எங்கள் ராணுவத்தை அசைக்க முடியாது’’ இந்தியாவுக்கு சீனா மிரட்டல்
‘மலையை கூட அசைத்து விடலாம், சீன மக்கள் விடுதலை ராணுவ படையை அசைக்கக்கூட முடியாது’ என இந்தியாவுக்கு நேரடியாக சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
சிக்கிம் மாநில எல்லையையொட்டி இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகள் உள்ளன. அந்த பகுதியை டோகா லா என இந்தியாவும், டோகாலாம் என பூடானும், டோங்லாங் என சீனாவும் அழைக்கிறது. இந்த பகுதியில் 3 நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என 2012–ம் ஆண்டு எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய அந்த பகுதியில் சீனா சாலை அமைக்கும் பணியை நடத்தி வருகிறது. இதற்கு பூடான் கடும் எதிர்ப்பு தெரிவித்து சீனாவுக்கு கடிதம் எழுதியது. இதனால் அங்கு இந்திய படைகள் குவிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து இந்தியா–சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசுகையில், சர்ச்சைக்குரிய பகுதியில் எல்லையை மாற்றும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது. இது இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தலாகவே கருதுகிறோம். எனவே இரு நாட்டு படைகளும் விலக்கி கொண்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என பேசினார்.
இதனிடையே சீன ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஊ கியான் அந்நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
பாதுகாப்பு இறையாண்மையை சீர்குலைக்கும் வகையில் சீன எல்லையில் சட்டவிரோதமாக குவிக்கப்பட்டு இருக்கும் படைகள் அனைத்தையும் இந்தியா உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இது போன்ற தவறுகளை இந்தியா உடனடியாக திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறோம். இல்லாவிட்டால் சீன படைகள் அதற்கு பதிலடி கொடுக்க தயங்காது.
இந்திய படைகளை வாபஸ் பெற்றால் மட்டுமே இந்த பிரச்சினை முடிவுக்கு வரும். எல்லையில் போர் பதற்றத்தை தணிக்க இரு நாடுகள் இடையே கூட்டு முயற்சி அவசியம்.
சீனாவில் மக்கள் விடுதலை ராணுவம் உருவாக்கப்பட்டு 90 ஆண்டுகள் ஆகிறது. தேசிய இறையாண்மை, பிராந்திய ஒருங்கிணைப்புக்காக உருவாக்கப்பட்ட இந்த படை அசைக்க முடியாத அமைப்பாக உள்ளது. மலையை கூட எளிதாக அசைத்து விடலாம். ஆனால் இந்த படையை அவ்வளவு எளிதாக யாரும் அசைக்க முடியாது.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ள இந்த படையை தேவைப்பட்டால் அதிகரிக்கவும், பயிற்சி அளிக்கவும் முடிவு செய்து இருக்கிறோம். நாட்டின் பாதுகாப்புக்காக என்ன விலையை கொடுக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம்.
சீனா தலைநகர் பீஜிங்கில் பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் 27, 28–ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சீனாவுக்கு செல்ல உள்ளார். இந்நிலையில் சீன ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர், இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.