1,000 பேருக்கு ஆயுள் மருத்துவ காப்பீட்டு ஆவணங்களை சொந்த செலவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

கோபி பகுதியில் 1,000 பேருக்கு ஆயுள் மருத்துவ காப்பீட்டு ஆவணம்: சொந்த செலவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், குடிநீர் திட்ட பணியாளர்கள் மற்றும் அம்மா உணவக பணியாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முழுவீச்சில் ஈடுபட்டு 24 மணி நேரமும் சேவையாற்றி வருகின்றனர். தங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கை ஏற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் எம்.எல்.ஏ.வும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தனது சொந்த செலவில் ஆயுள் மருத்துவக்காப்பீடு செய்து அதற்கான ஆவணங்களை 1,000 தூய்மை பணியாளர்கள், குடிநீர் திட்ட பணியாளர்கள், அம்மா உணவக பணியாளர்கள் 1,000 பேருக்கு அந்தந்த நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வழங்கினார்.

இந்த காப்பீடு ஒருவருக்கு ரூ.450 வீதம் செலுத்தப்பட்டு அதில் உயிரிழப்புக்கு ரூ.4 லட்சம் கிடைக்கும் வகையிலும் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் வகையிலும் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. பின்னர் அமைச்சர், ஊராட்சி மன்றங்களில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசஉடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், கிருமி நாசினிகளை வழங்கினார். மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் பயனுக்காக நடமாடும் ஏ.டி.எம். எந்திர வாகனத்தையும் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து வேளாண்மைத்துறையின் சார்பில் கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடமாடும் உர விற்பனை மைய வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்து மின்னணு பண பரிவர்த்தனை வசதியையும் அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சிகளில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், ஆர்.டி.ஓ. ஜெயராமன், துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி, வருவாய் தாசில்தார் சிவசங்கர், வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் ரஷிக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகளின் போது அமைச்சரும் கலெக்டரும் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad