தமிழச்சி என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதா? பிரியா ஆனந்த் விளக்கம்!
அக்மார்க் தமிழ் நடிகைகளில் ஒருவர், பிரியா ஆனந்த். மாயவரத்துப் பெண். தமிழ், இந்தி மொழிகளில் வலம் வந்த அவர், இப்போது கன்னடம் மற்றும் மலையாளத்தில் கால் பதித்திருக்கிறார். ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் ஃபர்ஸ்ட் பெஞ்ச் ஹீரோயினான அவர், புரமோஷனுக்காக மும்பையில் இருந்து சென்னைக்கு பறந்து வந்திருந்தார்.
திடீர்னு சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்திருந்தீங்களாமே? அப்படி என்ன உங்களுக்கு நிர்ப்பந்தம்?
அது என்னோட பெர்சனல். இதுவரை யாருகிட்டேயும் சொன்னதில்லை. அதை வெளியே சொல்லலாமான்னும் தெரியலை. இருந்தாலும் சொல்றேன். சினிமாவுல நடிக்கிறதுக்காக நான் சென்னைக்கு தனியா வந்த நேரத்துல, எனக்கு எல்லாமா இருந்தது என்னோட நெருக்கமான ஃப்ரெண்ட். அவன் எனக்கு தம்பி மாதிரி. மாதிரின்னு கூட சொல்ல முடியாது, தம்பியேதான். அவன் வீட்டுலதான் தங்கியிருந்தேன். அங்கேதான் சாப்பிட்டேன். சொந்த அக்கா மாதிரி பார்த்துக்கிட்டான். அவனோட அம்மா என்னை சொந்தப் பிள்ளை மாதிரி பார்த்துக்கிட்டாங்க. ஒரு வருஷத்துக்கு முன்னால, திடீர்னு ஒரு ஆக்சிடென்டுல அவன் செத்துட்டான். அவன் செத்துட்டான்ங்கிறதையும், அவன் இந்த உலகத்துலயே இல்லைங்கிறதையும் நான் நம்பலை. என்னால அவனோட இந்த முடிவை ஏத்துக்க முடியலை.
ரொம்ப டிப்ரஷன்ல இருந்தேன். ஆமா, அவன் இறந்துட்டான். இனிமே வரவே மாட்டான்ங்கிற நிஜத்தை நான் ஏத்துக்கிறதுக்கே பல மாசம் ஆச்சு. நான் சினிமாவுல வளர்ந்ததுக்கும், ஜெயிச்சதுக்கும் அவன்தான் முக்கியமான காரணம். இப்ப நான் என்ன நடிச்சு பேர் வாங்கினாலும், அதை பார்க்கிறதுக்கு அவன் இல்லையே. பிறகு எதுக்கு நடிக்கணும்? கவலையை மறந்து, என்னால எப்படி செயற்கையா சிரிச்சு நடிக்க முடியும்? அதனாலதான், இனிமே நடிப்பே வேணாம்னு முடிவு பண்ணேன். அந்த நேரத்துல என்னை தேடி வந்த சில கதைகளையும் வேண்டாம்னு மறுத்துட்டேன்.
பிறகு எப்படி ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்துல நடிக்க சம்மதிச்சீங்க?
டைரக்டர் ஞானவேல் கதை சொல்ல வந்தப்ப, ‘எனக்கு சினிமாவுல நடிக்கிற ஐடியாவே இல்லை. எதுக்கு உங்க நேரத்தை வேஸ்ட் பண்றீங்க?’ன்னுதான் சொன்னேன். ‘கதை மட்டும் கேளுங்க. படத்துல நடிச்சே ஆகணும்னு கட்டாயம் இல்லை’ன்னு சொன்னார். கதை கேட்டேன். நான் இருந்த நிலமையிலே, அந்தக் கதை எனக்குள்ள ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை கொடுத்தது. எந்த அடையாளமும் இல்லாம வாழ்க்கை முடிஞ்சிடக்கூடாதுன்னு அந்தக் கதை சொன்னது. நேற்று இருந்ததை விட, இன்னைக்கு ஒரு படி உயர்ந்தா, அதுவே பெரிய வளர்ச்சிதான்னு அந்தக் கதை ெசால்லிக் கொடுத்தது. அதனாலதான் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்துல நடிக்க சம்மதிச்சேன்.
