தூத்துக்குடி மக்கள் அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்பித்து விட்டனர்- கமல்ஹாசன்
தூத்துக்குடியில் மக்கள் பாடம் கற்பித்துவிட்டனர் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாகவும் நிலத்தடி நீர், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலையை உடனடியாக மூடக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். அதில் பேரணி சென்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் பேரில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சீல் வைத்தனர்.
இதற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தொடர் டுவீட்டுகளில் கூறுகையில் ஸ்டெர்லைட் ஆலை மூடல் அறிவிப்பை வரவேற்கிறேன். க்களின் வலிமை வென்றுவிட்டது. தூத்துக்குடி மக்களின் வெற்றிக்கு தமிழகம் தலைவணங்குகிறது. தூத்துக்குடி தியாகிகளுக்கு பெரும் சல்யூட் . தூத்துக்குடிக்காக உயிர் நீத்தவர்களிடமிருந்து பாடம் கற்போம். தமிழகத்தின் எதிர்கால அரசியலை தூத்துக்குடி மக்கள் மாற்றியுள்ளனர்.
மாற்றத்தை விரைவுபடுத்த மொத்த தமிழகமும் இனி கை கொடுக்கும். அரசியல்வாதிகளின் பணி என்ன என்பதை தூத்துக்குடி மக்கள் தெளிவுபடுத்தி விட்டனர். இதை மக்கள் நீதி மய்யம் முன்னெடுத்துச் செல்லும். ஒரு தமிழனாக பெருமைப்படுகிறேன், கெளரவமாக உணர்கிறேன். எந்த செய்தியையும் இனி கையைக் கட்டிக் கொண்டு நாம் வேடிக்கை பார்க்க மாட்டோம். மாற்றத்தை நாம் ஆரம்பித்து விட்டோம்.
100 நாட்களுக்கும் மேலான மக்கள் போராட்டத்தை தமிழக அரசு கவனத்துடன் அணுகியிருக்கலாம். இதுபோன்ற பிரச்சினையில் விரைந்து செயல்பட்டிருக்க வேண்டும். தேவையில்லாத உயிர்ப்பலிகளையும், துரதிர்ஷ்டவசமான சம்பவங்களையும் நாம் தவிர்த்திருக்கலாம்.
ஆலை மூடலை எதிர்க்கும் சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும். தற்போதைய உத்தரவு நிரந்தரமாக அமலாக்கப்படுவதையும் மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றார் கமல்ஹாசன்.