அசால்ட்டு பண்ணிட்டாரு அஜித்!
ஹாலிவுட்டுலே தயாரான நிறைய ஸ்பை திரில்லர் படங்கள் பார்த்து ரசிச்சிருக்கோம். அந்த மாதிரி ஜானர்ல இந்தியாவுல ஏன் படம் வரமாட்டேங்குதுன்னு எழுந்த கேள்விக்கு விடைதான் விவேகம். ஹாலிவுட் தரத்துல ஆக்ஷன் சேஸிங் படமா இது உருவாகியிருக்கு. ஸ்பை படத்துக்கு ஸ்டைலிஷான ஹீரோயிசம்தான் முதல் தேவை. அஜீத் சார் படத்துக்குள்ள வந்துட்ட பிறகு வேறென்ன சொல்ல? படத்தோட குவாலிட்டி பல மடங்கு கூடிப்போயிடுச்சி என சிலிர்க்கிறார் ‘விவேகம்’ டைரக்டர் சிவா.
தொடர்ந்து அஜீத் கூட இது உங்க 3வது படம். எப்படி ஃபீல் பண்றீங்க?
ஹாட்ரிக் அடிச்சு ஆக வேண்டிய கட்டாயத்துல இருக்கேன். கண்டிப்பா அடிப்பேன்னு அடிச்சும் சொல்வேன். அதுக்கு காரணம், அஜீத் சாரோட டெடிகேஷன். கேரக்டருக்கு தேவையானதை தனக்குள்ள கொண்டு வர்றதுக்கு அவர் எடுக்கிற சிரத்தையை நேர்ல பார்த்திருக்கேன். வீரம் பண்ணும்போது அவரோட ஒர்க் மேல எனக்கு அளவு கடந்த மரியாதை வந்துச்சு. அதேபோல என்னோட ஒர்க் மேல அவருக்கு மதிப்பு இருந்துச்சு. எங்களோட ரெண்டு பேரோட ஒர்க்கிங் ஸ்டைல், ஒத்துப்போயிடுச்சி. அதுதான் இன்னிக்கு அடுத்தடுத்து 3 படம் சேர்ந்து பண்ணியிருக்கோம். இதுக்கு கடவுளுக்குதான் நன்றி சொல்லணும்.
உங்க ‘விவேகம்’, கதை என்ன?
ஸ்பை திரில்லர்ல நிறைய வகையறா இருக்கு. இது இன்டர்நேஷனல் ஸ்பை பற்றிய கதை. படத்துல அஜீத் உளவாளியா வர்றாரு. இந்திய உளவாளி கிடையாது. சர்வதேச உளவாளி. அதனால மொத்த ஷெட்யூலும் வெளிநாட்லேயே பண்ண வேண்டிய கட்டாயம் இருந்துச்சு. 97 சதவீத ஷூட்டிங் வெளிநாட்டுலதான் நடந்துச்சு. இந்த ஸ்பை டீம்ல அஜீத் - விவேக் ஓபராய் ரெண்டு பேரும் நண்பர்கள். ஒரு மிஷனுக்காக அஜீத் போராடுறாரு. படம் ஆக்ஷன் பின்னணிதான். ஆனா, முழு படத்துலேயும் பெரிய அளவுல எமோஷன் இருக்கும். ஆக்ஷன் ஹாலிவுட் தரம்னா, எமோஷன் இந்திய தரத்துல இருக்கும். சின்ன வயசுலேருந்து நாம கேட்ட ஸ்பை கதைகள், ஹாலிவுட்ல பார்த்த ஸ்பை கதைகள்லேருந்து இது வித்தியாசமா, அதே நேரத்துல அடுத்தது என்ன நடக்கும்கிற படபடப்பை ஏற்படுத்துற விதத்துல இருக்கும். ஐரோப்பிய நாடுகளான பல்கேரியா, செர்பியா, க்ரோஷியா, ஆஸ்திரியா நாடுகளில் ஷூட்டிங் நடந்திருக்கு.
முதலில் ‘வீரம்’லே பிரதர்ஸ் சென்டிமென்ட், ‘வேதாளம்’ல தங்கச்சி சென்டிமென்ட்... இப்போ ‘விவேகம்’லே?
அதை தனியா பிரிச்சு சொல்ல முடியல. அந்த எமோஷன்தான் படத்தோட கதையை நகர்த்துற விஷயம். அதை சொல்லிட்டா, கதையை சொன்ன மாதிரி இருக்கும். ஆனா, அது பலமான இந்திய எமோஷனா மட்டும் இருக்கும்னு சொல்வேன். என்னோட படங்கள்ல ஆக்ஷனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்குமோ அதைவிட கூடுதலா, ஃபேமிலி ஆடியன்ஸை ஈர்க்கிற எமோஷனுக்கு முக்கியத்துவம் இருக்கும். விவேகமும் அந்த மாதிரிதான். காரணம், அஜீத் சாருக்கு இளைஞர், இளைஞிகளை போல ஃபேமிலி ஆடியன்சும் தீவிர ரசிகர்களா இருக்கிறாங்க. அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒவ்வொரு காட்சியும் இருக்கும்.
வீரம், வேதாளம்ல வன்முறையும் கொஞ்சம் தூக்கலா இருந்துச்சே?
நான் அப்படி நினைக்கல. கதையோடு சேர்ந்து வர்ற ஆக்ஷன்தான் எல்லாமே. அதை வன்முறைன்னு சொல்ல முடியாது. கதைப்படி அந்த மாதிரி பலமான ஆக்ஷன் தேவைப்பட்டுச்சு. அதனாலதான், ஆடியன்சும் அதை ஏத்துக்கிட்டாங்க. விவேகம்ல கூட அதே மாதிரி பலமான ஆக்ஷன் காட்சிகள் இருக்கும்.
படத்தோட பட்ஜெட் கூடிப்போயிடுச்சுன்னு தகவல் வந்துச்சே?
இந்த படத்தோட கதைக்கு சில விஷயங்கள் தேவைப்பட்டுச்சு. ஹாலிவுட் ஸ்டைல்ல ஆக்ஷன் படம் பண்ணும்போது அதுக்கான தரமும் தேவை. அது எல்லாமே ஷூட்டிங் முன்னாடி திட்டமிட்டதுதான். நாங்க என்ன கேட்டோமோ அதையெல்லாம் பக்காவா பண்ணி கொடுத்து, படத்தோட கதைக்கு ஏற்ப ஷூட் பண்ண எங்களுக்கு முழு சுதந்திரமும் கொடுத்தாரு தயாரிப்பாளர் தியாகராஜன். இந்த படத்துக்கு எது தேவைன்னு அவருக்கு தெரியும். பட தயாரிப்புல பலத்த அனுபவம் வாய்ந்தவரு. சினிமாவை நேசிக்கிறவர். அவரும் அவரோட மகன் அர்ஜுனும் படம் சிறப்பா வரணும்னு எங்களுக்கு பக்க பலமா இருந்தாங்க. இப்போ படம் பார்த்துட்டு, ரொம்ப சந்தோஷப்பட்டு பாராட்டினாங்க.
ஆக்சுவலா ‘வேதாளம்’ல ஸ்ருதி கேரக்டரை லட்சுமி மேனன் ஓவர்டேக் பண்ணியிருக்கும். அந்தமாதிரி காஜல் ரோலைவிட அக்ஷராவுக்கு முக்கியத்துவம் கூடுதலா இருக்குமா?
இந்தப் படத்துல எல்லோருக்குமே அவங்கவங்க கேரக்டருக்கான இடம் கொடுக்கப்பட்டிருக்கு. இதுல வெளிநாட்டுல வசிக்கிற தமிழ் பொண்ணா காஜல் நடிச்சிருக்காரு. கதை கேட்டதுமே இந்த படத்தை நான் மிஸ் பண்ணக்கூடாதுன்னு அவர் சொன்னார். அவருக்கு முக்கியத்துவம் குறைவா இருந்தா, அப்படி சொல்லி இருப்பாரா? அக்ஷராவோட கண்கள், பாடிலாங்குவேஜ்னு எல்லாமே இன்டர்நேஷனல் லுக் இருக்கும். இந்த கேரக்டருக்கு அவரை தவிர யாரும் பொருத்தமா இருந்திருக்க முடியாது. தமிழ்ல அவரோட முதல் படம். அதுக்கேத்த மாதிரி வலுவான ரோல் பண்ணியிருக்காரு. அமிலியன்னு ஆஸ்திரிய நடிகையும் நடிச்சிருக்காங்க. அவங்களுக்கும் பவர்ஃபுல் கேரக்டர். நிறைய ஐரோப்பிய நடிகர்களை நடிக்க வச்சிருக்கோம்.
பனி பிரதேசங்கள்ல அதிகம் ஷூட்டிங் பண்ணியிருக்கீங்க. சிரமங்கள் இருந்ததா?
ரொம்பவே சிரமங்கள் இருந்துச்சு. கதைக்கு அந்த களம் தேவைப்பட்டதால, பல நாட்கள் பனி பிரதேசங்கள்ல ஷூட்டிங் நடத்தினோம். காலை 9 மணிக்கு மலை ஏறப்போனா, மதியம் 3 மணிக்குதான் மேலே போய் சேருவோம். ஒரு மணி நேரம் ஷூட் பண்றதுக்குள்ள இருட்டாயிடும். திரும்ப மறுநாள் வருவோம். அஜீத் சார் கிட்ட சொல்றதுக்கு தயக்கத்தோட நிப்பேன். என்ன சிவா, மலை ஏறணுமான்னு கேட்பார். அசால்ட்டா ஏற ஆரம்பிச்சிடுவாரு. ஆக்ஷன் காட்சிகள்ல டூப் இல்லாம பண்றதுதான் அவருக்கு பிடிக்கும். பலமுறை விபத்துகள் நடந்தும் அதை பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதாகவே தெரியல. அதனாலதான் அவரோட டெடிகேஷன் பற்றி ஆரம்பத்துலேயே சொன்னேன். அவர் இல்லேன்னா இந்த படம் இல்லை. பல்கேரியாவை சேர்ந்த ஸ்டன்ட் மாஸ்டர் கலோயன், மலை ஏர்ற ஆக்ஷன் காட்சிகளையும் பனிபிரதேசத்துல நடந்த ஆக்ஷன்களையும் ஸ்டைலிஷா பண்ணி கொடுத்திருக்காரு. கணேஷ் மாஸ்டரும் ஸ்டன்ட் காட்சிகளை அமைச்சிருக்காரு. இவங்களோட பங்களிப்பு படத்துக்கு ரொம்ப முக்கியமா இருந்துச்சு.
ஸ்கிரிப்ட்ல மேலும் 2 பேர் உங்க கூட ஒர்க் பண்ணியிருக்காங்களே?
ஆமாம். வெறும் ஹாலிவுட் தரம்னு சொல்லிட்டா போதுமா? அங்கே எந்த படமா இருந்தாலும் 3, நாலு பேரு சேர்ந்துதான் ஸ்கிரிப்ட்ல ஒர்க் பண்றாங்க. அதனாலதான் ஆக்ஷன் காட்சிகள் கூட அங்கே தனியே கதையை சொல்லுது. இதுல என்னோடு ஆதி நாராயணா, கபிலன் வைரமுத்து ரெண்டு பேரும் திரைக்கதையில கூடுதலா ஒர்க் பண்ணியிருக்காங்க. படத்துல ரெண்டு பாட்டை நானும் எழுதியிருக்கேன். அனிருத்தோட ஸ்டைலிஷ் இசை, பாடல்கள்லேயும் பின்னணிலேயும் பிரமாண்டமான ஃபீலை தரும். கேமராமேன் வெற்றிவேல், எடிட்டர் ரூபன், ஆர்ட் டைரக்டர் மிலன் என மொத்த டீமும் படத்துக்காக கடுமையா உழைச்சிருக்கு. அதோட பலன் ஸ்க்ரீனில் தெரியும்.
இந்த படத்துல அஜீத் ரசிகர்களுக்கான ஸ்பெஷல் என்ன?
அவரோட ஸ்க்ரீன் கரிஷ்மா காட்சிக்கு காட்சி அப்ளாஸ் அள்ற மாதிரி இருக்கும். சமீபத்துல அவரோட எல்லா படத்துலேயும் பஞ்ச் டயலாக்குன்னு தனியே எதுவும் இருக்காது. ஆனா, அவர் பேசுனா அதுவே ஆடியன்சுக்கு பஞ்ச் டயலாக்கை விட பல மடங்கு மாஸா ஃபீல் தரும். அந்த மாதிரிதான் இதுலேயும். ‘உலகமே உன்னை எதிர்த்து நின்னாலும்’கிற டீசர் வசனமே உலக அளவுல ரசிகர்களை ஈர்த்திருக்கு. கண்டிப்பா இதுபோல நிறைய மாஸ் விஷயங்கள் இருக்கும். அஜீத் சாரை ஸ்டைலிஷான ஸ்பையாக இந்த படத்துல ரசிகர்கள் பார்ப்பாங்க.
அடுத்த படமும் அவர்கூடத்தானா?
இப்போதைக்கு என்னோட கவனம் எல்லாமே ‘விவேகம்’ மேலதான். நான் எப்போவும் அப்படித்தான். ‘வீரம்’ பண்ணும்போதும், ‘வேதாளம்’ பண்ணும்போதும் அடுத்த படம் பற்றி யோசிக்கல. அஜீத் சார் கூப்பிட்டாருன்னா எப்போ வேணும்னாலும் அவருக்காக படம் பண்ணத் தயாரா இருக்கேன்.