அப்துல்கலாம் மணிமண்டபம் நாளை திறப்பு: பிரதமர் மோடி வருகையால் ராமேஸ்வரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு
ராமேஸ்வரம்:
அப்துல்கலாமின் மணிமண்டபத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரம் வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தை அடுத்த பேய்கரும்பில் ரூ.15 கோடி செலவில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவு மணிமண்டபம் உருவாக்கப்பட்டுள்ளது. நினைவு மண்டபத்தை திறப்பதற்காக பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வரவுள்ளார். பிரதமரின் வருகையையொட்டி ராமேஸ்வரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வரும் பிரதமர் மோடி, அங்கிருந்த ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பேய்கரும்பை சென்றடைகிறார்.
ராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் துணை ராணுவப் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அப்துல்கலாமின் மணிமண்டபத்தில் 700 அரிய புகை படங்களும், 900 ஓவியங்களும் வைக்கப்பட்டுள்ளன. ஒரே ஓவியத்தில் கலாமின் 50 முகத்தோற்றம் கொண்ட சிறப்பு ஓவியம் இடம்பெற்றுள்ளது. அப்துல்கலாமின் இளமைபருவத்தில் இருந்து குடியரசுத் தலைவர் ஆகியிருந்தது வரையிலான புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.