தலையை துண்டித்து தனியே எடுத்தேன்.

கட்ட பஞ்சாயத்து

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சந்துருவின் தாயை ஒருவர் அடித்துள்ளார். ஆத்திரம் அடைந்த சந்துரு அந்த நபரின் கையை வெட்டியுள்ளார். இந்த வழக்கில் பால் வியாபாரி ஒருவர் சந்துருக்கு எதிராக சாட்சி கூறி உள்ளார். இதையடுத்து கடந்த 2009-ம் ஆண்டு பால் வியாபாரியின் தலையை துண்டித்து சந்துரு கொலை செய்துள்ளார். அதன்பிறகே அவரை தலைவெட்டி சந்துரு என அழைக்க தொடங்கி உள்ளனர். ஸ்ரீரங்கம் பகுதியில் அவ்வப்போது கட்ட பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டு வந்த சந்துருவுக்கு அரசியல் பின்புலமும் இருந்ததால் அந்த பகுதியில் தலைவெட்டி சந்துரு என்ற அடைமொழியுடன் வலம் வந்துள்ளார்.

இதேபோல் சரவணனுக்கும் கொள்ளிடம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 6 வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரும் பக்கத்து, பக்கத்து தெருவில் வசிப்பதால் அடிக்கடி உரசல் இருந்து வந்துள்ளது. பல சமயங்களில் சரவணனை சந்துரு மிரட்டி சென்றுள்ளார். இதனாலேயே சரவணன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சந்துருவை கொலை செய்து பழி தீர்த்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கருங்கல்லை தூக்கி தலையில் போட்டு பெண் கொலை விரக்தியில் கணவனும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
சொந்த ஊருக்கு வர, மனைவி மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கட்டிட தொழிலாளி, ஜோலார்பேட்டை அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் கருங்கல்லை தூக்கி போட்டு கொலை செய்தார். விரக்தியில் அதே கருங்கல்லை தனது தலையிலும், உடலிலும் தாக்கி கொண்டு தொழிலாளி தற்கொலைக்கு முயன்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த இரணிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 40), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி விமலா (31). இவர்களுக்கு மதுஸ்ரீ (3) என்ற மகள் உண்டு. சங்கர், தனது குடும்பப் பிரச்சினையால் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு இரணிமேடுவில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த குடியானகுப்பம் கிராமத்துக்கு வந்து, அங்குள்ள ராமகவுண்டர் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி குடும்பத்துடன் வசித்து வந்தார்.

ஊரடங்கால் வேலை வாய்ப்பின்றி வீட்டில் இருந்த சங்கர் நேற்று முன்தினம் இரவு மனைவி விமலாவை சொந்த ஊரான இரணிமேடு கிராமத்துக்குப் போகலாம் வா, எனக்கூறி அழைத்துள்ளார். ஆனால் விமலா அந்த ஊருக்கு வர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த சங்கர், தன்னுடைய வீட்டருகே கிடந்த ஒரு கருங்கல்லை தூக்கி வந்து, வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த விமலாவின் தலையில் திடீரெனப் போட்டு நசுக்கி கொலை செய்தார். தலை சிதைந்து அதில் இருந்து ரத்தம் பீறிட்டு எழுந்தது, ரத்த வெள்ளத்தில் விமலா படுத்தப்படுக்கையிலேயே கால்களும், கைகளும் துடி துடித்தபடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தற்கொலை முயற்சி

மனைவி தன்னுடைய கண் எதிரே உயிரிழந்ததைப் பார்த்த சங்கர் வாழ்க்கையில் மேலும் வெறுப்படைந்து, மனைவியை கொலை செய்த அதே கருங்கல்லை எடுத்து வெறி பிடித்தவாறு தன்னுடைய உடலிலும், தலையிலும் தாக்கி கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அதில் அவருக்கு தலையில் அடிபட்டு மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து விமலாவை பார்த்துக் கதறினர். உடனே கிராம மக்கள் செல்போன் மூலமாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சங்கரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு, ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விமலாவின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை கணவர் உள்பட 3 பேர் கைது
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பல்லவராயன்பட்டியை சேர்ந்த கோட்டைச்சாமி மகன் சதீஷ்குமார் (வயது 30). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த லாவண்யா (27) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளார்.

இவர்களது திருமணத்தின்போது, 30 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை லாவண்யாவின் குடும்பத்தினர் வரதட்சணையாக கொடுத்தனர். இருப்பினும் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி சதீஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் லாவண்யாவை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

3 பேர் கைது

இதனால் மனமுடைந்த லாவண்யா, தனது தாய் வீட்டுக்கு வந்தார். பின்னர் அங்கு வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி கிடந்த லாவண்யாவை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே லாவண்யாவை வரதட்சணை கேட்டு கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் சதீஷ்குமார், அவரது தாய் ராணி (48), தந்தை கோட்டைச்சாமி (53) ஆகிய 3 பேர் மீது கோம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் லாவண்யாவுக்கு திருமணம் முடிந்து 4 ஆண்டுகளே ஆவதால், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. முத்தையனும் விசாரணை நடத்தி வருகிறார்.

கூடலூரில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி வீடு, வீடாக சுகாதாரத்துறையினர் ஆய்வு
நீலகிரி மாவட்டம் கூடலூர் எஸ்.எஸ். நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி பானுமதி(வயது 35). கூடலூர் பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள தனியார் மருந்தகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி பானுமதி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை முடிந்து, வீடு திரும்பினார்.

நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மீண்டும் பானுமதிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவரை அதே தனியார் ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பானுமதி கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

டெங்கு பாதிப்பு?

இதேபோன்று அப்பகுதியை சேர்ந்த பலரும் மர்ம காய்ச்சலால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதற்கு சிகிச் சை பெற்றாலும், மீண்டும் காய்ச்சல் ஏற்படுவதால் டெங்கு பாதிப்பாக இருக்கு மோ? என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆர்.டி.ஓ. ராஜ்குமார், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், டாக்டர் பிரனேஷ், சுகாதார ஆய்வாளர் சரவணக்குமார் மற்றும் சுகாதாரத்துறையினர் எஸ்.எஸ்.நகரில் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர்.அப்போது தண்ணீர் தேங்கும் வகையில் கிடந்த பிளாஸ்டிக் பொருட் கள், டயர்களை அப்புறப்படுத்தினர். மேலும் திறந்து கிடந்த தண்ணீர் தொட்டிகளை மூடினர். தொடர்ந்து சுகாதாரத்தை பேண பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர்.

சளி, ரத்த மாதிரி சேகரிப்பு

அதன்பின்னர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 48-க்கும் மேற்பட்டவர்கள் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வருவது தெரியவந்தது. அவர்களது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. மேலும் சளி மாதிரி எடுக்கப்பட்டு, குன்னூரில் செயல்படும் கொரோனா பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் கூறும்போது, அந்த பெண் உயிரிழப்பதற்கு முன்பு உடலில் வியர்வை நன்கு வெளியாகி உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் சளி, ரத்த மாதிரி பரிசோதனை அறிக்கை வந்த பிறகே எந்த வகையான காய்ச்சல் என்பது தெரியவரும். அடுத்த 1 வாரத்துக்கு அப்பகுதி சுகாதாரத்துறையினரின் நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளது என்றார். இதற்கிடையில் அப்பகுதி மக்களுக்கு நிலவேம்பு கசாய பொடிகளை நகராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று வழங்கினர். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad