பாஜகவே முதன்மை எதிரி, ராகுலுக்கு பாராட்டு : சிவசேனா அதிரடி
மும்பை:
பாஜக தான் தங்களின் எதிரி என சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் நடவடிக்கைகளில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக அவர் புகழ்ந்துள்ளார். பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் சிவசேனா அண்மைக்காலமாக அக்கட்சியை தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா சமீபகாலமாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. அக்கட்சி பத்திரிக்கையான சாம்னாவில் பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் வெளிவருகின்றன.
சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்பியுமான சஞ்சய் ரவுத் நாடுமுழுவதும் வீசிய மோடி அலை தற்போது மங்கிவிட்டது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாட்டை வழிநடத்த ராகுல் காந்தி தயாராகி விட்டார்' எனக் கூறி கருத்து கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பதிலடி கொடுத்த மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், 'கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள சிவசேனா எதிர்கட்சிகளை போல தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதை ஏற்க முடியாது. கூட்டணியில் தொடருவதா? அல்லது வெளியேறுவதா? என்பதை அக்கட்சி முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் சஞ்சய் ரவுத் மீண்டும் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் நாங்கள் கூட்டணி அரசில் பெயரளவிற்கு தான் உள்ளோம். மக்களின் எண்ணங்களைத் தான் நாங்கள் பிரதிபலிக்கிறோம். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் செயல்பாடுகளில் சமீபகாலமாக மாற்றம் தெரிகிறது. அவரது பேச்சை மக்கள் கூர்ந்து கவனிக்கின்றனர். எங்கள் இரு கட்சிகளுக்கும் முதன்மையான எதிரி பாஜக தான் எனக் கூறினார்.