இலங்கையில் சீன துறைமுகம் புதிய ஒப்பந்தத்துக்கு சிறிசேனா மந்திரிசபை ஒப்புதல்
இலங்கையில் அம்பான்தோட்டா என்ற இடத்தில் சீனா ஒரு துறைமுகத்தை உருவாக்கி உள்ளது. இந்த துறைமுக திட்டத்தின் பாதுகாப்பு அம்சத்தையொட்டி, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகியவை கவலை தெரிவித்தன.
அதற்கு மத்தியில் சீன மெச்சர்ண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் இந்த துறைமுகத்தை 1.5 பில்லியன் டாலர் மதிப்பில் (சுமார் ரூ.9,750 கோடி) கட்டி உள்ளது.
இது உலகின் மிக பரபரப்பான கப்பல் பாதைகளையொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் நவீன பட்டுப்பாதை திட்டத்தின் ஒரு அங்கமான அம்பான்தோட்டா துறைமுகம், சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த துறைமுகத்தையொட்டி 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்தவும் முடிவாகி உள்ளது.
இந்த திட்டத்தை எதிர்த்து உள்ளூர் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியும் பலன் இல்லை.
இந்த நிலையில், இந்த சீன துறைமுகம் தொடர்பான மாற்றியமைக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்துக்கு சிறிசேனா மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
மாற்றி அமைக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி இந்த துறைமுகத்தை வர்த்தக பயன்பாட்டுக்கு மட்டுமே சீனா பயன்படுத்த வேண்டும். ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.