மன அழுத்தத்தை போக்கும் ஜாதிமல்லி





நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மனஅழுத்தத்தை போக்க கூடியதும், தோல்நோய்களை குணப்படுத்தும் தன்மை உடையதுமான ஜாதிமல்லியின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் நாம் காணலாம். ஜாதிமல்லியின் பூக்கள், இலைகள், வேர் ஆகியவை மருத்துவ பயன்களை மிகுதியாக கொண்டவை. இந்த பூக்கள் மிகுந்த மணம் உடையது.

மனக் குழப்பத்தை போக்கும் மணத்தை தருகிறது. இதை தேனீராக பருகும்போது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். காய்ச்சலை தணிக்கும். வலி, வீக்கத்தை போக்கும். இதன் இலைகள் காது வலி, கண் வலி, வாய்ப்புண், ஈறுகளில் ஏற்படும் நச்சுகளை போக்கும் மருந்தாகிறது. ஜாதிமல்லி பூக்களை பயன்படுத்தி மன அழுத்தத்தை போக்கி நல்ல தூக்கத்தை வரவழைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஜாதிமல்லி பூ, பால், தேன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதில், 15 முதல் 20 ஜாதிமல்லி பூக்களை போடவும்.

இதை கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது பால், தேன் சேர்த்து கலந்து குடித்துவர நல்ல தூக்கம் வரும். மன அழுத்தம் விலகும். காய்ச்சல் தணியும். குமட்டல், வாந்தியை தடுக்கிறது. தொடர் இருமலை தணிக்கிறது. மனதுக்கு இதமான சூழலை தருகிறது. மன உளைச்சலை போக்கும். ஜாதிமல்லி பூக்களை கொண்டு தோலில் உண்டாகும் சுருக்கங்களை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், ஜாதிமல்லி. செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.

இதனுடன் நீர்விடாமல் அரைத்து வைத்திருக்கும் ஜாதிமல்லி பூக்களை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி தோலின் மீது பூசிவர தோல் சுருக்கங்கள் மறையும். நச்சுக்களை வெளியேற்றும். நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை போக்கும். தோலில் ஏற்படும் நிறமாற்றத்தை தடுக்கிறது. சுருக்கங்களை போக்கி தோலுக்கு பளபளப்பு, மென்மை, அழகை தருகிறது. ஜாதிமல்லி இலைகளை பயன்படுத்தி பூஞ்சை காளான் தொற்று, சிவப்பு தன்மை, அரிப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய், ஜாதிமல்லி பூ. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். இதனுடன், நீர்விடாமல் அரைத்து வைத்திருக்கும் ஜாதிமல்லி இலைகளை சேர்த்து தைலப்பதமாக காய்ச்சி எடுக்கவும். பொடுகுக்கான மேல் பூச்சாக இந்த தைலத்தை பயன்படுத்தலாம். தலையில் 10 நிமிடம் ஊறவைத்து வாரம் ஒருமுறை குளித்துவர பொடுகு சரியாகும். சொரியாசிஸ் உள்ளவர்கள் இதை மேல் பூச்சு தைலமாக பயன்படுத்தலாம். பூஞ்சை காளான்களால் ஏற்படும் தொற்று நீங்கும்.

காதில் சீல் வடியும் நிலையில் ஓரிரு சொட்டுகள் விட்டுவர காது பிரச்னை சரியாகும். இலைகளை அரைத்து கால் ஆணி மீது பூசி வர கால் ஆணி மறையும். அதிகமான காய்ச்சலால் உதடுகளை சுற்றி ஏற்படும் கொப்புளங்கள், புண்களை ஆற்றும் எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம். சீரகத்தை நன்கு பொடியாக அறைத்து பசு வெண்ணெய் சேர்த்து கலந்து பூசிவர கொப்புளங்கள், புண்கள் குணமாகும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad