டி20ல் நியூசிலாந்து அணியை வென்றதில்லை! சோக வரலாற்றை மாற்றுமா இந்தியா?



புதுடெல்லி: 

இந்தியா - நியூசிலாந்து மோதும் முதல் டி20 போட்டி, டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. சர்வதேச டி20ல் நியூசிலாந்து அணியை இதுவரை வென்றதில்லை என்ற மோசமான வரலாற்றை, இப்போட்டியில் இந்திய அணி மாற்றி எழுதுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதியது. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினாலும், நியூசிலாந்து வீரர்கள் கடைசி வரை கடுமையாகப் போராடி நெருக்கடி கொடுத்தனர். சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த தொடரில் கூட முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள், நியூசிலாந்திடம் சற்று தடுமாறவே செய்தனர்.




இந்த நிலையில், அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கைகலக்கின்றன.

இந்த வகை போட்டியில் எல்லா அணிகளுக்கு எதிராகவும் இந்தியா வெற்றிகளைக் குவித்திருந்தாலும், நியூசிலாந்து மட்டும் இதில் விதிவிலக்காகவே உள்ளது.
அந்த அணியுடன் மோதிய 5 டி20 போட்டிகளிலுமே இந்தியா மண்ணைக் கவ்வியுள்ளது. இந்த சோக வரலாற்றை கோஹ்லி & கோ மாற்றியமைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்கும் முதல் டி20 போட்டி இந்திய அணிக்கு சவாலாகவே இருக்கும். ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி ரன் குவித்த கேப்டன் விராத் கோஹ்லி, தொடக்க வீரர் ரோகித் ஷர்மா அந்த பார்மை டி20 தொடரிலும் தொடர்வார்கள் என நம்பலாம். தவான், கார்த்திக், ராகுல், டோனி, ஹர்திக் ஆகியோரும் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள் என்பதால் நியூசி. பந்துவீச்சுக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.



புவனேஷ்வர், பூம்ரா வேகமும், சாஹல், அக்சர் சுழலும் எடுபட்டால் நியூசி. பெரிய ஸ்கோர் அடிக்காமல் கட்டுப்படுத்தலாம். தொடர்ச்சியாக 7 இருதரப்பு ஒருநாள் போட்டி தொடர்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ள இந்திய அணி, நியூசி.க்கு எதிரான சாபக்கேட்டுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது. இந்த போட்டியுடன் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா ஓய்வு பெற உள்ளதால், சொந்த மண்ணில் அவரை வெற்றியுடன் வழியனுப்பும் உறுதியுடன் இந்திய வீரர்கள் உள்ளனர். அதே சமயம், டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வகிக்கும் நியூசிலாந்து, இந்திய அணிக்கு எதிராக தனது ஆதிக்கத்தை தொடர வரிந்துகட்டுகிறது. காயம் காரணமாக டாட் ஆஸ்டில் விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக ராஸ் டெய்லர் சேர்க்கப்பட்டுள்ளார். ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நியூசி. டி20 அணியில் டெய்லர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் உள்ளதால், கோட்லா மைதானத்தில் இன்று வாணவேடிக்கைக்கு பஞ்சம் இருக்காது.

நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டாம் புரூஸ், கோலின் டி கிராண்ட்ஹோம், மார்டின் கப்தில், மேத்யூ ஹென்றி, டாம் லதாம், ஹென்றி நிகோல்ஸ், ஆடம் மில்னி, கோலின் மன்றோ, கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், ஈஷ் சோதி, டிம் சவுத்தீ, ராஸ் டெய்லர்.



இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.டோனி, மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஷ்வர் குமார், ஆசிஷ் நெஹ்ரா, ஷ்ரேயாஸ் அய்யர், முகமது சிராஜ்.


நேருக்கு நேர்...

* இந்திய அணியுடன் மோதிய டி20 போட்டிகளில் நியூசிலாந்து 5-0 என முன்னிலை வகிக்கிறது.
* 2007ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த உலக கோப்பை டி20ல் நியூசிலாந்து 10 ரன் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
* கடந்த ஆண்டு நாக்பூரில் நடந்த ஐசிசி டி20 உலக கோப்பை ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வியையே சந்தித்தது. அந்த போட்டியில் 127 ரன் இலக்கை துரத்திய இந்தியா 18,1 ஓவரில் 79 ரன்னுக்கு பரிதாபமாக ஆல் அவுட்டானது. சான்ட்னர் 11 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
* 2012ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் மோதிய டி20ல் நியூசிலாந்து 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது.
* 2009ல் மோதிய 2 போட்டிகளிலும் 5 விக்கெட் மற்றும் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியே வென்றது.
* நியூசி. அதிகபட்சமாக 190 ரன்னும், இந்தியா 180 ரன்னும் எடுத்துள்ளன. குறைந்தபட்ச ஸ்கோர்: இந்தியா 79 ரன் ஆல் அவுட்; நியூசிலாந்து 126/7.
* தனிநபர் அதிகபட்ச ஸ்கோர்: பிரெண்டன் மெக்கல்லம் 91, விராத் கோஹ்லி 70.
* பந்துவீச்சில் டேனியல் வெட்டோரி 6 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். சிறந்த பந்துவீச்சு: மிட்செல் சான்ட்னர் 4/11.

முதலிடத்தில் நீடிக்க... 

டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் நியூசிலாந்து அணி 125 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. 5வது இடத்தில் உள்ள இந்திய அணியுடன் நடக்கும் தொடரில் 2-1 என்ற கணக்கில் வென்றால், நியூசி. அணி முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும். இந்தியா 3-0 என ஒயிட் வாஷ் செய்தால் 2வது இடத்துக்கு முன்னேறலாம். இலங்கைக்கு எதிராக நடந்த டி20 தொடரில் 3-0 என வென்ற பாகிஸ்தான் 2வது இடத்தில் உள்ளது. நியூசி.க்கு எதிராக இந்தியா 3-0 அல்லது 2-1 என வென்றால் பாகிஸ்தான் முதலிடத்தை கைப்பற்றும். நியூசிலாந்து 5வது இடத்துக்கு தள்ளப்படும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad