காலே சர்வதேச மைதானத்தில் இந்தியா - இலங்கை மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்







காலே : 

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, காலே சர்வதேச மைதானத்தில் இன்று காலை 10.00 மணிக்கு தொடங்குகிறது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடக்கிறது. காலே மைதானத்தில் இன்று தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பொறுப்பேற்ற பிறகு சந்திக்கும் முதல் சவால் என்பதால், எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 அணியான இந்தியா, 7வது இடத்தில் பின்தங்கியிருக்கும் இலங்கைக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்பு உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு காலே மைதானத்தில் நடந்த டெஸ்டில் 176 ரன்னை துரத்திய இந்தியா 112 ரன்னுக்கு சுருண்டு பரிதாபமாக தோற்றது. எனினும், 2016-17 சீசனில் கோஹ்லி தலைமையில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 17 டெஸ்டில் 12 வெற்றிகளை பதிவு செய்து அசத்தியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா... என்று தொடர்ச்சியாக டெஸ் தொடர்களை கைப்பற்றிய இந்திய அணி, தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.

அதே உற்சாகத்துடன் இலங்கைக்கு எதிரான தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் கோஹ்லி & கோ வரிந்துகட்டுகிறது. 2015-16 மற்றும் 2016-17 என இரண்டு டெஸ்ட் சீசனிலும் சேர்த்து 23 டெஸ்டில் ஒரே ஒரு தோல்வியை மட்டுமே இந்தியா சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வைரஸ் காய்ச்சல் காரணமாக கே.எல்.ராகுல் விளையாட முடியாத நிலையில், ஷிகர் தவான் - அபினவ் முகுந்த் ஜோடி இன்னிங்சை தொடங்கலாம். அவர்களைத் தொடர்ந்து புஜாரா, கோஹ்லி, ரகானே, ரோகித் என்று பலமான பேட்டிங் வரிசை இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும். பின் வரிசையிலும் ஆல் ரவுண்டர்கள் அஷ்வின், ஜடேஜா இருப்பதால் ரன் குவிப்புக்கு கவலை இருக்காது. அனுபவ சுழல் அஷ்வின் தனது 50வது டெஸ்டில் களமிறங்க உள்ளார். அணியில் ஐந்து பந்துவீச்சாளர்களை சேர்க்க கோஹ்லி முடிவு செய்தால், குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஷமி, உமேஷ் வேகத்துக்கு பொறுப்பேற்பார்கள். இஷாந்த், புவனேஷ்வர் இடம் பெறுவது சந்தேகமே.

சமீபத்தில், சொந்த மண்ணில் ஜிம்பாப்வேக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியதால் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் ராஜினாமா செய்தார். அதன் பிறகு சண்டிமால் தலைமையில் களமிறங்கிய டெஸ்ட் போட்டியில் 388 ரன் என்ற இமாலய இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்து சாதனை படைத்ததால் இலங்கை அணி வீரர்கள் புதிய உத்வேகம் பெற்றுள்ளனர். கேப்டன் சண்டிமால் நிமோனியா காய்ச்சலால் அவதிப்படுவதால் முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ளது இலங்கை அணிக்கு சற்று பின்னடைவை கொடுத்துள்ளது. அவருக்கு பதிலாக ஹெராத் தலைமையேற்கிறார். ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் அவர் 11 விக்கெட் கைப்பற்றி நல்ல பார்மில் உள்ளார். ஆல் ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ், குசால் மெண்டிஸ், தரங்கா, டிக்வெல்லா, குணரத்னே என்று தரமான பேட்ஸ்மேன்கள் இருப்பதால், இந்த டெஸ்ட் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

அணிகள்: இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், அபினவ் முகுந்த், செதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரகானே, ரோகித் ஷர்மா, ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல்.

இலங்கை: ரங்கனா ஹெராத் (கேப்டன்), உபுல் தரங்கா, திமத் கருணரத்னே, குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், அசெலா குணரத்னே, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), தனஞ்ஜெயா டி சில்வா, தனுஷ்கா குணதிலகா, தில்ருவன் பெரேரா, சுரங்கா லக்மல், லாகிரு குமாரா, விஷ்வா பெர்னாண்டோ, மலிண்டா புஷ்பகுமாரா, நுவன் பிரதீப்.

நேருக்கு நேர்...

* இந்தியா - இலங்கை அணிகள் மோதியுள்ள 38 டெஸ்டில், இந்தியா 16-7 என முன்னிலை வகிக்கிறது. 15 டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளன.
* அதிகபட்ச ஸ்கோர்: இலங்கை 952/6 (கொழும்பு, 1997); இந்தியா 726/9 (மும்பை, 2009).
* குறைந்தபட்ச ஸ்கோர்: இலங்கை 82 ஆல் அவுட் (சண்டிகர், 1990), இந்தியா 112 (காலே, 2015).
* ரன் குவிப்பில் இந்தியாவின் சச்சின் 36 இன்னிங்சில் 1,995 ரன்னுடன் (அதிகம் 203, சராசரி 60.45) முதலிடம் வகிக்கிறார். இலங்கை பேட்ஸ்மேன்களில் மகிளா ஜெயவர்தனே 28 இன்னிங்சில் 1,882 ரன் (அதிகம் 275, சராசரி 67.48) எடுத்துள்ளார்.
* ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் விளாசியவர்கள் பட்டியலில் இலங்கையின் ஜெயசூரியா (340 ரன்) முதல் இடம் பிடித்துள்ளார். இந்திய வீரர்களில் சேவக் 293 ரன் விளாசியதே அதிகபட்சமாகும்.
* விக்கெட் வேட்டையில் இலங்கை சுழல் முத்தையா முரளிதரன் 32 இன்னிங்சில் 105 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இந்தியாவின் அனில் கும்ப்ளே 28 இன்னிங்சில் 74 விக்கெட் எடுத்துள்ளார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad