காய்ச்சலால் அவதி முதல் டெஸ்டில் ராகுல் இல்லை
கொழும்பு :
இந்திய அணி தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் வைரஸ் காய்ச்சலால் அவதிப்படுவதால், இலங்கை அணியுடனான முதல் டெஸ்டில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டியில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது. இந்த நிலையில், இந்திய அணி தொடக்க வீரர் கே.எல்.ராகுல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். முழுமையாக குணமடைய இன்னும் சில நாட்கள் ஓய்வு தேவை என மருத்துவர்கள் கூறியதை அடுத்து, முதல் டெஸ்டில் அவர் விளையாட மாட்டார் என அணி நிர்வாகம் அறிவித்தது. ஏற்கனவே தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்த ராகுல், அதில் இருந்து மீண்டு இலங்கை டெஸ்ட் தொடருக்கு தயாரான நிலையில் வைரஸ் காய்ச்சல் மீண்டும் பின்னடைவை கொடுத்துள்ளது. முரளி விஜய்யும் காயம் காரணமாக விலகியுள்ளதால் அபினவ் முகுந்த், ஷிகர் தவான் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.