முகத்துக்கு பொலிவு தரும் மருத்துவம்
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கண்களில் ஏற்படும் கருவளையம், முகச்சுருக்கத்தால் பொலிவு இழப்பு, கரும்புள்ளிகள், முகப்பரு ஆகிய பிரச்னைகளை சரிசெய்வது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். முகப்பொலிவுக்கு எலுமிச்சை, மாதுளை, ஆரஞ்சு, சாத்துக்குடி ஆகியவை பயனுள்ளதாகிறது. இவைகளை கொண்டு கரும்புள்ளிகளை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை, சாத்துக்குடி ஆகிய பழங்களின் தோல்களை காயவைத்து பொடித்து எடுக்கவும். இந்த பொடியை தேவையான அளவு எடுத்து, ஆரஞ்சு பழச்சாறு சேர்த்து கலந்து முகத்தில் போட்டுவர கரும்புள்ளிகள் மறையும். இது, முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது. மணமுள்ள மேல்பூச்சாக விளங்குகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, மாதுளை ஆகியவற்றின் தோல்கள் மருத்துவ குணங்களை கொண்டவை. வியர்வையை வெளியேற்றும் தன்மையை கொண்டுள்ளன. செல்கள் அழிந்து போகும் நிலையை மாற்றி புத்துணர்ச்சி தரும். முகத்துக்கு நல்ல பொலிவு தரும். முக சுருக்கங்களை மாற்றும். வாரம் இருமுறை இதை போட்டுவர நல்ல பலன் கிடைக்கும்.
எண்ணெய் பிசுபிசுப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கருப்பு உளுந்து, லவங்கம், ஆரஞ்சு பழம். செய்முறை: கருப்பு உளுந்து பொடி, லவங்கப்பட்டை பொடி, ஆரஞ்சு பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பூசிவர முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும். தோலில் படிந்திருக்கும் அழுக்குகள் வெளியேறும். முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் போகும். முகச் சுருக்கம் மாறி பொலிவு பெறும். பல்வேறு மருத்துவ குணங்களை உடைய லவங்கப்பட்டையானது, செல்களுக்கு புத்துணர்வு தரக்கூடிய தன்மை கொண்டது. ஆரஞ்சு பழத்தின் சாறு ரத்த ஓட்டத்தை தூண்டக் கூடியது. வியர்வை நாளங்களில் ஊடுருவி சென்று புத்துணர்வு தருகிறது.
சோற்றுக்கற்றாழையை பயன்படுத்தி வறண்ட சருமத்தை மாற்றி முகத்தில் ஈரப்பதத்தை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சோற்றுக்கற்றாழை, நல்லெண்ணெய், தேன். செய்முறை: சோற்றுக் கற்றாழையின் சதை பகுதியை சுத்தப்படுத்தி எடுக்கவும். இதனுடன் 5 சொட்டு நல்லெண்ணெய், அரை ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகத்தில் பூசி சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு கழுவிவர வறண்ட சருமம் மாறும். சிறுநீர் கட்டு பிரச்னை குணமாக எளிய மருத்துவத்தை பார்க்கலாம். சிறுநீர் கட்டு பிரச்னையால், கை கால்களில் வீக்கம், சிறுநீர்தாரையில் எரிச்சல் ஏற்படும். இதற்கு முள்ளங்கி இலை மருந்தாகி பயன்தருகிறது. முள்ளங்கி இலையை சாறாக்கி சுமார் 20 மில்லி அளவுக்கு ஓரிருவேளை குடித்துவர சிறுநீர் தாராளமாக வெளியேறும். சிறுநீர்தாரை எரிச்சல் சரியாகும்.