தமிழகம் முழுவதும் பஸ்கள் எண்ணிக்கை குறைப்பு: மாணவர்கள் விபரீத பயணம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் ‘பீக் அவர்’ எனப்படும் காலை, மாலை நேரங்களில் மாநகர மற்றும் அரசு பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கிடைக்கும் பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டு, பக்கவாட்டு ஜன்னல்களைப் பிடித்தபடி விபரீத சாகசங்களை நிகழ்த்தியபடி செல்லும் அவலநிலை தொடர்கதையாக மாறி வருகிறது. ஆனால், இப்பிரச்னையின் தீவிரத்தை சம்பந்தப்பட்ட காவல், போக்குவரத்து, கல்வி மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர் என பள்ளி, கல்லூரி மாணவர்களின் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லைகளில் உள்ள சென்னை புறநகர் பகுதிகளான மணலி, எண்ணூர், மாதவரம், அம்பத்தூர், ஆவடி, பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள், சென்னை நகருக்குள் இருக்கும் பல்வேறு அரசு கல்லூரிகளுக்கு வந்து செல்கின்றனர். ஆனால், பெரும்பாலான பகுதிகளில் ‘பீக் அவர்ஸ்’ எனப்படும் காலை, மாலை நெரிசல் நேரங்களில் பெரும்பாலான மாநகர பேருந்துகள் ‘எஸ்’ (காணாமல்) ஆகிவிடுகின்றன. கிடைக்கும் பேருந்தில், நிரம்பி வழியும் கூட்டத்தோடு படிக்கட்டுகள் மற்றும் பக்கவாட்டு ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடியும், ஓடும் பஸ்சை துரத்தி சென்று ஏறும் விபரீத சாகச நிகழ்ச்சிகள் பொதுமக்களிடம் கிலியை ஏற்படுத்தி வருகின்றன.
இவ்வாறு படிக்கட்டு மற்றும் பக்கவாட்டு ஜன்னல்களை பிடித்தபடி விபரீதமாக தொங்கியபடி வரும் பள்ளி, கல்லூரி மாணவர்களை போக்குவரத்து போலீசாரும் கண்டுகொள்வதில்லை. படிக்கட்டில் விபரீதமாக நிற்கும் மாணவர்களை டிரைவர் உள்ளே வருமாறு எச்சரித்து பேருந்தை நிறுத்தினால், அவருக்கு தர்ம அடி விழும் அவலநிலையும் நீடித்து வருகிறது. இதுதவிர காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ளடங்கிய கிராமப் பகுதிகளில் நடுநிலைப் பள்ளிகள் வரையே உள்ளன. அங்கு வசிக்கும் மாணவர்கள் உயர்கல்விக்காக நகர்ப் பகுதிகளுக்கு செல்லும்போது, அத்திப்பூத்தாற்போல் வரும் அரசு பேருந்தின் படிக்கட்டுகள் மற்றும் பஸ்சின் மேல்பகுதியில் விபரீத நிலையில் தொங்கியபடி செல்கின்றனர்.
கடந்த 6 மாதங்களில் இத்தகைய ரயில், பஸ் படிக்கட்டு விபரீத பயணங்களால் இதுவரை சுமார் 100-க்கும் அதிகமான மாணவர்கள் பலியானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் பேசுகையில், ‘சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் குறைவான அரசு பேருந்துகளே இயக்கப்படுகின்றன. காலை 9 மணிக்கு பள்ளி, கல்லூரி செல்ல வேண்டுமென்றால் குறித்த நேரத்துக்கு பஸ் வராது. அப்படியே வந்தாலும் பயணிகளுடன் நிரம்பியிருக்கும்.
இதனால் நாங்கள் தவிர்க்க முடியாமல் படிக்கட்டுகளிலும் பக்கவாட்டு கம்பிகளை பிடித்தபடி விபரீத பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் என்பதால் பேருந்து ஊழியர்கள் எங்களை கேவலமாக நடத்துகின்றனர். காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் விட்டால், நாங்கள் ஏன் படிக்கட்டுகளில் பயணம் செய்யப் போகிறோம்?’ என்று மாணவர்கள் கேட்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாநகர, நகர அரசு பேருந்துகள் குறித்த நேரத்தில் இயங்குவதில்லை.
இதனால் புறநகர் மற்றும் கிராமப்புற மாணவர்கள் கிடைக்கும் பேருந்துகளில் விபரீதமாக தொங்கியபடி செல்லும் அவலநிலை நீடிக்கிறது.
இவற்றை தவிர்க்க, அந்தந்த பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் பொறுப்பை தட்டிக் கழிக்காமல், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு பஸ்களை வாடகைக்கு எடுத்து, அவற்றுக்கு நியாயமான கட்டணத்தை வசூலிக்க வழிவகை செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, இத்தகைய விபரீத பயணங்களையும் உயிர்ப் பலிகளையும் தடுக்க முடியும்’ என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மாணவர்களின் நலனில் அந்தந்த பள்ளி, கல்லூரி நிர்வாகங்களும் அரசு போக்குவரத்து கழகங்களும் அக்கறை காட்டுமா? பெற்றோர்களின் பரிதவிப்பில் மாணவர்களும் அக்கறை கொள்வார்களா?