காயத்ரி ரகுராம் செய்யும் பெரும் தவறுகளை அசால்ட்டாக மறைக்கும் கமல்.. பிக்பாஸ் மீது கிளம்பும் சர்ச்சை
சென்னை:
காயத்ரி ரகுராமை கமல்ஹாசனும், விஜய் டிவியும் இணைந்து ஏன் நல்லவரை போல பிம்பிக்கின்றன, ஏன் காயத்ரி ரகுராம் தவறுகளை மறைக்கின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அத்தனை பேரையும் தூண்டிவிட்டு நல்லவரை போல இருந்துகொள்வது காயத்ரிதான் என்ற குற்றச்சாட்டு ரசிகர்களால் தொடர்ந்து முன் வைக்கப்படுகிறது. காயத்ரிதான் ஜூலியை முதலில் கரித்துக் கொட்டினார். ஆனால், ஆர்த்தி வெளியேறியதும், நைசாக ஜூலியையே கைக்குள் போட்டுக்கொண்டார் காயத்ரி. இப்போது ஜூலி, காயத்ரி கட்டளையை செய்து முடிக்கும் அடியாளாக மாறியுள்ளார்.
காயத்ரி அட்டகாசம்
ரசிகர்களிடம் ஆதரவை பெற்ற ஓவியாவை கார்னர் செய்ய நமிதா, ஜூலி ஆகியோருடன் சேர்ந்து மூளையாக செயல்பட்டவர் காயத்ரி. ஒரு சம்பவத்தின்போது, கொஞ்ச நேரம் கேமராவை ஆப் செய்தால் இங்கு நடப்பதே வேறு என்று கொலைமிரட்டலை போன்ற ஒரு மிரட்டலைவிடுத்தவர் காயத்ரி. மேலும், அடிக்கடி சக போட்டியாளர்களை பார்த்து கெட்ட வார்த்தைகளால் வசை பாடியவரும் காயத்ரி.
ஜூலிக்கு கடும் தண்டனை
ஜூலியை பொருத்தளவில் அவர் தன்மீது கவனம் குவிய வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம், நடிக்கலாம், பொய் சொல்லலாம் என நினைக்கும் கேரக்டர். காயத்ரியோ, அனைத்தின் பின்னணியிலும் இருந்து ஆட்டுவிப்பவர். ஆனால் ஜூலியை மனநோயாளி என சொல்லுமளவுக்கு இறங்கியடித்தார் கமல். மேலும், ஜூலியின் பொய்யை நிரூபிக்க வீடியோவை போட்டு காண்பித்து அம்பலப்படுத்தினார் கமல்.
முழு பூசணிக்காயை மறைக்கலாமா?
ஆனால், காயத்ரியின் அட்டகாசங்களை அடக்கியே வாசிக்கிறார் கமல். அப்படித்தான், ஒரு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் நேற்றைய நிகழ்ச்சியில் அரங்கேறியது. ஆரவ் மற்றும் ஓவியாவை சேர்த்து வைத்து மோசமாக சித்தரித்து காயத்ரி பேசிய காட்சிகளை ரசிகர்கள் கவனத்திற்கு வராமலேயே மறைத்துவிட்டனர் விஜய் டிவி மற்றும் கமல் அன்டு கோ. காயத்ரி விஷமம் சில தினங்கள் முன்பு, ஓவியாவை நள்ளிரவில் வெறுப்பேற்ற காயத்ரி, நமீதா, ஜூலி ஆகியோர் பாட்டுக்கு பாட்டு நடத்ததினர். அப்போது ஆண்களுக்கான படுக்கையறைக்கு சென்று தஞ்சம் புகுந்தார் ஓவியா. இதை வைத்து அன்று இரவில் ஆரவ் மற்றும் ஓவியா தனிமையில் ஒரு மணிநேரம் கிசுகிசுவென பேசிக்கொண்டிருந்ததாக விஷம கருத்தை கூறியுள்ளார் காயத்ரி.
ஆரவ் எஸ்கேப்
நேற்றைய நிகழ்ச்சியின்போது, ஆரவிடம் ஓவியாவின் நள்ளிரவு வருகை பற்றி கமல் கேட்டபோது, தான் ஒரு பக்கமாக திரும்பி படுத்துக் கொண்டதாக ஆரவ் கூறினார். அதாவது, ஓவியாவுடன் தான் பேசிக்கொண்டிருக்கவில்லை என ஆரவ் அப்படி கூறினார். இதன்பிறகு காயத்ரி ஆரவை கட்டியணைத்து மன்னிப்பு கேட்டுக்கொண்ட ஒரு காட்சி ஒளிபரப்பானது. இதை வைத்து பார்க்கும்போது, என்ன நடந்திருக்கும் என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டனர். காயத்ரி அவ்வாறு பேசியதை ஒளிபரப்பாமல் மறைத்ததில் கமல் உடந்தை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
தப்பை திருத்துவது நலம்
கமலும் காயத்ரி ரகுராம் தந்தையும் நண்பர்கள், ஜாதி பாசம் என்றெல்லாம் இதுகுறித்து கமெண்ட் அடிக்கிறார்கள் நெட்டிசன்கள். தொடர்ந்து இதுபோல காயத்ரியின் தவறுகள் மறைக்கப்பட்டால் அது கமலுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும். இதை புரிந்துகொண்டு தவறு எங்கே நிகழ்கிறது என்பதை உடனே கமல் களைய வேண்டும் என்பதே பிக்பாஸ் ரசிகர்கள் கோரிக்கை.