ஹீரோ சிகரெட் பிடித்தால் ‘ஏ’ சர்டிபிகேட் : சென்சார் அதிரடி
ஆபாச, வன்முறை காட்சிகள் இடம்பெற்றால் படங்களுக்கு சென்சார் குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் வழங்குகின்றனர். இனி ஹீரோ சிகரெட் பிடித்தால் ஏ சான்றிதழ் வழங்கப்படவிருக்கிறது. சென்சார் போர்ட் தலைவர் பஹல்ஜ் நிஹலனி ஏற்கனவே திரைப்படங்கள் சென்சார் தொடர்பாக பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் வெளியிட்டுள்ளார். தற்போது மற்றொரு அதிரடி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
படங்களில் ஹீரோக்களை புகைப்பிடிப்பது போலவோ, குடிப்பதுபோலவோ காட்டினால் அப்படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்படும் என குறிப்பிட்டிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,’ஒரு ஹீரோ கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவராக இருக்கிறார். அவர் புகைப்பிடிப்பதுபோல் காட்டினால் அது ரசிகர்களையும் ஊக்குவிப்பதாக இருக்கும்.
புகைப்பிடிக்கும் காட்சியின்போது ஒரு ஓரத்தில் காட்டும் புகையினால் வரும் தீமைபற்றிய எச்சரிக்கை வாசகம் மட்டும் போதுமானதில்லை. படம் எடுப்பவர்கள் தங்கள் ஹீரோவை சிகரெட் பிடிப்பதுபோல் காட்டியாக வேண்டுமென்றால் அப்படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்தான் வழங்கப்படும்’ என்றார். நிஹலனியின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த திரையுலகினையும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.