CRIMINALCASE - 16-03-2020

மது அருந்துவது தொடர்பாக மோதல் ரவுடி அடித்துக்கொலை படுகாயங்களுடன் ஒருவர் கைது


சென்னை பெரியமேடு பட்டுநூல் சர்தார் ஷா தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 24). ரவுடியான இவர், கூலி வேலையும் செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்கள் அருண்குமார், ரித்திஷ் ஆகியோருடன் சூளை ரவுண்டானா அருகே நின்று கொண்டிருந்தார்.


அப்போது சூளை வி.வி.கோவில் தெருவைச் சேர்ந்த பாலு(26), புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஹேமந்த்குமார், தங்கம் ஆகிய 3 பேர் அங்கு வந்தனர். அவர்கள் அருண்குமாரிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் மணிகண்டன், அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவலறிந்த பெரியமேடு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் இருதரப்பினரும் தப்பி ஓடிவிட்டனர்.

இந்தநிலையில் மணிகண்டனை கொலை செய்த கும்பல் யானைகவுனி பாலம் பகுதியில் பதுங்கி இருப்பதாக நேற்று அதிகாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, ரத்த காயங்களுடன் பாலு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.

விசாரணையில் அவர், ‘மணிகண்டனை நாங்கள்தான் கொலை செய்தோம். அதற்காக அருண்குமார் என்னை தாக்கிவிட்டார்’ என்று கூறினார். இதையடுத்து பாலு கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url