மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு அனுமதி வழங்க கூடாது: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை:
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு அனுமதி வழங்க கூடாது என்று மத்திய அரசிடம் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஹர்ஷ வரதனுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை வணிக ரீதியாக பயன்படுத்துவதற்காக வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் கீழ் இயங்கும் மரபணு பொறியியல் அங்கீகாரக்குழு அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த முடிவு நாட்டில் உள்ள விவசாயிகளையும், நுகர்வோரையும் மிகவும் பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு அனுமதி வழங்கும் முடிவு நாட்டு நலனுக்கு எவ்விதத்திலும் உகந்தது அல்ல என்று ஸ்டாலின் கூறியுள்ளார். ஆகவே இதுபோன்ற மரபணு மாற்ற பயிர்கள் இயற்கையின் நலனுக்கும், மக்களின் ஆரோக்கியத்துக்கு சற்றும் உகந்தது அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு அனுமதி வழங்க கூடாது என்று மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.