எச்.ஐ.வி தொற்றுக்கு விடை சொல்லும் பசுக்கள்: 'திகைக்க' வைத்த ஆய்வு முடிவுகள்
எச்.ஐ.வி வைரசை சமாளிக்க "வியப்பூட்டக்கூடிய" மற்றும் "புரிந்துகொள்ள முடியாத" வகையிலான ஆற்றலை பசுக்கள் வெளிப்படுத்தி இருப்பதாகவும் அது எய்ட்ஸ் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்க உதவலாம் என்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நோய்த்தடுப்பு முறையில் முதல் முறையாக, எச்.ஐ.வி வைரசுக்கு எதிரான ஒரு வகையான எதிர்ப்பொருள் பசுக்களின் உடலில் வேகமாக உற்பத்தியாகியுள்ளது.
மிகவும் சிக்கலான மற்றும் பாக்டீரியாக்கள் நிறைந்த செரிமான அமைப்பை மாடுகள் கொண்டுள்ளதால், இந்த உச்சபட்ச நோய் எதிர்ப்பை அவை பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்த ஆய்வு முடிவுகள் "மிகுந்த ஆர்வத்தைத் தூண்டுபவை," என்று அமெரிக்காவின் நேஷனல் இன்ஸ்டிட்யூட்ஸ் ஆஃப் ஹெல்த் (National Institutes of Health) கூறியுள்ளது.
வழுக்கலான மற்றும் கொடிய எதிரி
ஒவ்வொரு முறையும் பாதிக்கப்பட்டவரின் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு அதைத் தாக்குவதற்கு முயலும்போதும் அது உடனடியாக மாற்றங்களை மேற்கொண்டு, உருமாறிக்கொள்கிறது.
ஆனால் ஒரு சிறு எண்ணிக்கையிலான நோயாளிகள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பின்னர், "விரிவாக பாதிப்புகளைத் தடுக்கும் நோய் எதிர்ப் பொருள்களை" உருவாக்கிக் கொள்கின்றனர். அவை எச்.ஐ.வி வைரஸால் மாற்ற முடியாத உறுப்புகளைத் தாக்குகின்றன.
உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை பாதிப்புகளைப் பரந்த அளவில் தடுக்கும் நோய் எதிர்ப்பொருள்களை உருவாக்கப் பழக்கப்படுத்தும் எதிர்ப்பு மருந்தால், மக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாவதையும் தடுக்க உதவ முடியவேண்டும்.
ஆனால் எம்மருந்தாலும் அதைச் செய்ய முடியாது.
மையப் புள்ளி
இன்டர்நேஷனல் எய்ட்ஸ் வேக்சைன் இனிஷியேடிவ் (International Aids Vaccine Initiative) மற்றும் ஸ்க்ரிப்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூடைச் (Scripps Research Institute) சேர்ந்த ஆய்வாளர்கள் பசுக்களுக்கு நோய்க்காப்பளிக்க முற்பட்டனர்.
"அதன் முடிவுகள் எங்களைத் திகைப்படையச் செய்தது," என்று ஆய்வாளர்களில் ஒருவரான மருத்துவர் டெவின் சாக் பிபிசி நியூஸ் இணையதளத்திடம் கூறினார்.
சில வார காலத்திலேயே மாடுகளின் உடல்களில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு எச்.ஐ.வி வைரஸைத் தடுக்கத் தேவையான நோய் எதிர்ப்பொருட்களை உற்பத்தி செய்துகொண்டது.
"இது புரிந்துகொள்ள முடியாத வகையில் மிகவும் நன்றாக இருந்தது. இதே மாதிரியான நோய் எதிர்ப்பொருட்களை உருவாக்க மனித உடலுக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்," என்கிறார் சாக்.
"இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் பல காலமாக நம்மால் இதைச் செய்ய முடியவில்லை. மாடுகளின் உயிரியல் எச்.ஐ.வி ஆய்வில் முக்கியப் பங்களிக்கும் என்று யார் நினைத்திருக்கக்கூடும்," என்றும் கூறுகிறார் அவர்.
நேச்சர் (Nature) ஆய்விதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு முடிவுகளின்படி, மாடுகளின் உடலில் உற்பத்தி ஆகியுள்ள நோய் எதிர்ப்பொருட்களால் 20% எச்.ஐ.வி தொற்றை 42 நாட்களுக்குள் நீக்க முடியும்.
381 ஆகும்போது, ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட 96% எச்.ஐ.வி நோய் தொற்றுக்களை அவற்றால் நீக்க முடிந்தது.
"திறன்மிகுந்த இந்த ஆய்வு முடிவுகள் மிகவும் குறிப்பிடத்தகுந்தவை," என்கிறார் இன்னொரு ஆய்வாளரான மருத்துவர் டென்னிஸ் பர்ட்டன்.
"மனித நோய் எதிர்ப்பொருட்களைப் போல் அல்லாமல், கால்நடைகளின் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பொருட்கள், தனித்துவமான தன்மைகளைக் கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளதுடன், எச்.ஐ.வி வைரசுக்கு எதிராக அதிகத் திறன் பெற்றிருக்கலாம்," என்றார் அவர்.
மனித உடலில் தோன்றும் நோய் எதிர்ப்பொருட்களில் பரந்த அளவில் நோய்களை எதிர்ப்பவை, வழக்கத்துக்கு மாறாக, நீளமான மற்றும் தொடர்ச்சியான அமைப்பைப் பெற்றிருக்கும். இயல்பாகவே பசுமாடுகளின் உடலில் தோன்றும் நோய் எதிர்ப்பொருள்கள் நீளமான மற்றும் தொடர்ச்சியான அமைப்பைப் பெற்றுள்ளன.
அதனால் பசு மாடுகளின் நோய் எதிர்ப்பு அமைப்பு எச்.ஐ.வி-க்கு எதிரான இந்த எதிர்ப்பொருட்களை சுலபமாக உருவாக்குகின்றன.
புற்களை நொதிப்படுத்த, அவைகளை அசைபோட்டு செரிமானம் செய்யக்கூடிய, மாடுகளின் செரிமான அமைப்பு மோசமான பாக்டீரியாக்களுக்கு கட்டுப்பாடற்ற வாழ்விடமாக இருக்கிறது என்று கருதப்படுகிறது. அதனால் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்க அவை அந்த எதிர்ப்பொருட்களை சுரக்கத் தொடங்கின.
யோனியில் ஏற்படும் எச்.ஐ.வி தொற்றைத் தடுக்க அதிகம் திறனுள்ள நுண்ணுயிர்க்கொல்லிகளை (microbicides) உருவாக்கும் மருந்துகளைத் தயாரிக்க கால்நடைகள் சிறந்த மூலாதாரங்களாக இருக்கும் என்பது இதன் மூலம் புலனாகிறது.
ஆனால் மனித உடலிலுள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு இது போன்ற எதிர்ப்பொருட்களை உண்டாக்க வைத்து எச்.ஐ.வி தொற்றுக்கு எதிராகப் போரிடுவதே முக்கிய இலக்காக உள்ளது.
இது இன்னும் மிகப்பெரிய சவாலாக இருந்தாலும், கால்நடைகள் மீதான ஆய்வு அதற்கு உதவக்கூடும்.
"இந்த நோய்ப் பரவலின் ஆரம்ப காலத்தில் இருந்தே எச்.ஐ.வி வைரஸ் நோய் எதிர்ப்பு மருந்துகளிடம் இருந்து தப்புவதை கண்டறிந்துள்ளோம். எனவே,பரந்த அளவிலான எச்.ஐ.வி-க்கு எதிரான நோய் எதிர்ப்பை வெளிப்படுத்தும் எதிர்ப்பொருட்களை இயல்பாகவே வெளியிடும் மிகச்சிறப்பான நோய் எதிர்ப்பு அமைப்புகள், அவை மனிதர்களுடையதோ கால்நடைகளுடையதோ, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை," என்கிறார் அமெரிக்காவின் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அல்ர்ஜி அண்ட் இபெக்ட்டீஷியஸ் டிசீசஸ்-ன் (US National Institute of Allergy and Infectious Diseases ) இயக்குனர் மருத்துவர் ஆண்டனி ஃபாசி