14 நாட்களுக்கு பிறகு பரபரப்பு குமரியில் முதியவருக்கு கொரோனா; அரசு டாக்டருக்கு கொரோனா: குடும்பத்தினர் உள்பட 11 பேருக்கு பரிசோதனை

14 நாட்களுக்கு பிறகு பரபரப்பு குமரியில் முதியவருக்கு கொரோனா கிராமத்தை சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை
14 நாட்களுக்கு பிறகு குமரியில் முதியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வசித்த கிராமத்தை ‘சீல்‘ வைக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

16 பேர் பாதிப்பு

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் 16 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் வசித்த நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை, டென்னிசன் தெரு, அனந்தசாமிபுரம், தேங்காப்பட்டணம் தோப்பு ஆகிய இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு ‘சீல்‘ வைக்கப்பட்டன. இந்த பகுதியில் இருந்து யாரும் வெளியே செல்லக்கூடாது, வெளியில் இருந்த நபர்கள் யாரும் இந்த பகுதிக்கு உள்ளே வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

மேலும் சுகாதாரத்துறையினர் கொரோனா பாதித்த பகுதியில் கிருமி நாசினி தெளிப்பது, பிளச்சிங் பவுடர் போடுவது உள்ளிட்ட பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர். தினமும் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடம் காய்ச்சல், சளி பாதிப்பு இருக்கிறதா? எனவும் கண்காணிக்கப்பட்டது.

10 பேர் குணமடைந்தனர்

இதற்கிடையே ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 10 பேர், அதன் பாதிப்பில் இருந்து மீண்டு குணமடைந்துள்ளனர். இதனால் தற்போதைய நிலவரப்படி 6 பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். அவர்களும் இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்பி விடுவார்கள் என்ற நிலை ஏற்பட்டிருந்தது. மேலும் கடந்த 14 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.

இது குமரி மாவட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இருந்தது. அதே சமயத்தில், வெளியூரில் இருந்து வரும் நபர்களால் குமரியில் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி உள்பட பல இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

முதியவருக்கு புதிதாக தொற்று

இந்த நிலையில் 14 நாட்களுக்கு பிறகு குமரியில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதாவது, மார்த்தாண்டம் மேல்பாலை அருகே மாங்காலை கிராமத்தை சேர்ந்த 67 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

இவருக்கு தொடர்ந்து வயிற்றுவலி அதிகமாக இருந்துள்ளது. இதனால் முதலில் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். எனினும் வயிற்றுவலி குறையாததால் கேரள மாநிலம் பாறசாலை அரசு ஆஸ்பத்திரி சென்ற அவர், தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு காய்ச்சலும் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கொரோனா அறிகுறி இருப்பதால், அவருக்கு ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

குடும்பம் தனிமைப்படுத்துதல்

இந்த தகவலை கேரள சுகாதாரத்துறையினர், தமிழக அரசுக்கு தெரிவித்தனர். இதனையடுத்து குமரி மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறையை உஷார்படுத்தியது. உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மாங்காலை கிராமத்திற்கு விரைந்து சென்று முதியவரின் வீட்டை தனிமைப்படுத்தினர்.

முதியவருடன் அவருடைய மனைவி, 2 மகன்கள், மகள், மருமகள், அவருடைய பேரன்கள் ஆகியோர் வசித்ததாக தெரிகிறது. முதியவரின் மகள் நர்சாக கேரள மாநிலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வருகிறார். இதனால் அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏதேனும் பரவி இருக்கலாம் என்று கருதி அவர்களுடைய ரத்தம், சளி மாதிரி எடுக்க சுகாதாரத்துறையினர் அதற்கான ஆயத்த பணியில் ஈடுபட்டனர்.

பரவியது எப்படி?

முதியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி? என்பது புரியாத புதிராக உள்ளது. அவர் வசித்த சுற்று வட்டார பகுதியில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கிடையாது. இவர் சிகிச்சைக்காக கேரளாவுக்கு செல்வதால் அங்குள்ள நபர் மூலமாக முதியவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும் அதனை சுகாதாரத்துறை உறுதிப்படுத்தவில்லை.

முதியவர், அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி, பாறசாலை அரசு ஆஸ்பத்திரி, நெய்யாற்றின்கரை தனியார் ஆஸ்பத்திரி ஆகிய இடங்களுக்கும் சென்றுள்ளார். இதனால் அந்த பகுதியை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை திருவனந்தபுரம் மாவட்டம், குமரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், மாங்காலை கிராமத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அதற்கான ஆயத்த பணியில் ஈடுபட்டுள்ளது.

பரபரப்பு

ஊரடங்கு வருகிற 3-ந் தேதி முடிவடைகிறது. அதற்குள் ஆசாரிபள்ளத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்து அனைவரும் வீடு திரும்பி விடுவர். கொரோனா இல்லாத மாவட்டமாக குமரி மாறிவிடும் என்ற நம்பிக்கையில் டாக்டர்கள், அதிகாரிகள் இருந்தனர்.

விழுப்புரம் அரசு டாக்டருக்கு கொரோனா: குடும்பத்தினர் உள்பட 11 பேருக்கு பரிசோதனை
விழுப்புரம் அரசு டாக்டருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து கிருஷ்ணகிரியில் அவருடைய குடும்பத்தினர் உள்பட 11 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 5 கி.மீ. தூரத்திற்கு கிருஷ்ணகிரி நகரை சுற்றிலும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் குழந்தைகள் நல மருத்துவராக ஒரு பெண் டாக்டர் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் விழுப்புரத்தில் அரசு டாக்டராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பெண் டாக்டருடன் தந்தையும் வசித்து வருகிறார். விழுப்புரத்தில் பணிபுரியும் டாக்டர் கடந்த வாரம் விடுமுறையில் கிருஷ்ணகிரியில் உள்ள தனது வீட்டிற்கு வந்துவிட்டு நேற்று முன்தினம் விழுப்புரம் சென்றார்.

விடுமுறை முடிந்து பணிக்கு சென்ற அவரை, சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை செய்தபோது, முதல் கட்டமாக அவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. ஆனால், அதிகாரபூர்வமான முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்தநிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள அவரது டாக்டர் மனைவி, தந்தை ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, வீட்டில் தனிமையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், அவரது வீட்டின் கீழ் பகுதியில் வசிக்கும் 9 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்களையும் தனிமையில் வைத்து மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

விடுமுறையில் கிருஷ்ணகிரி வந்த விழுப்புரம் டாக்டர், நகரில் உள்ள மளிகை, காய்கறி கடை மற்றும் பேக்கரி கடைகளுக்கும் சென்று வந்துள்ளார். அதனால் அந்த இடங்கள் குறித்தும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அவரது டாக்டர் மனைவி யாருக்கெல்லாம் சிகிச்சை அளித்தார் என்ற பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து அவர் வசிக்கும் பகுதியில் 5 கி.மீ தொலைவிற்கு கிருஷ்ணகிரி நகரை சுற்றிலும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடைய உறவினர்கள் கிருஷ்ணகிரியில் வசித்து வருகின்றனர். அவர் கடந்த வாரம் கிருஷ்ணகிரிக்கு வந்து சென்றதையடுத்து, அவரது உறவினர்களுக்கு நேற்று ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அவர் வந்து சென்ற வீட்டில் உள்ள நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும், அப்பகுதியை சுற்றி தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்பகுதியில் தற்போது கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு, அப்பகுதி தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. மாதிரி பரிசோதனை முடிவு வந்த பிறகு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.

ரேஷன் கடை பணியாளர்களுக்கு இலவசமாக கொரோனா பரிசோதனைஇன்று நடக்கிறது
ரேஷன்கடை பணியாளர்களுக்கு இலவசமாக இன்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

ரேஷன் கடை பணியாளர்கள்

நாகை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடுகாட்டுராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு வட்டார அளவில் அந்தந்த மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் முன்னிலையில் இலவச கொரோனா பரிசோதனை இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

அதன்படி, நாகை வட்டாரத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார மையத்திலும், திருமருகல் வட்டாரத்தில் திருமருகல் அரசு மருத்துவமனையிலும், கீழ்வேளூர் வட்டாரத்தில் தேவூர் ஆரம்ப சுகாதார மையத்திலும், தலைஞாயிறு வட்டாரத்தில் தலைஞாயிறு அரசு மருத்துவமனையிலும், வேதாரண்யம் வட்டாரத்தில் கரியாப்பட்டினம் அரசு மருத்துவமனையிலும் நடக்கிறது.

இலவச பரிசோதனை

அதேபோல மயிலாடுதுறை வட்டாரத்தில் காளி ஆரம்ப சுகாதார மையத்திலும், குத்தாலம் வட்டாரத்தில் கோனேரிராஜபுரம் ஆரம்ப சுகாதார மையத்திலும், செம்பனார்கோவில் வட்டாரத்தில் ஆக்கூர் ஆரம்ப சுகாதார மையத்திலும், சீர்காழி வட்டாரத்தில் திருவெண்காடு ஆரம்ப சுகாதார மையத்திலும், கொள்ளிடம் வட்டாரத்தில் நல்லாவூர் ஆரம்ப சுகாதார மையத்திலும் நடைபெறுகிறது. இதில் ரேஷன்கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்து பயன்பெறலாம்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad