Matrimony OTT-Platforms Jobs Coupons Business

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஒரே நாளில், மேலும் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 115 ஆக உயர்வு

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 36 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட் டது. இந்நிலையில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 7 பெண்கள், 3 ஆண்கள் அடங்கு வர். இதில் 5 பெண்கள், ஒரு ஆண் என மொத்தம் 6 பேர் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் குறைந்தபட்சமாக 21 வயதும், அதிகபட்சமாக 51 வயதும் உடையவர்கள்.

மேலும் வல்லத்தை சேர்ந்த 55 வயது பெண், கும்பகோணத்தை சேர்ந்த 20 வயது பெண், நெய்வாசலை சேர்ந்த 34 வயது ஆண், பாபநாசத்தை சேர்ந்த 36 வயது ஆண் ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர் கள் அனைவரும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர்.

கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்ட இரண்டாம் நிலை தொடர் புடைய 10 பேருக்கும் கடந்த 11-ந் தேதி சளி மாதிரி எடுக் கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இவர்கள் அனைவரும் அவரவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இவர்கள் 10 பேரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட னர். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் முதலாவதாக பாதிக்கப்பட்ட கும்பகோணத்தை சேர்ந்த நபர் குணமடைந்து கடந்த 16-ந் தேதி வீட்டுக்கு திரும்பினார். மற்றவர்கள் தொடர்ந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

ஏற்கனவே கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்த நபர்களை முதல் நிலை தொடர்புடைய வர்கள் என்றும், முதல் நிலை தொடர்புடையவர்களை சந்தித்தவர்களை 2-ம் நிலை தொடர்புடையவர்கள் எனவும் அடையாளம் காணப் படுகின்றனர். இதன் அடிப் படையில் இரண்டாம் நிலை தொடர்புடையவர்களுக்கும் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 21 பேர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு இருந்த னர். இந்த நிலையில் நீடாமங் கலத்தில் தங்கி இருந்த மியான்மர் நாட்டை சேர்ந்த 2 பேருக்கும் கூத்தாநல்லூர், கடியாச்சேரி, திருத்துறைப் பூண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவருக்கும் என மொத்தம் 5 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் அனைவரும் முதல்கட்ட ரத்த பரிசோதனை யில் நோய் தொற்று இல்லை என கண்டறியப்பட்ட நிலை யில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள சிறப்பு கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் 2-வது கட்ட பரிசோதனையில் இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருவாரூர் மாவட் டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

நாகை மாவட்டத்தில் நாகை, நாகூர், பொரவச்சேரி, சீர்காழி, திட்டச்சேரி ஆகிய பகுதிகளை சேர்ந்த 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்கனவே உறுதி செய்யப்பட் டது. இந்த நிலையில் நேற்று நாகூர் கண்ணாடி தோட்டம், நாகை யாகூசைன் பள்ளித் தெரு, பொறையாறு ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி யானது. இதனால் நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.

மதுரை, விருதுநகர், சிவகங்கையில் என்ஜினீயர், கல்லூரி மாணவி உள்பட 5 பேருக்கு கொரோனா உறுதி
மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 44 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதுபோல் ஏற்கனவே பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 70-க்கும் மேற்பட்டவர்கள் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு அறையில் வைத்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களது ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மதுரையை சேர்ந்த மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 2 பேரும் மதுரை திருமங்கலம், கொட்டாம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள். 2 பேரில் ஒருவர் 53 வயது ஆண். மற்றொருவர் 40 வயது பெண்.

இவர்கள் 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபோல் இவர்களுடைய உறவினர்கள், குடும்பத்தினர் சிலரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே திருமங்கலத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் திருமங்கலத்தில் மட்டும் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் சிகிச்சை பெற்று ஏற்கனவே 16 பேர் முற்றிலும் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இதுபோல் மதுரை எழுமலை பகுதியை சேர்ந்த 3 பேர் நேற்று தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரோனா நோய் குணமடைந்ததை தொடர்ந்து அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் இவர்கள் 15 நாட்கள் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும், அவர்களுக்கு தேவையான மருந்து பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் குணமடைந்து வீட்டுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் முழுவதும் 689 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டு அவர்கள் மதுரையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 9 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 489 பேருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் விருதுநகர் அருகே உள்ள டி.சேடப்பட்டி கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் கினி நாட்டில் இருந்து ஊர் திரும்பிய நிலையில் அவர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தார். 28 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்த அவருக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதே போன்று குமாரபுரத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவிக்கு தொடர்ந்து காய்ச்சல் மற்றும் இருமல் இருந்து வந்ததால் கன்னிசேரிபுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறையினர் இவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள டி.சேடப்பட்டி கிராமம், குமாரபுரம் கிராமம் ஆகியவற்றை சீல் வைத்து சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த இரு கிராமங்களிலும் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி விருதுநகர் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பழனிசாமி தெரிவித்ததாவது, கொரோனா தொற்று கண்டறியப்பட்ட என்ஜினீயர் குடும்பத்தினருக்கும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவி வெளி மாநிலங்களுக்கு செல்லாத நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் படித்த கல்லூரியில் விடுதி அறையில் உடன் ராஜபாளையத்தை சேர்ந்த 2 மாணவிகள் தங்கி இருந்தது தெரியவந்துள்ளது. அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி மாணவியின் குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். தற்போதைய நிலையில் அவர்கள் இருவரும் உடல் நிலை சீராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் 11 பேர் சிவகங்கை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்றனர். அவர்களில் 4 பேர் குணமடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதம் உள்ள 7 பேர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த திருப்பத்தூரை சேர்ந்த 50 வயது நபருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைதொடர்ந்து அவர் சிவகங்கை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வார்டில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில், வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் உள்பட மேலும் 5 பேருக்கு கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 74 ஆக உயர்வு
திண்டுக்கல் மாவட்டத்தில் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 74 ஆக உயர்ந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் டெல்லி மாநாடு மற்றும் வெளிமாநிலத்துக்கு சென்று வந்தவர்கள், அவர்களின் உறவினர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 69 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் முதியவர் ஒருவர் இறந்து விட்டார்.

மீதமுள்ள 42 பேரும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பாதித்தவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.

இதில் திண்டுக்கல் ரவுண்டுரோடு பகுதியை சேர்ந்த பெண், மேட்டுப்பட்டி மற்றும் கணவாய்பட்டி ஆகிய 2 பகுதிகளிலும் தலா ஒரு வாலிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட உறவினர்கள் மூலம், அவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் 3 பேரும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதற்கிடையே சுற்றுலா விசாவில் திண்டுக்கல்லுக்கு வந்து மதபிரசாரம் செய்ததாக, வங்காளதேசத்தை சேர்ந்த 11 பேர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே அதில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று தெரியவந்தது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 4 பேர் வீடு திரும்பினர்
தொற்று இல்லை என்பது உறுதியானதால் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் வீடு திரும்பினர்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 32 பேர் சமீபத்தில் குணமாகி வீடு திரும்பினர். இதையடுத்து 17 பேர் மட்டும் வைரஸ் தொற்றுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

அதன்பிறகு பெரம்பலூரை சேர்ந்த போலீஸ் ஏட்டு, ஒரு சிறுவன் உள்பட 3 பேர் 2 நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் பாதிப்புடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

இந்தநிலையில் அரியலூரை சேர்ந்த 2 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. உடனே அவர்களும் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இதன் மூலம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்தது. இது தவிர, கொரோனா தொற்று இல்லாமல் மேலும் 20 பேர் அரசு மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்தனர்.

அவர்களில் 4 பேருக்கு மீண்டும் வந்த பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என உறுதியானது. இதையடுத்து நேற்று மாலை 4 பேரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதற்கிடையே துவரங்குறிச்சியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக சுகாதாரத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்றை 30 நிமிடங்களில் கண்டறியும்720 “ரேபிட் டெஸ்ட் கிட்” கருவி தஞ்சைக்கு வந்தது
கொரோனா தொற்றை 30 நிமிடங்களில் கண்டறியும் 720 “ரேபிட் டெஸ்ட் கிட்” கருவி நேற்று தஞ்சைக்கு வந்தது.

கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கும்பகோணத்தை சேர்ந்த ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டார். மற்றவர்கள் தஞ்சையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சை, திருவையாறு, வல்லம், பாபநாசம், பட்டீஸ்வரம், கும்பகோணம், அதிராம்பட்டினம், ஒரத்தநாடு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் வசித்து வந்த பகுதிகள் அனைத்தும் “சீல்” வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், அவர்களை சந்தித்த நபர்களும் தனிமை படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களில் நோய் அறிகுறி இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்கள் வசித்த பகுதிகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மருத்துவக்குழுவினர் நோய் தொற்று பரவுவதை தடுக்க மருத்துவக்குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் கொரோனா பரிசோதனை திருவாரூரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் செய்யப்பட்டது. இதனால் முடிவுகள் வருவதில் தாமதம் ஆனது.

இதையடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 13-ந் தேதி முதல் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. தினமும் 100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து தஞ்சையில் உள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக்கழகமும் கொரோனா நோய் தொற்றை கண்டறியும் பரிசோதனை கருவியையும் வழங்கியது. அதன் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா தொற்றை எளிதில் கண்டறியும் நவீன கருவியான “ரேபிட் டெஸ்ட் கிட்” கருவி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இந்த கருவிகள் தமிழகத்துக்கு 36 ஆயிரம் கருவிகள் வந்தன. இது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்துக்கு நேற்று இந்த கருவிகள் வந்தன. இந்த கருவி மூலம் கொரோனா தொற்று உள்ளதா, என்பதை 30 நிமிடங்களில் கண்டறியலாம்

இது குறித்து தஞ்சை மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரவீந்திரனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 720 “ரேபிட் டெஸ்ட் கிட்” கருவி திருச்சி வந்து அங்கிருந்து தஞ்சைக்கு வந்துள்ளது.

இந்த கருவி மூலம் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அவர்கள் வசித்த பகுதிகளில் உள்ளவர்கள், அவர்களை சந்தித்தவர்களுக்கு உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் யாரும் பாதிக்கப்பட்டு உள்ளனரா? என்பதை உடனடியாக கண்டறியலாம்.

சேலம் அம்மாபேட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் பரிசோதனை
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 70 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான மருந்துகள், காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், அம்மாபேட்டை மண்டலத்தில் 33, 36, 39, 43 மற்றும் 44 ஆகிய வார்டுகளில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கக் கூடிய பொதுமக்களில் காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளவர்களுக்கும், இப்பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பிற மருத்துவ பணியாளர்கள் என மொத்தம் 85 பேருக்கு நேற்று ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் ரத்த பரிசோதனை செய்யும் பணி பாவடி பெண்கள் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதனை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார்.

இதில், பரிசோதனை செய்யப்பட்ட 85 நபர்களுக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என கண்டறியப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்டுள்ள பிற பகுதிகளில் காய்ச்சல் மற்றும் இருமல் உள்ள பொதுமக்கள், அப்பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பிற மருத்துவ பணியாளர்களுக்கும் ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் பார்த்திபன், சுகாதார அலுவலர் மாணிக்கவாசகம், சுகாதார ஆய்வாளர்கள் சந்திரன், பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை-தென்காசியில் 6 பேருக்கு கொரோனா தொற்று - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84 ஆக உயர்வு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்து உள்ளது.

சீனாவில் தோன்றி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நெல்லை மாவட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் ஏற்கனவே 60 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

அவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நேற்று மாலையுடன் 26 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் பத்தமடையை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் தென்காசி மாவட்டத்தில் ஏற்கனவே 18 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. தற்போது அங்கு மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் 4 பேரும் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர்கள்.

அவர்களும் நேற்று மாலையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்து உள்ளது.

சேலம், மேட்டூரில் தனிமைப்படுத்தப்பட்ட டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் உள்பட 22 பேர் விடுவிப்பு
சேலம், மேட்டூரில் தனிமைப் படுத்தப்பட்ட டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் உள்பட 22 பேர் விடுவிக்கப்பட்டனர்.

சேலத்தில் இந்தோனேசியாவில் இருந்து வந்த 4 முஸ்லிம் மதபோதகர்கள் உள்பட 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சை பெற்றனர்.

இவர்களில் 10 பேர் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மீதமுள்ள 14 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் சேலம் டவுன், ஜாகீர் அம்மாபாளையம், கிச்சிப்பாளையம், அன்னதானப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் உள்பட 14 பேர் சேலம் ஜங்சன் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் கடந்த மாதம் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் அவர்களுக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லை என்பது தெரியவந்ததால் 24 நாட்களுக்கு பிறகு அவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர். அவர்களை உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘சேலத்தில் உள்ள தங்கும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் உள்பட 14 பேருக்கு 2 முறை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்பது தெரிய வந்ததால் இன்று(நேற்று) விடுவிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுரை வழங்கி உள்ளோம்‘ என்றனர்.

இதே போன்று எடப்பாடி பகுதியை சேர்ந்த 5 பேர், சங்ககிரி, கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என மொத்தம் 8 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் மேட்டூரில் உள்ள எம்.ஏ.எம். பள்ளியில் அமைக்கப்பட்ட தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை மருந்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 8 பேரும் நேற்று விடுவிக்கப்பட்டனர். இதன் மூலம் நேற்று சேலம் மாவட்டத்தில் மொத்தம் 22 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை நாடும் மக்கள்
கரூரில் கொரோனா ஊரடங்கினால் தனியார் மருத்துவமனைகள் பரவலாக அடைக்கப்பட்டிருந்தன. இதனால் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை மக்கள் நாடுவதை காண முடிகிறது.

கரூரில் கொரோனா ஊரடங்கினால் தனியார் மருத்துவமனைகள் பரவலாக அடைக்கப்பட்டிருந்தன. இதனால் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை மக்கள் நாடுவதை காண முடிகிறது.

கரூர் நகரில் உழவர் சந்தை அருகே பழைய பைபாஸ் ரோடு, கோவை ரோடு, கரூர் பஸ் நிலையம் அருகே, திண்ணப்பா கார்னர், வெங்கமேடு, ஜவகர்பஜார் உள்ளிட்ட இடங்களிலும், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், நொய்யல், வேலாயுதம்பாளையம், க.பரமத்தி உள்ளிட்ட இடங்களிலும் டாக்டர்களால் அரசு அங்கீகாரத்துடன் தனியார் மருத்துவமனைகள் செயல்படுகின்றன.

இங்கு கை, கால், இடுப்பு, கழுத்து வலி உள்ளிட்டவற்றுக்கான பிசியோதெரபி சிகிச்சை, பல் மருத்துவ சிகிச்சை, தோல் வியாதி சிகிச்சை, சளி, இருமல் காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கினால் பல்வேறு தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டு இருப்பதை காண முடிகிறது. தாந்தோணிமலை மெயின்ரோடு உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் திறந்திருந்த மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக பலர் செல்வதை காண முடிகிறது.

எனினும் தற்போது பரவலாக மக்கள் மருத்துவ சேவையை பெற கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கரூர் நகரிலுள்ள அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவற்றை நாடி சிகிச்சை பெறுவதை காண முடிகிறது. இங்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்களுக்கு உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா தொற்று இருக்க வாய்ப்புள்ளதா? எனவும் கண்டறியப்பட்டு அடுத்த கட்ட மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதேபோல், கரூர் வடக்கு பிரதட்சணம் ரோடு, கோவை ரோடு உள்ளிட்ட இடங்களில் ஒரு சில மருத்துவமனைகள் உள்ளிட்டவை வழக்கம் போல் செயல்படுகின்றன. கரூர் தனியார் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் என்னும் கண்ணுக்கு தெரியாத நுண்கிருமி மனிதனிடமிருந்து மனிதனுக்கு தும்மல், இருமல் உள்ளிட்டவற்றின்போது வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் எளிதில் தொற்றி கொள்கின்றன. இதனால் முன்எச்சரிக்கையாக தான் தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு முடிந்ததும் தனியார் மருத்துவமனைகள் வழக்கம் போல் இயங்கும் என்றார்.

குமரியில் மேலும் தொற்று இல்லை:ஒரே நாளில் 163 பேருக்கு கொரோனா பரிசோதனைகலெக்டர் தகவல்
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 163 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. 201 பேருக்கான பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.

குமரி மாவட்டத்தில் 16 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் பலரின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் வரை கொரோனா பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 755 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 163 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் குமரி மாவட்டத்தில் தற்போது வரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 918 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடாததால் மக்கள் நிம்மதியாக உள்ளனர். இதுதொடர்பாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் மொத்தம் 918 பேர் கொரோனா நோய் தொற்று சந்தேகப்பட்டியலில் இருந்து சோதனை செய்யப்பட்டு உள்ளனர். இதில் இதுவரை 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. 701 பேருக்கு கொரோனா நோய் தொற்று இல்லை. மீதமுள்ள நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. மாவட்டம் முழுவதும் மொத்தம் 566 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் 353 நபர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஆவர். மேலும் 213 நபர்கள் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு உள்ளவர்களோடு தொடர்பில் இருந்ததால் அவர்களும் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ரப்பர் உற்பத்தி செய்யும் சிறு, குறு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் ரப்பர் ஷீட்டுகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைத்து அதற்கு பொருளட்டு கடன் பெறலாம். இவ்வாறு வழங்கப்படும் பொருளட்டு கடனுக்கு ஒரு மாத காலம் வரை வட்டி கிடையாது.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பை அமைப்பு சாரா தொழிலாளர் பதிவு அட்டையை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.

குமரி மாவட்டத்தில் 20-ந் தேதிக்கு (அதாவது இன்று) பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும். கொரோனா நோய் தொற்றினை முற்றிலுமாக அகற்ற பொதுமக்கள் ஊரடங்கு காலத்தில் அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மாங்காட்டை சேர்ந்த நர்சுக்கு கொரோனா வைரஸ் உறுதி
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். அவர், கொரோனா வைரஸ் சிறப்பு வார்டில் பணியாற்றி வந்தார்.

கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தெரிந்தது. இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று

உறுதியானது. இதையடுத்து அந்த நர்ஸ், உடனடியாக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வைரஸ் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் வி.கே.பழனி தெரிவித்தார். மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 1,061 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில் மாங்காட்டைச் சேர்ந்த நர்சுக்கு கொரோனா வைரஸ் உறுதியானதால் அவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு முழுவதையும் அதிகாரிகள் தனிமைப்படுத்தினர். குறிப்பாக நர்சின் குடும்பத்தினர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது. அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

உடுமலை அரசு ஆஸ்பத்திரி நர்சுக்கு கொரோனா; குடியிருப்பு பகுதிக்கு ‘சீல்’
உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சளி, இருமல், காய்ச்சல் என்று வருகிறவர்களுக்கு, கொரோனா வைரஸ் இருக்குமோ? என்று சந்தேகிக்கப்படுகிறவர்களுக்கு முதல்கட்ட சிகிச்சையளிக்க அனைத்து வசதிகளுடன் 15 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிறப்பு வார்டில் சிலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரி நர்சு ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி உள்ளதாக கண்டறியப்பட்டது. அவர் உடனடியாக கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து உடுமலையில், அந்த நர்சு குடியிருந்து வந்த குடியிருப்பு பகுதிக்கு உடுமலை ஆர்.டி.ஓ.ரவிக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் புகழேந்தி, தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார்,நில வருவாய் ஆய்வாளர் ரஞ்சித், நகராட்சி நகர்நல அலுவலர் (பொறுப்பு) சிவக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் செல்வம், செல்வக்குமார்,ஆறுமுகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளைக்கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து அந்த வீதியின் இரண்டு புறமும் சீல் வைக்கப்பட்டது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த பகுதியில் குடியிருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

பண்ருட்டியை சேர்ந்த தாய்-மகனுக்கு கொரோனா
டெல்லி மாநாடு சென்று திரும்பி வந்தவருடன் தொடர்பில் இருந்த பண்ருட்டியை சேர்ந்த தாய்-மகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கடலூர் மாவட்டத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் உள்ள நிலவரப்படி மாவட்டத்தில் 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நேற்று 250 பேரின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரி பரிசோதனை முடிவுக்கு வந்தது. இதில் பண்ருட்டியை சேர்ந்த 35 வயது பெண் மற்றும் இவரது 10 வயது மகனுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 248 பேருக்கு கொரோனா இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் கணவர் டெல்லி மாநாடு சென்று வந்தவர். கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்ததை அடுத்து அவரை மருத்துவமனையில் இருந்து விடுவித்து வீட்டில் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவரது மனைவி மற்றும் மகனுக்கு கொரோனா உறுதியாக இருப்பது வியப்பாக உள்ளது.

இதையடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்ட தாய் மகன் இருவரையும் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் அழைத்துச் சென்றனர். மேலும் இவர்களின் வீட்டை சுற்றிலும் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நேற்று சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து தற்போது அங்கு 20 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள், அறிகுறி காணப்பட்டவர்கள் 6 பேர் கடலூர் அரசு மருத்துவமனையிலும் 39 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் என மொத்தம் 45 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்னும் 255 பேரின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரி பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad