எளிதாக தொழில் தொடங்கும் நாடுகள் 30 இடங்கள் முன்னேறி 100வது இடத்தில் இந்தியா: உலக வங்கி அறிக்கை
வாஷிங்டன்:
தொழில் தொடங்குதல் 2018 - வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான சீரமைப்புகள் என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில் கூறியிருப்பதாவது: எளிதாக தொழில் தொடங்குவது தொடர்பாக 190 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 130வது இடத்தில் இருந்த இந்தியா அபாரமாக 30 இடங்கள் முன்னேறி 100வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. மிக எளிதாக தொழில் தொடங்கும் நாடுகளில் நியூசிலாந்து, சிங்கப்பூர், டென்மார்க் முதலிடத்தில் உள்ளன. சீனா 78வது இடத்தை பெற்றுள்ளது. முந்தைய ஆண்டுகளை விட இதன் நிலையில் பெரிய முன்னேற்றம் இல்லை. மிக அபாரமான முன்னேற்றம் அடைந்தது இந்தியாதான்.
இதுபோல் கடந்த 4 ஆண்டுகளில் 37 சீரமைப்புகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. புதிதாக தொழில் தொடங்குவதில் எளிமை, விரைவான நடைமுறை, மாநிலங்களுக்கு இடையே வர்த்தகம் என பல வகையிலும் நடைமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளது. இருப்பினும் ஒப்பந்தம், கட்டுமான பணிகளுக்கு அனுமதி போன்றவற்றுக்கு 30 நாள் ஆகிறது என உலக வங்கி கூறியுள்ளது. 2014ம் ஆண்டில் இந்தியா 142வது இடத்தில் இருந்தது. பிரிக் நாடுகளில் ரஷ்யா 35வது இடம் பிடித்துள்ளது என உலக வங்கி கூறியுள்ளது. பண மதிப்பு நீக்கம், அவசர கதியில் ஜிஎஸ்டி அமலாக்கத்தால் தொழில்துறை முடங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், இந்த ஆய்வில் ஜிஎஸ்டியை உலக வங்கி கணக்கில் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.