Matrimony OTT-Platforms Jobs Coupons Business

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு புதிதாக வந்தவர்கள், திரும்பியவர்கள் விவரத்தை தெரிவிக்க வேண்டும்: கலெக்டர் பிரபாகர்; நாகை மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.100 அபராதம்

நாகை மாவட்டத்தில்முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.100 அபராதம்
நாகை மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை கலெக்டர் பிரவீன்நாயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரூ.100 அபராதம்

நாகை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிலையிலும், பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்வது தவறான செயலாகும்.

நோய் தொற்று பரவாமல் தடுக்க வேண்டும் என்றால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். அவ்வாறு முக கவசம் அணியாமல் வெளியில் வரும் நபர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.

வாகனம் பறிமுதல்

மளிகை கடைகள், மருந்து கடைகள், உழவர் சந்தைகள், பால் விற்பனை நிலையங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், உணவகங்கள் போன்ற இடங்களில் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அத்தியாவசிய தேவைகளுக்காக மோட்டார் சைக்கிள்களில் ஒருவர் மட்டுமே வர வேண்டும்.

மோட்டார் சைக்கிள்களின் பின் இருக்கையில் எவரும் உட்காரக்கூடாது. தேவையில்லாமல் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சுற்றினால் மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் வாகனம் பறிமுதல் செய்யப்படும். பொது இடத்தில் எச்சில் துப்புபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு புதிதாக வந்தவர்கள், திரும்பியவர்கள் விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு புதிதாக வந்தவர்கள், மேலும் வெளியூர் சென்று திரும்பியவர்கள் விவரத்தை கலெக்டர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் பிரபாகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் பொதுமக்கள் ஒத்துழைப்போடு செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெளிமாநிலத்திலிருந்தோ, வெளி மாவட்டத்திலிருந்தோ, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்தவர்கள் மற்றும் அத்தியாவசியமான மருத்துவம், திருமணம் மற்றும் இறப்பு போன்ற பல்வேறு பணிகளுக்காக இந்த மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டத்திற்கு சென்று திரும்பியவர்கள் விவரத்தை பொதுமக்கள் உடனடியாக 04343 - 230044, 04343- 234444 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கும் அல்லது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தற்போது வந்தவர்கள் அவர்கள் தாங்களாகவே முன்வந்து கொரோனா நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளுமாறும், அவரவர் வீடுகளிலேயே 28 நாட்கள் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா வைரஸ் நோய் பரவாமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தற்போது புதிதாக மாவட்டத்திற்கு வருகை புரிந்தவர்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு சென்று திரும்பியவர்கள் விவரத்தினை பொதுமக்கள் உடனடியாக மேலே குறிப்பிட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பை சார்ந்த அலுவலர்களும், பிரதிநிதிகளும் இப்பணியை செய்து வருகின்றனர். அவர்களுக்கும் உங்களது முழு ஒத்துழைப்பினை நல்கி வெளிமாநிலத்திற்கோ மற்றும் வெளி மாவட்டத்்திற்கோ சென்று வந்தவர்கள் 28 நாட்கள் வீட்டிலேயே இருந்து தனிமை ப்படுத்தி கொண்டு கொரோனா வைரஸ் நோய் பரவாமல் இருப்பதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

நெல்லை மாவட்டத்தில் பேக்கரி கடைகளை திறக்க அனுமதி கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை மாவட்டத்தில் பேக்கரி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

பேக்கரிகள்

தமிழகத்தில் 144 தடை உத்தரவு காலத்தில் பேக்கரிகள் திறக்க அனுமதி அளித்து தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அவ்வாறு கடைகளை திறந்து விற்பனை செய்யும்போது நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும். கடந்த சில நாட்களாக பேக்கரிகள் மூடி இருந்த காரணத்தால் தங்கள் கடைகளில் உள்ள அலமாரி, பேக்கரி பொருட்கள் வைக்கும் இடம் மற்றும் தயாரிப்பு கூடம், தயாரிக்க பயன்படும் உபகரணங்கள் ஆகியவற்றை முறையாக சுத்தம் செய்து, அதன்பிறகே தங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையை தொடங்க வேண்டும்.


மேலும் ஏற்கனவே தயாரித்து விற்பனையாகாமல் இருந்த அனைத்து பொருட்களும் காலாவதியாகி இருக்கும் என்பதால் அவற்றை முறையாக அழித்து விட்டு, புதிதாக தயாரிக்கும் பேக்கரி பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

பார்சல்

பேக்கரிகளில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அங்கேயே அமர்ந்து சாப்பிடுவது, டீ, காபி மற்றும் குளிர்பானங்கள் அருந்த அனுமதிக்கக்கூடாது. தடைக்காலம் முடியும் வரை பேக்கரியில் டீ, காபி விற்கக்கூடாது. தங்களது பேக்கரியில் தயாரித்த பொருட்களை பொட்டலமிட்டு விற்பனை செய்யும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு துறையால் குறிப்பிட்ட அனைத்து அம்சங்களுடன் கூடிய லேபிள் ஒட்டி, அதன்பிறகே விற்பனை செய்ய வேண்டும். முக்கியமாக தயாரிப்பு தேதி மற்றும் பயன்பாட்டு தேதி ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும்.

பணியாளர்கள் முககவசம், கையுறை மற்றும் தலைமுடி கவசம் அணிய வேண்டும். பணியாளர்களுக்கு இடையே சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு பணியாளரையும் பணிக்கு வரும் முன்பு அவர்களது உடல் நிலையை பரிசோதித்த பிறகே தயாரிப்பு பணிக்கு அனுமதிக்க வேண்டும். சளி, காய்ச்சல் இருந்தால் அவர்களை உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவரை பேக்கரியில் பணிபுரிய அனுமதிக்கக்கூடாது. பேக்கரியின் சுற்றுச்சூழல் மிகவும் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட வேண்டும். உணவு தயாரிக்கும் எந்திரங்கள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும். பேக்கரியின் கதவு, கைப்பிடி போன்ற அடிக்கடி தொடும் இடங்களை கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

அடையாள அட்டை

பேக்கரியில் பிரட், பன், ரஸ்க் மற்றும் பிஸ்கட் போன்றவற்றுடன் இதர தின்பண்டங்களையும் தயாரித்து விற்பனை செய்யலாம். பேக்கரிகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நிறுவன உரிமையாளர் வழங்க வேண்டும். பணியாளர்களை அழைத்து செல்லும் வாகனத்துக்கு அனுமதி சீட்டு பெற வேண்டும்.

மூன்றாம் கட்டத்தில் முதலடியை எடுத்து வைத்து விட்டோம் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகிற நிலையை கைவிட வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்
மூன்றாம் கட்டத்தில் முதலடியை எடுத்து வைத்துவிட்டோம். எனவே, மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகிற நிலையை கைவிட வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் ஒருவர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். 9 பேர் குணமடைந்த நிலையில் திருவண்ணாமலை உள்ள தனியார் மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களும் விரைவில் வீடு செல்ல உள்ளனர். மீதமுள்ள 2 பேர் மட்டும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று முன்தினம் செய்யாறு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த சுகாதார ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளையும் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வீடியோ மூலம் பதிவு செய்து அதனை மக்கள் அறியும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வந்தார். கடந்த ஒருவாரமாக கலெக்டரின் வீடியோ பதிவுகள் எதுவும் பதிவேற்றம் செய்யப்பட வில்லை.

இந்த நிலையில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஒரு வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசியதாவது:-

மகிழ்ச்சியான செய்தியை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று நான் காத்திருந்தேன். அதற்குள் மீண்டும் சுகாதாரத்துறையை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது மிகவும் வருந்தக்கூடிய விஷயம். இந்த வைரசின் 3-ம் நிலையில் ஒரு நபர் கூட பாதிக்கக் கூடாது என்று தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வந்துள்ளது வேதனையாக உள்ளது.

நாம் மூன்றாம் கட்டத்திற்கு செல்வதற்கு உள்ளான முதலடியை எடுத்து வைத்து விட்டோம். இவரின் பணி என்னவென்றால் வெளிநாடுகளில் இருந்து வந்த 20 பேரின் குடும்பத்தை கண்காணிப்பது மற்றும் பரிசோதனை செய்வது. அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை. தற்போது அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவரது தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் அவர்களை கண்டுபிடித்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும். இதற்காக தான் சமூக இடைவேளியை பின்பற்றுங்கள் என்று தெளிவாக கூறி வருகிறோம். ஆரம்பத்தில் இருந்தது போன்று மக்கள் தற்போது இல்லை. சின்ன இடைவெளி கிடைத்தாலும் அவர்கள் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

நாங்கள் உங்களை வீட்டில் இருங்கள் என்று கூறுவது துன்புறுத்துவதற்காகவும், கஷ்டப்படுத்துவதற்காகவும் இல்லை. நிரந்தரமாக மகிழ்ச்சியாக வைப்பதற்காக தான். இலவசமாக பொருட்கள் கொடுக்கிறேன் என்று சிலர் சொல்வார்கள் அதை விரும்பி யாரையும் உங்கள் கிராமத்திற்குள் தேவையின்றி விடாதீர்கள். நீங்கள் தான் உங்கள் கிராமத்தையும், கிராமத்து மக்களை பாதுகாக்க வேண்டும். வெளியாட்களை உள்ளே வர விடாதீர்கள்.

வருகிற 3-ந் தேதி வரைக்கும் நாம் அனைவரும் கடுமையாக இருந்தால் தான் முழுமையாக விடுபட முடியும். இல்லையென்றால் இந்த நிலை தொடர வாய்ப்பு உள்ளது. முதல் நாளில் எப்படி இருந்தீர்களோ அதேபோல் இன்று முதல் வருகிற 3-ந் தேதி வரை இருந்தால் தான் இந்த நோயில் இருந்து உங்களை காப்பாற்ற முடியும். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு மூலம் உங்களுக்கு தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகிற நிலையை கைவிட வேண்டும். அரசுக்கு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

நாளை முதல் அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - கலெக்டர் வினய் அறிவிப்பு
அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கலெக்டர் வினய் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு உத்தரவால் காய்கறிகள், பழங்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள கடைகளுக்கு ஒரு நபர் மட்டுமே சென்று வாங்கிக் கொள்ள வேண்டும். அதே போல் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத முதியோர்கள் மற்றும் உடலால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் ஏதேனும் தேவைப்பட்டால் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 8428425000-ல் தகவல் தெரிவித்தால் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் வாகன அனு மதி சீட்டு பெற்ற வாகனங்களை தவிர்த்து வேறு எந்த வாகனமும் வெளியே வந்தால் நாளை (சனிக்கிழமை) முதல் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படும். நாளை முதல் இருசக்கர வாகனங்களில் தேவையின்றி சுற்றி திரிந்தால் அபராதம் விதிக்கப் படும். மருத்துவப் பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரது வாகனங்களுக்கு மட்டுமே இதில் இருந்து விலக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஏதேனும் கோரிக்கை இருந்தால் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் 24 மணிநேர அவசரகால கட்டுப்பாட்டு அறையை 04522546160 என்ற தொலைபேசி எண்ணுக்கும், செல்போன் எண் 9597176061 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-க்கும் தொடர்பு கொள்ளலாம். மதுரை மாவட்டத்தை கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மதுரையில் தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் வினய், அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் திரும்பினார். அப்போது கோரிப்பாளையம் அருகே வந்த போது சாலையில் அதிக வாகனம் சென்று கொண்டு இருந்தது. அதனால் காரில் இருந்து இறங்கிய கலெக்டர் வினய் தானே நேரிடையாக வாகன சோதனையில் ஈடுபட்டார்.

ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி எங்கு செல்கிறீர்கள், எதற்கு செல்கிறீர்கள், அனுமதி இருக்கிறதா என்ற கேள்விகளை கேட்டார். சரியான பதில் இல்லாத, அனுமதி இல்லாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி போலீசாரும் நடவடிக்கை எடுத்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கலெக்டர் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பிய லாரி டிரைவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்: கலெக்டர் மெகராஜ் அறிவுறுத்தல்
வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பிய லாரி டிரைவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் மெகராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பிய லாரி டிரைவர்கள் தாங்களாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் மெகராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றி சென்று வந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் ஒருவர் தனக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் இல்லாத நிலையிலும், தாமாகவே அரசு மருத்துவமனையில் தான் வெளிமாநிலங்களுக்கு சென்று வந்ததால், தனக்கு பரிசோதனை செய்து கொண்டார். மேலும் தன்னுடன் லாரியில் வந்த கூடுதல் டிரைவர்கள் மற்றும் உதவியாளர்களையும் கொரோனா பரிசோதனைக்கு அழைத்துச் சென்று உள்ளார். இவரது சிறந்த முன் உதாரணமான செயல்பாடு மிகுந்த பாராட்டுக்கு உரியதாகும்.

கொரோனா நோய் தொற்று தற்போது அதன் அறிகுறிகளான சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட எந்த ஒரு அறிகுறியையும் வெளிப்படுத்தாமல் பரவும் நிலை உள்ளதால், வெளிமாநிலங்களுக்கு சென்று வந்த லாரி டிரைவர்கள் தாங்களாகவே நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

வெளிமாநிலங்களுக்கு சென்று வந்த டிரைவர்கள் தங்களுக்கு உள்ள உடல் ஆரோக்கிய நிலையினால் நோய் தொற்றின் அறிகுறி வெளியே தெரியாவிட்டாலும், இவர்களது வீட்டில் உள்ள முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோய் தொற்றினை ஏற்படுத்தி விடக்கூடும். எனவே பொதுமக்கள் காய்ச்சலுக்கு தாங்களாகவே மருத்துவம் செய்து கொள்ள கூடாது.

காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனா நோய் தொற்று குறித்து விழிப்புடன் இருந்து, நோய் தொற்று பரவாமல் தடுக்க அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad