ஜனாதிபதியின் தொடக்க உரை தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் - பா.ஜனதா மோதல்
மாநிலங்களவையில் ஜனாதிபதியின் தொடக்க உரை தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா மோதலில் ஈடுபட்டது.
டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், நாட்டின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றார். இன்று மாநிலங்களவை தொடங்கியதும் ஜனாதிபதியாக பதவியேற்ற ராம்நாத் கோவிந்த் தன்னுடைய தொடக்க உரையில் மகாத்மா காந்தியை, தீன் தயாள் உபாத்தியாயாவுடன் ஒப்பிட்டு பேசியதை விமர்சனம் செய்தார் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா. அவர் பேசுகையில்,
“மகாத்மா காந்தி தேசத்திற்காக அதிக பணிகளை செய்தவர், அவரை தீன் தயாஜ் உபாத்தியாவுடன் ஒப்பிட்டு பேசுவது என்பது காந்திஜியை அவமதிப்பது போன்றது. தொடக்க உரையில் ஜவகர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஜியின் பெயரும் இடம்பெற வில்லை,” என்றார். அவருடைய பேச்சுக்கு பிற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் குலாம்நபி ஆசாத் பேசுகையில், மத்திய அரசு தொடர்ச்சியாக நேருவின் குடும்பத்தினை அவமதித்து வருகிறது என்றார்.
இதனையடுத்து மாநிலங்களவை சபாநாயகர், இந்த வாதம் பொறுத்தமற்றது என கூறி ஆலோசனைக்கு அனுமதி மறுத்தார். காங்கிரஸ் கட்சியின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த அருண் ஜெட்லி, காங்கிரஸ் தொலைக்காட்சி கேமராக்களுக்காக காங்கிரஸ் இதனை எழுப்புகிறது என்றார். பூஜ்ஜிய நேரம் தொலைக்காட்சி சேனல்களின் நலனுக்காக மட்டும் முன்னெடுக்கப்பட கூடாது என்றார் அருண் ஜெட்லி. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவை மையத்திற்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பேசிய திருச்சி சிவா எம்.பி., ஜெட்லியில் தொலைக்காட்சி கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
ஜெட்லி அவருடைய குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார். அமளி காரணமாக அவை 12 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.
12 மணிக்கு அவை தொடங்கியதும் குலாம்நபி ஆசாத் பேசுகையில் ஜெட்லியின் பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார். அவர்களுக்கு ஆதரவாக மீடியாக்கள் செயல்படுகிறது என்றார். ஜெட்லியின் பேச்சை நீக்க வேண்டும் என சமாஜ்வாடி நரேஷ் அகர்வால், ஆனந்த் சர்மா, டி. ராஜா ஆகியோர் இணைந்துக் கொண்டனர். சபாநாயகர் துணை ஜனாதிபதி அன்சாரி பேசுகையில், “துணை சபாநாயகர் இவ்விவகாரம் தொடர்பாக ஆவணங்களை பார்ப்பதாக தெரிவித்து உள்ளார், அவர்தான் அவையில் இருந்தது, அவரே நடவடிக்கையை மேற்கொள்வார்,” என்றார்.
அருண் ஜெட்லிதான் தொலைக்காட்சி நபர், எதிர்க்கட்சிகளை அவைத்தலைவர் இவ்வாறு சிறுமைபடுத்தியதை நான் எதிர்பார்க்கவில்லை என்றார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கபில் சிபல்.