பதற்றத்தால் தோற்றோம்...: மித்தாலி வேதனை
லண்டன் :
இங்கிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை பைனலில், கடைசி கட்டத்தில் தேவையில்லாமல் பதற்றம் அடைந்ததே தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது என்று இந்திய அணி கேப்டன் மித்தாலி ராஜ் கூறியுள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனைகள் அபாரமாகப் பந்துவீசி இங்கிலாந்து அணியை 228 ரன்னில் கட்டுப்படுத்தினர். சற்றே கடினமான இலக்கை துரத்திய இந்தியா, பூனம் ராவுத் - ஹர்மான்பிரீத் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் வெற்றியை நெருங்கியது. கை வசம் 7 விக்கெட் இருக்க, 45 பந்தில் 37 ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து 48.4 ஓவரில் 219 ரன்னுக்கு ஆல் அவுட்டாகினர். இங்கிலாந்து 9 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தி 4வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கடைசி 28 ரன்னுக்கு இந்தியா 7 விக்கெட் இழந்தது குறிப்பிடத்தக்கது. 46 ரன் விட்டுக் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் அன்யா ஷ்ரப்சோல் ஆட்ட நாயகி விருதும், தொடக்க வீராங்கனை பியூமான்ட் தொடர் நாயகி விருதும் பெற்றனர்.
இந்திய ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திய இந்த தோல்வி குறித்து கேப்டன் மித்தாலி ராஜ் கூறியதாவது: கடைசி கட்ட நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பதற்றம் அடைந்ததே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. வெற்றிக்கு மிக அருகில் வந்தும் வாய்ப்பை வீணடித்தது வேதனை அளிக்கிறது. ஆனாலும், அணியின் ஒட்டுமொத்த செயல்பாட்டை நினைத்து பெருமை கொள்கிறேன். இளம் வீராங்கனைகள் கடைசி வரை சவாலுக்கு ஈடுகொடுத்தது நம்பிக்கை அளிக்கிறது. தொடர் முழுவதுமே நன்கு விளையாடினோம். நான் இன்னும் சில ஆண்டுகளுக்கு விளையாட முடியும் என நினைக்கிறேன். எனினும், அடுத்த உலக கோப்பை வரை நீடிக்க முடியாது. மகளிர் கிரிக்கெட் மேலும் வளர்ச்சி அடையும் என நம்புகிறேன். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு மித்தாலி கூறியுள்ளார்.