நடிகர் சங்க கட்டட வழக்கு : இடைக்கால தடை நீக்கம்
நடிகர் சங்க இடத்தில் கட்டுமானப் பணிகள் செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை ஆக்கிரமிக்கப்பட்டதிற்கு போதிய ஆதாரங்கள் மனுதாரர் தரப்பில் சமர்ப்பிக்காததால் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. நடிகர் சங்க கட்டடத்திற்கு எதிரான மூல வழக்கில் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சென்னை தியாகராய நகர் அருகே நடிகர் சங்கம் சார்பில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ரூ.26 கோடி செலவில் நான்கு மாடிகளுடன் நடிகர் சங்க கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
அதில் தியேட்டர், ஜிம், கூத்துப்பட்டறை போன்றவை அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் தியாகராய நகர், அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல பொது சாலையை நடிகர் சங்கத்தினர் ஆக்ரமித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. கட்டடம் கட்ட தடை விதிக்க வேண்டுமென ஸ்ரீரங்கன் மற்றும் அண்ணாமலை ஆகிய இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில் பொதுச் சாலையில் 40 அடியை நடிகர் சங்க கட்டடம் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதன் மதிப்பு 8 கோடி என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பொது சாலையை ஆக்கிரமித்து கட்டடம் கட்ட நடிகர் சங்கத்துக்கு யார் அனுமதி கொடுத்தது என கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், இது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ.வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மறு உத்தரவு வரும் வரை கட்டட பணிகளையும் தடை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்து போது சாலை ஆக்கிரமிக்கப்பட்டதிற்கு போதிய ஆதாரங்கள் மனுதாரர் தரப்பில் சமர்ப்பிக்காததால் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையை நீக்கிஉத்தரவிட்டுள்ளது.