கமல் எனக்கு எதிரி இல்லை.. நான் எதிர்க்கப்போவதும் இல்லை.. - ரஜினிகாந்த்
கமல் தனக்கு எதிரி இல்லை என்றும், அவரை தான் எதிர்க்கப்போவது இல்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் பலர் பேசிப் பேசியே அரசியல் செய்துவிட்டார்கள் அது போதும் என்றும் அவர் கூறியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு தமிழக மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகும். சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஆலைகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், ரஜினி ஆன்மீக அரசியலை முன்னெடுத்தால் அதை எதிர்ப்பேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருப்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி, கமல் தனக்கு எதிரி இல்லை என்றும், தான் கமலை எதிர்க்கப்போவது இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், ஏழ்மை, வேலையில்லாத் திண்டாட்டம், லஞ்சம், ஏழைகளின் கண்ணீர், விவசாயிகள் மீனவர்கள் பிரச்னை, ஈழத்தமிழர் பிரச்னை ஆகியவையே தன்னுடைய எதிரிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நிறைய பேசுவதால் எதிரிகள் தான் அதிகமாவார்கள் என்றும், இதுவரை தமிழகத்தில் நிறைய பேசி பேசி அரசியல் செய்துவிட்டார்கள். இனி அது மாற வேண்டும் என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.