கியூபாவில் மீண்டும் காதல் விடுதிகளைத் திறக்க முடிவு......



ஹவானாவில் மாலெகான் கடற்கரை எப்போதும் காதலர்களின் சொர்க்கபூமியாக உள்ளது
காதலர்களுக்கு ஹோட்டல் அறைகளை மணி நேர அடிப்படையில் வாடகைக்கு விடும் ஹோட்டல் தொடரமைப்பை மீண்டும் கொண்டுவரப் போவதாக கியூபா தலைநகர் ஹவானாவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

1990 ஆம் ஆண்டின் பொருளாதார சிக்கல்கள் எழுந்த காலகட்டத்தில் அரசால் நடத்தப்பட்ட "பொசாடா" அல்லது காதல் விடுதிகள், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் முகாம்களாக மாற்றப்பட்டன.
தனியார் விடுதிகள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தாறுமாறான வாடகையில் அறைகளை வாடகைக்கு விட்டார்கள்.
பொசோடாக்கள் விலை மலிவானதாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் ஹவானா நகரின் பொதுவெளிகளில் காதலர்கள் சங்கடப்பட்டு காதல் செய்ய வேண்டியதில்லை.

பொதுவாக தனியார் மூலம் வாடகைக்கு விடப்படும் அறைகளில் குளிர்சாதன வசதி, குளிர்பதனப்பெட்டி, வசதியான படுக்கை ஆகியவை இருக்கும். இதற்கான விலை மூன்று மணி நேரத்திற்கு 5 டாலர்.
ஐந்து டாலர்தானே என்று சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். இது, சராசரி கியூபா நாட்டவரின் மாத வருமானத்தில் ஆறில் ஒரு பகுதி. இவ்வளவு அதிகமான வாடகையை பெரும்பான்மை மக்களால் கொடுக்க முடியாது.

ஐந்து பொசோடாக்கள் கொண்ட புதிய தொடரமைப்புகள் மிகவும் லாபகரமாக இருக்கும் என்றும், வீடுகள் பற்றாக்குறையாகவும், நெரிசலாகவும் அமைந்திருக்கும் ஹவானா நகர மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் ஹவானா மாகாண வீட்டு வசதி நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஹவானாவில் இருக்கும் பல குடும்பங்கள் வீடுகளை பகிர்ந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. தங்குவதற்கு இடம் கிடைப்பது சிரமமாக இருப்பதால் விவாகரத்து பெற்றவர்கள்கூட, ஒரே வீட்டில் தொடர்ந்து வசிக்க வேண்டியிருக்கிறது.

அரசின் புதிய காதல் ஹோட்டல்கள் காதலர்களுக்கு வசதியாகவும் மலிவானதாகவும் இருக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
பூங்காக்கள், கடற்கரை மற்றும் பிரபலமான மாலேகன் கடற்கரைப் பகுதிகள் என காதலர்கள் பொது இடங்களில் உல்லாசமாக இருப்பது ஹவானாவில் சகஜமாக பார்க்கக்கூடிய காட்சி.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மத்திய ஹவானாவில் முதன்முதலாக பொசொடாக்கள் திறக்கப்பட்ட நினைவுகளை டிராபஜடோரேஸ் நாளிதழில் ஒரு எழுத்தாளர் பகிர்ந்துக் கொள்கிறார்.

"மறக்கமுடியாத முத்தங்களையும், குறிப்பிட்ட நேரம் முடிந்துவிட்டதை அறிவிக்கும் போர்ட்டரின் குரல்" ஆகியவை பெரும்பான்மையான கியூபா நாட்டினரின் நினைவுகளில் பசுமையாக இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url