நல்லகண்ணு ஒப்புதல் பெறாமல் கமல் அறிவிப்பு.. பரபரப்பை கிளப்பிய முத்தரசன்
மக்கள் நீதி மய்யத்தின் காவிரி கூட்டத்திற்கு தலைமையேற்க இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு ஒப்புதல் தரவில்லை என்றும், அவருடைய ஒப்புதல் இல்லாமலேயே கமல் இந்த முடிவினை தன்னிச்சையாக அறிவித்துள்ளதாகவும் முத்தரசன் தெரிவித்துள்ளார். காவிரி வரைவு திட்ட அறிக்கை தமிழகத்திற்கு சாதகமாக இல்லை என்று எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்காக வரும் 19ம் தேதி ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட உள்ளார். அந்த கூட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நல்லகண்ணு தலைமை தாங்க உள்ளதாக அறிவித்திருந்தார். மேலும் கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததுடன், கட்சி தலைவர்களை நேரிடையாக சந்தித்து அழைப்பும் விடுத்து வருகிறார்.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் சென்னை கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நடைபெறும் காவிரி கூட்டத்திற்கு கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு தலைமை ஏற்க ஒப்புதல் தரவில்லை என்றும், நல்லகண்ணுவின் ஒப்புதல் இல்லாமலேயே கமல் தன்னிச்சையாக இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். காவிரி விவகாரம் குறித்து நல்லக்கண்ணு தலைமையில் சென்னையில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்று கமல் அறிவித்திருந்த நிலையில் முத்தரசன் மறுப்பு வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.