சினிமா பிரபலங்களின் எடை குறைப்பு ரகசியம் !






நிஜ வாழ்வில் 2 கிலோ எடையைக் குறைக்கவே படாத பாடுபடுகிறோம். கொஞ்சம் எடை போடலாம் என்றால் அதுவும் அத்தனை சீக்கிரம் நடப்பதில்லை. ஆனால், அடுத்த படத்துக்காக 10 கிலோ எடை கூடினார் கமல், 18 கிலோ எடை குறைந்தார் நமீதா என்று சினிமா நட்சத்திரங்கள் பற்றி அவ்வப்போது சாதாரணமாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ‘ரெட்’ படத்தில் வெயிட் போட்டிருந்த அஜித், ‘பரமசிவன்’ படத்தில் பாதியாக வந்து நின்று தெறிக்க வைத்தார். சமீபத்திய சிக்ஸ்பேக் சீஸனில் சூர்யா முதல் பரத், அதர்வா வரை பலரும் கலந்து கொண்டு இந்திய அளவில் டிரெண்டானார்கள். எல்லோரையும் விட, படத்துக்குப் படம் கூடுவிட்டுக் கூடு பாயும் விக்ரம் செய்வதெல்லாம் அநியாயம்… அக்கிரமம்! ‘சேது’வில் இளைத்துக் காட்டியவர், ‘தில்’ படத்தில் கட்டுமஸ்தானார்.

‘ஐ’ படத்தில் அதிர வைத்தார். 14 கிலோ எடை குறைத்தார், ஒரு பாடல் காட்சிக்காக 110 கிலோ வரை எடை கூடினார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. இந்த வெயிட் மேஜிக் வரிசையில் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் குண்டுப் பெண்ணாக நடிப்பதற்காக எடை கூடிய அனுஷ்கா, இப்போது மீண்டும் பழைய எடைக்கு வருவதற்கான முயற்சியில் இருக்கிறார் என்கிறார்கள். சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டும் எப்படி இந்த வெயிட் மேஜிக் சாத்தியமாகிறது? பல சினிமா நட்சத்திரங்களின் ஆஸ்தான ஃபிட்னஸ் டிரெயினரான ஜெயக் குமாரிடம் கேட்டோம்...‘‘ஒருவருக்கு சராசரியாக 2 ஆயிரத்து 400 கலோரி சக்தி உள்ள உணவுகள் தேவை. இது ஒருவருடைய வேலை, எடை, வயது போன்றவற்றின் அடிப்படையில் மாறுபடும்.

இந்த தேவையான கலோரி அளவை மட்டுமே சரியாக எடுத்துக்கொண்டால் அதே எடையைத் தக்கவைத்துக் கொள்ளலாம், கலோரிகள் தேவைக்கும் அதிகமானால் எடையும் அதிகமாகும். போதுமான கலோரிகள் எடுத்துக் கொள்ளாத பட்சத்தில் எடை குறையும். புரத உணவுகளை எடுத்துக்கொண்டு, உடற்பயிற்சிகள் செய்தால் தசைகள் வலிமையடையும். உடற்பயிற்சி இல்லாவிட்டால் கொழுப்பாக எடை கூடும். இதுதான் அடிப்படை. நடிகர், நடிகைகள் சாதாரணமாக எடை குறைப்பிலோ, அதிகரிப்பதிலோ ஈடுபட மாட்டார்கள். முறைப்படி ஒரு மருத்துவரையோ, ஃபிட்னஸ் டிரெயினரையோ ஆலோசித்துத்தான் இதுபோன்ற முயற்சியில் ஈடுபடுவார்கள். பல சினிமா நட்சத்திரங்களும் இதுபோல் புரொஃபஷனலாகத்தான் எடையைக் குறைத்துக் கூட்டுகிறார்கள்.

சினிமா பிரபலங்களைப் போல நாமும் எடையைக் கூட்ட வேண்டும், குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தகுதி வாய்ந்த ஃபிட்னஸ் டிரெயினரின் மூலமே முயற்சிகளைச் செய்ய வேண்டும். குறிப்பாக, உடலில் பிரச்னை எதுவும் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடை சம்பந்தப்பட்ட முயற்சிகளைச் செய்யவே கூடாது’’ என்கிறார். எடையைப் பராமரிப்பதில் நாம் செய்கிற தவறுகள் என்னென்ன? ‘‘சிலர் நள்ளிரவில் தூங்கச் செல்கிறார்கள். காலை 10 மணிக்கு மேல் எழுகிறார்கள். இதுபோல தாமதமாகத் தூங்கும்போது ஹார்மோன் மாற்றங்கள் தலைகீழாக நடக்கும். தூக்கமின்மையால் கார்ட்டிசோல் ஹார்மோன் அதிகமாக சுரந்து இடுப்பில் சதைபோடும். எளிதில் கவலைப்படுகிறவர்களுக்கு, உணர்ச்சி வசப்படுகிறவர்களுக்கு, டென்ஷன் காரணமாக இந்த கார்ட்டிசோல் ஹார்மோன் அதிகம் சுரக்கும்.



ஒருவர் சரியாக சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்தாலும் நேரம் கடந்து சாப்பிட்டு, இரவு சரியாக தூங்காமல் தவறான லைஃப் ஸ்டைலில் இருந்தால் எடை போடும். மூளையில் இருந்து சுரக்கும் Growth hormone ஒருவர் இளமையாக இருக்கவும், தசைகளின் வளர்ச்சிக்கும், கொழுப்பைக் கரைக்கவும் பயன்படுகிறது. இந்த ஹார்மோன் உடற்பயிற்சி செய்யும்போதும், இரவில் தூங்கும்போதும்தான் அதிகம் சுரக்கும். அதனால்தான் இரவு தூக்கத்தை Beauty sleep என்கிறார்கள். சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுகிறவர்களுக்குத்தான் Growth hormone மூலமாகப் பலன்கள் கிடைக்கும். அதனால் இரவு உறக்கம் என்பது எடை பராமரிப்பில் மிகவும் அவசியம். இன்னொன்று இயற்கைக்கு எதிரான எந்த செயலையும் செய்யக் கூடாது.  ‘மருதநாயகம்’ ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை கமல் சாருக்கு டிரெயினராக இருக்கிறேன்.

ஒவ்வொரு படத்துக்குத் தகுந்தாற்போலவும் உடலை மாற்றுவார். ஆனால், அது முறைப்படிதான் நடக்கும். ‘ஆளவந்தான்’ படத்தின் நந்து கேரக்டருக்காக 12 கிலோ எடை கூடினார். அதே படத்தில் விஜய் என்கிற இன்னொரு கேரக்டருக்காக எடையைக் குறைத்து ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற ரிஸ்க் இருந்தது. அதற்காக இயற்கைக்கு எதிரான எந்த முயற்சிகளையும் நாங்கள் செய்யவில்லை. பாடி பில்டர்கள் செய்யக் கூடிய கடினமான எடைப் பயிற்சிகளை செய்தார். சிக்கன், மீன் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை நிறைய எடுத்துக் கொண்டார். புரோட்டீன் பவுடரை அமெரிக்காவில் இருந்து வரவழைத்தோம். விஜய் கேரக்டர் எடுக்கும்போது அதற்குத் தகுந்தாற்போல உணவை மாற்றி, எடை பயிற்சிகளைக் குறைத்தோம். இயற்கையான உணவுமுறை, உடற்பயிற்சியின் மூலமே எடையைக் கூட்டி, குறைக்க வேண்டும்.

இயற்கைக்கு எதிரான வழிகள், செயற்கையான சிகிச்சைகள் உடனடியாகப் பலன் தந்தாலும் எதிர்காலத்தில் பெரிய பக்கவிளைவுகளைத் தரும்’’ என்று எச்சரிக்கிறார். நடிகர்கள் எப்படி தயாராகிறார்கள் என்று ஆன்டி ஏஜிங் மற்றும் லைஃப் ஸ்டைல் மேனேஜ்மென்ட் நிபுணரான கௌசல்யா நாதன் விளக்குகிறார். ‘‘பல படங்களில் நடிகர், நடிகைகளுடன் பணிபுரிந்திருக்கிறேன். படம்  தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே நடிகர்களைத் தயார் செய்ய ஆரம்பித்துவிடுவோம். உடல்ரீதியாக ரத்தப் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, வைட்டமின், மினரல் பரிசோதனை செய்துவிடுவோம். அதன்பிறகு, அவர்களின் உடல்நிலைக்கு ஏற்றவாறு என்னென்ன உணவுகள் சாப்பிட  வேண்டும், என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று  தீர்மானிப்போம். எடையைக் குறைக்க வேண்டும் என்றால் மாதத்துக்கு 2  கிலோ எடையைக் குறைக்க வைப்போம்.

3 மாதங்களில் 6 கிலோ எடை குறைந்தவுடன்  அடுத்தகட்டமாக மீண்டும் ஒரு டயட்டை வடிவமைப்போம், உடற்பயிற்சிகளைத் தீர்மானிப்போம். அதன்பிறகு, மாதம் ஒரு கிலோ குறைந்தால் போதும். உணவில் காய்கறிகள் சூப் சேர்ப்போம், புரதச்சத்துகளைக் கொஞ்சம் பேலன்ஸ் பண்ணுவோம். உடலின் நிலையைப் பொறுத்து சர்க்கரை சேர்த்தோ சேர்க்காமலோ ஜூஸ் சாப்பிட வைப்போம். இதுபோல பல கட்ட முயற்சிகள் நீங்கள் திரையில் பார்ப்பதற்குப்  பின்னால் இருக்கிறது’’ என்பவர், திருமணத்துக்குப் பின் நடிகைகள் ஏன்  குண்டாகிவிடுகிறார்கள் என்பதையும் விளக்குகிறார். ‘‘பெண்களுக்கு  இயல்பாகவே திருமணம், குழந்தை பிறப்புக்குப் பின் எடை கூடிவிடும். இதற்கு  கர்ப்ப காலத்தில் எடை கூடுவது முக்கிய காரணமாக இருக்கிறது. கர்ப்ப  காலத்தில் 12 கிலோ வரை எடை கூடலாம். இந்த எடையைக் கண்காணிக்க வேண்டும்.  

குழந்தை பிறந்த நான்காவது மாதத்திலிருந்து தங்களுடைய எடையைக் குறைக்க  முயற்சிக்க வேண்டும். குழந்தைக்கு ஒரு வயது ஆகும்போது, அம்மா பழைய எடைக்கு  வந்திருக்க வேண்டும். இந்த கட்டத்தில் அலட்சியமாக இருந்தால் அதன்பிறகு  எடையைக் குறைப்பது சிரமமாகிவிடும். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்  பிரச்னை இருந்தாலும் எடையைக் குறைப்பது சிக்கலாகும். மெனோபாஸ் நிலை, ஹார்மோன் கோளாறுகளால் அதிகம் சாப்பிட வேண்டும் என்கிற மனநிலை ஏற்படுவது போன்ற பல காரணங்கள் இருக்கிறது. அதனால், அந்தந்த காலகட்டங்களில் எடையைக் கண்காணித்துக் கொண்டே இருப்பது அவசியம்’’ என்கிறார் டாக்டர் கெளசல்யா. மூளையில் இருந்து சுரக்கும் Growth hormone ஒருவர் இளமையாக இருக்கவும், தசைகளின் வளர்ச்சிக்கும், கொழுப்பைக் கரைக்கவும் பயன்படுகிறது.

இந்த ஹார்மோன் உடற்பயிற்சி செய்யும்போதும், இரவில் தூங்கும்போதும்தான் அதிகம் சுரக்கும். அதனால் இரவு உறக்கம் என்பது எடை பராமரிப்பில் மிகவும் அவசியம்!’’ எடை கூடுவதற்கும் குறைவதற்கும் என்ன காரணம் என்று நாளமில்லா சுரப்பிகள் சிறப்பு மருத்துவரான ராம்குமாரிடம் கேட்டோம். ‘‘தேவைக்கும் அதிகமாக சாப்பிடுவது, நொறுக்குத் தீனிகள், நேரம் தவறி சாப்பிடுவது, உடற்பயிற்சியே இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் எடை கூடும். இந்த காரணங்களை நாமே தவிர்த்துவிட முடியும். மருத்துவரீதியாக குறை தைராய்டு, தூக்கமின்மை, அதிகமாக சுரக்கும் இன்சுலின், ஸ்டீராய்டு ஹார்மோன், மூளையில் இருக்கும் பிட்யூட்டரியில் ஏற்படும் சமன்குலைவு, மருந்துகள் எடுத்துக்கொள்வது, பாலிசிஸ்டிக் ஓவரீஸ் சிண்ட்ரோம், மாதவிலக்கு சிக்கல் போன்ற காரணங்களால் எடை கூடும்.

கட்டுப்பாடற்ற நீரிழிவு, அதீத தைராய்டு, மன அழுத்தம், உணவைப் பார்த்தாலே அலர்ஜியாகும் அனோரெக்ஸியா நெர்வோஸா போன்ற மன நோய்களால் எடை குறையலாம். இதுபோன்ற உடல்ரீதியான பிரச்னைகள் இருப்பவர்கள் என்னதான் உணவைக் குறைத்தாலும், என்னதான் உடற்பயிற்சிகளைச் செய்தாலும் எந்த பயனும் கிடைக்காது. அடிப்படைப் பிரச்னையைச் சரி செய்தால்தான் பலன் கிடைக்கும். ஜங்க் ஃபுட் உணவுகளைத் தவிர்த்து, சரிவிகிதமாக உணவுகளை எடுத்துக் கொண்டு, போதுமான உடற்பயிற்சிகள் செய்தாலே போதும். குறைந்தபட்சம் அரை மணி நேர நடைப்பயிற்சியே போதும். இதைத் தவிர்த்து வேறு எந்த குறுக்கு வழியிலும் எடை முயற்சிகளைச் செய்யக் கூடாது’’
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad