அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு அனைத்து மொழிகளுக்கும் ஒரே மாதிரியான கேள்வித்தாள்
கொல்கட்டா:
நாடு முழுவதும் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான கேள்வித்தாள் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். மேற்கு வங்கம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், மருத்துவ படிப்புக்கான நுழைவு மற்றும் தகுதி தேர்வான நீட் தேர்வால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிராந்திய மொழிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதனால் நீட் தேர்வு எழுத அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே அடுத்த ஆண்டு முதல் இந்த பிரச்னைகள் களையப்படும்.
பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதுபவர்களுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட கேள்வித்தாள்கள் வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு ஒரே கேள்வித்தாள் பிராந்திய மொழிகளில் வழங்கப்படும். இந்த ஆண்டு வெவ்வேறு மொழிகளில் எழுதியவர்களுக்கு வெவ்வேறு மாதிரியான கேள்வித்தாள்களை சிபிஎஸ்இ வழங்கியுள்ளது. வங்க மொழியில் வழங்கப்பட்ட கேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி தாள்களை விட கடினமாக இருந்ததாக சொல்லப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் மொழி மாற்றம் செய்யப்பட்ட கேள்வித்தாள்கள் வழங்கப்பட உள்ளதால் இந்த பிரச்னை எழ வாய்ப்பு இருக்காது.
அதே போல் ஒரே தேசம் ஒரே தேர்வு என்ற கொள்கையின் அடிப்படையில் அடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது அது பேச்சு வார்த்தை மட்டத்தில் உள்ளது. மத்திய அரசு விரைவில் 5 மற்றும் 8ம் வகுப்பில் பெயில் ஆக்கும் முறையை மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள மசோதா விரைவில் நிறைவேற்றப்படும். இதன் படி 5 மற்றும் 8ம் வகுப்புகளில் தேர்வு நடத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கப்படும். மார்ச் மாதம் நடத்தப்படும் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மே மாதம் மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த இரு தேர்வுகளிலும் வெற்றி பெறாத மாணவர்கள் பெயிலாக்கப்படுவார்கள். 8ம் வகுப்பு வரை அனைவரும் பாஸ் என்ற முந்தைய திட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி தரமான மாணவ மாணவிகளை மேல் வகுப்புக்கு அனுமதிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளோம். இதற்கு 25 மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.