விடைபெறுகிறார் பிரணாப் முகர்ஜி: நாடாளுமன்ற பிரிவுபசார கூட்டத்தில் உருக்கமான பேச்சு
புதுடெல்லி:
இன்றுடன் ஓய்வு பெறும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நேற்று பிரியாவிடை அளிக்கப்பட்டது. எம்.பி.க்கள் மத்தியில் பேசிய பிரணாப் ‘‘நான் இந்த நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டவன்’’ என உருக்கமாக பேசி விடைபெற்றார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் (82) பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. இதை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நேற்று அவருக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டது. மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி ஆகியோர், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பங்களிப்பை நினைவு கூர்ந்தனர். அதன்பின் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது:
* இந்த பிரியாவிடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக சபாநாயகர், மாநிலங்களவை துணைத் தலைவர் மற்றும் எம்.பி.க்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
* நான் 37 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்துள்ளேன். இந்த நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டவன் நான்.
* இந்தியாவுக்காக சேவை செய்யும் வாய்ப்பு எனக்கு 34 வயதில் இருந்தே கிடைத்தது.
* மிகச் சிறந்த ஆளுமை உள்ள முன்னாள் பிரதமர் இந்திராகாந்திதான் எனது ஆசான்.
* மிகவும் துணிச்சல் மிக்கவர். அவசரநிலைக்குப்பின் காங்கிரஸ் ஆட்சி முடிந்து கடந்த 1978ம் ஆண்டு அவர் லண்டன் சென்றார். அப்போது அவரிடம் கடுமையான கேள்விகளை கேட்க நிருபர்கள் காத்திருந்தனர். முதல் கேள்வியே, அவசரநிலையால் உங்களுக்கு கிடைத்தது என்ன? என கேட்டார்கள். அவர்களை நேருக்கு நேராக பார்த்த இந்திரா காந்தி, ‘‘அந்த 21 மாதங்களில் நாங்கள் யாரையும் நெருங்கவிடாமல் வைத்திருந்தோம்’’ என பதில் அளித்தார். சில வினாடி அமைதிக்குப்பின் அனைவரும் சிரித்து விட்டனர். அதன்பின் யாரும் அவசரநிலையைப் பற்றி எந்த கேள்வியும் கேட்காமல் கலைந்து சென்றனர்.
* இந்திராகாந்தி இரும்பு பெண்மணி. அவரின் அந்த தைரியம்தான் என்னை மிகவும் கவர்ந்தது. வாஜ்பாய் மற்றும் ராவ் ஆகியோரும் என்னை அதிகம் கவர்ந்தனர். சில நேரங்களில் நான் அத்வானியின் அறிவுரையையும் பின்பற்றியுள்ளேன். எனக்கு சோனியா காந்தியின் நிபந்தனையற்ற ஆதரவும் கிடைத்தது.
* ஜனாதிபதியாக நான் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க எழுத்து பூர்வமாக இல்லாமல் உண்மையாகவே முயற்சித்துள்ளேன்.
* வேறு வழியில்லாத சூழ்நிலையில் மட்டுமே அவசர சட்ட வழியை நாம் பின்பற்ற வேண்டும்.
* நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவருவதற்கு ஒதுக்கப்படும் நேரம் குறைந்து வருவது கவலை அளிக்கிறது.
* எம்.பி.க்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
* நாடாளுமன்றம் விவாதம் மற்றும் ஆலோசனை செய்யும் இடம்.
* கருத்து வேறுபாடு, இடையூறு ஆகியவை எதிர்கட்சிகளை அதிகம் பாதிக்கிறது.
* ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியது நமது ஜனநாயகத்தின் பக்குவத்தை காட்டுகிறது.
* ஜனாதிபதியாக நான் ஓய்வு பெறுவதால், நாடாளுமன்றத்துடனான எனது தொடர்பும் முடிவுக்கு வருகிறது.
* இனிமேல் நான் இந்த நாடாளுமன்றத்தின் அங்கமாக இருக்க மாட்டேன். இந்த பிரம்மாண்ட கட்டிடத்தை விட்டு நான் வெளியேறுவது, எனக்கு சற்று வருத்தமாகவும், வண்ணமயமான நினைவுகளாகவும் இருக்கும்.
* நன்றியுடன் நான் உங்களை விட்டு விடைபெற்றுக் கொள்கிறேன். சிறந்த சேவகனாக நாட்டு மக்களுக்கு சேவை செய்தேன் என்ற மகிழ்ச்சியுடனும், மன நிைறைவுடனும் நான வெளியேறுகிறேன்.இவ்வாறு பிரனாப் உருக்கமாக பேசினார்.
ராம்நாத் கோவிந்த் நாளை பதவி ஏற்பு
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதையடுத்து, புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் நாளை பதவி ஏற்கிறார். அவருக்கு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர் பதவி பிரமாணம் செய்துவைக்கிறார்.
பிரணாப்புக்கு தயாராகும் பங்களா
நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் வாழ்நாள் வரை தங்குவதற்கு, அவர்கள் விரும்பும் பகுதியில் வாடகை, மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணமின்றி வீடு வழங்கப்பட வேண்டும். அந்த வரிசையில் டெல்லியின் ராஜாஜி மார்க் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பங்களாவில் குடியேற பிரணாப் முகர்ஜி விருப்பம் தெரிவித்துள்ளார். இப்போது, அவருடைய வருகைக்காக அந்த பங்களா தயாராகி வருகிறது. 11 ஆயிரத்து 776 சதுர அடியில் அமைந்துள்ள இந்த பங்களாவுக்கு வர்ணம் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், இரண்டு மாடிகளை கொண்ட இந்த பங்களாவில்தான் குடியிருந்தார். அவருக்கு பின் மத்திய கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மா இங்கு தங்கியிருந்தார். இந்த பங்களா பிராணப் முகர்ஜிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னர் அவர் ராஜாஜி மார்க் 10 எண் வீட்டிற்கு இடம் பெயர்ந்துவிட்–்டார். அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள பங்களாவில் புதிய ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ராம்நாத் கோவிந்த் தங்கியுள்ளார்.