விளையாட்டுத் துளிகள்.....
* காலே ஆடுகளம் முதல் 2 நாட்கள் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும், அதன் பிறகு சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிற்பகலில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் என வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
* ரங்கனா ஹெராத் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் (ஜிம்பாப்பே, வங்கதேசத்துக்கு எதிராக) இலங்கை அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதில் 3 வெற்றி, 1 தோல்வி, 1 டிரா கண்டுள்ளார்.
* கடந்த 3 ஆண்டுகளில் இலங்கை மண்ணில் நடந்த 16 டெஸ்ட் போட்டிகளிலும் முடிவு தெரிந்துள்ளது. ஒரு போட்டி கூட டிராவில் முடியவில்லை.
* இந்தியா கடைசியாக விளையாடிய 5 டெஸ்டில் 3 வெற்றி, 1 டிரா, 1 தோல்வி கண்டுள்ளது. இலங்கை அணி கடைசியாக விளையாடிய 5 டெஸ்டில் 2 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது.
ஹர்திக் அறிமுகம்?
இலங்கை அணிக்கு எதிராக இன்று தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அறிமுக வீரராக இடம் பெறும் வாய்ப்பு உள்ளதாக கேப்டன் கோஹ்லி சூசகமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘எந்த வகையான ஆடுகளமாக இருந்தாலும் சிறப்பாக செயல்பட்டு விக்கெட் வீழ்த்தக் கூடியவர் ஹர்திக். அவர் ரன் குவிப்பிலும் அசத்துவார் என்பது சாதகமான அம்சம். இதனால் பேட்டிங் வரிசை வலுவானதாக இருக்கும்’ என்றார்.
பிசிசிஐ கூட்டம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெறுகிறது. இதில் லோதா கமிட்டி பரிந்துரைத்துள்ள நிர்வாக சீர்திருத்தங்களை அமல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. உச்ச நீதிமன்றம் இதில் கண்டிப்பு காட்டுவதால், நடைமுறைக்கு ஒத்துவரக் கூடிய அம்சங்களை விரைவாக அமல்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என தெரிகிறது.
டாப் 10ல் ஹர்மான்பிரீத்
ஐசிசி மகளிர் உலக கோப்பை தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணி துணை கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர், ஒருநாள் போட்டிகளுக்கு பேட்டிங் தரவரிசை பட்டியலில் 7 இடங்கள் முன்னேறி 6வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதியில் ஆட்டமிழக்காமல் 171 ரன் விளாசிய அவர், பைனலில் இங்கிலாந்துக்கு எதிராக 51 ரன் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி கேப்டன் மித்தாலி ராஜ் 2வது இடத்திலும், ஆஸி. அணி கேப்டன் மெக் லான்னிங் முதல் இடத்திலும் உள்ளனர்.
அஷ்வின் 50
இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர் ஆர்.அஷ்வின் இதுவரை 49 டெஸ்டில் விளையாடி 275 விக்கெட் (சிறப்பு 7/59) மற்றும் 1903 ரன் (அதிகம் 124, சராசரி 32.25, சதம் 4, அரை சதம் 10) எடுத்துள்ளார். இலங்கையுடன் காலே மைதானத்தில் இன்று தொடங்கும் முதல் டெஸ்ட், அஷ்வின் களமிறங்கும் 50வது டெஸ்ட் போட்டியாகும்.