யுஎஸ் ஓபன் பேட்மின்டன்: எச்.எஸ்.பிரணாய் சாம்பியன்
வாஷிங்டன் :
யுஎஸ் ஓபன் கிராண்ட் பிரீ கோல்டு பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இறுதிப் போட்டியில் சக இந்திய வீரர் பாருபள்ளி காஷ்யப்புடன் நேற்று மோதிய பிரணாய் 21-15 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த காஷ்யப் 22-20 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கடைசி செட் ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய பிரணாய் 21-15, 20-22, 21-12 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 5 நிமிடத்துக்கு நீடித்தது. யுஎஸ் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமை பிரணாய்க்கு கிடைத்துள்ளது.