படத்துல உங்க கேரக்டர் என்ன?
படத்தோட ஹீரோ அசோக் செல்வன் ஒரு மிடில் பெஞ்சர். அடுத்தது பற்றி யோசிக்காம, இருக்கிறதை நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டு இருப்பார். நான் ஃபர்ஸ்ட் பெஞ்சர். படிப்பு, விளையாட்டு, பொது அறிவுன்னு எல்லா விஷயத்திலும் நம்பர் ஒன். அவர் என்னை இம்ப்ரஸ் பண்ணி லவ் பண்ணணும். எல்லா விஷயத்திலும் நம்பர் ஒண்ணா இருக்கிற பெண், ஒரு சராசரி இளைஞன் கிட்ட எப்படி தன் காதலை ஒப்படைக்கிறாள் என்ற சுவாரஸ்யமான கேரக்டர்ல நடிச்சிருக்கேன்.
நிஜத்துல நீங்க ஃபர்ஸ்ட் பெஞ்சரா?
சொன்னா ஆச்சரியப்படுவீங்க, நான் லாஸ்ட் பெஞ்சர்தான். ஆனா, ஆல்பபெட்டிகல் ஆர்டர்படி (ஆனந்த் பிரியா), முதல் பெஞ்சில் உட்கார ெவச்சிடுவாங்க. அப்புறம் நானா நல்லா படிச்சு, நல்ல புள்ளைன்னு பெயரெடுத்து, நிஜமாவே ஃபர்ஸ்ட் பெஞ்சர் ஆனேன்.
இப்ப கன்னடத்திலும், மலையாளத்திலும் அறிமுகமாயிட்டீங்களே?
ஆமா. கன்னட சினிமாவுல மெகா பட்ஜெட் படமா உருவானது, ‘ராஜகுமாரா’. அதுல நான் புனித் ராஜ்குமாருக்கு ஜோடி. படம் செம ஹிட். அதேமாதிரி மலையாளத்துல பிருத்விராஜோட ‘எஸ்ரா’ படம் பண்ணேன். இது பயங்கரமான திகில் படம். இதுவும் செம வசூல் பண்ணது. இப்ப நிறைய கதைகள் வந்துக்கிட்டு இருக்கு. அடுத்த படம் எதையும் இன்னும் முடிவு பண்ணலை. தமிழ்ல ஒரு புதுப்படம் பண்றேன். அதை புரொடியூசர் தரப்புல இருந்து சீக்கிரம் அறிவிப்பாங்க. இந்தியில நான் நடிச்சு வெளியான ‘பக்ரி’ங்கிற படத்தோட ெரண்டாம் பாகத்துல, முதல் பாகத்துல நடிச்சிருந்த அதே கேரக்டர்ல நடிக்கிறேன்.
நீங்க ஒரு தமிழ் நடிகை என்பதால், பட வாய்ப்புகள் ரொம்ப குறைவா கிடைக்கிறதா நினைக்கிறீங்களா?
என்னைப் பொறுத்தவரை நான் ரொம்ப தேர்ந்தெடுத்துதான் நடிக்கிறேன். தமிழ்ப் படங்கள்ல, தமிழ் நடிகைகளை நடிக்க வைக்கிறதுதான் சிறப்பு. மும்பையில இருந்து வர்ற நடிகைகளுக்கு தமிழ் நேட்டிவிட்டி ஒட்டவே ஒட்டாது. அந்தளவு சிவப்பா தமிழ்நாட்டுல யாரும் கிடையாது. மும்பை நடிகைகள் கலரா இருந்தாலும், நம்ம பொண்ணுங்க அளவுக்கு முகம் களையா இருக்காது. என்னைப் பொறுத்தவரை தமிழ் பொண்ணுங்கிறதால வாய்ப்பு எதுவும் மறுக்கப்படலை. ஸ்கிரிப்ட்டுதான் நான் நடிக்கணுமா? வேணாமான்னு தீர்மானிக்குது. ‘பக்ரி’ படத்துல, தமிழ்நாட்டுல இருந்து போய், பஞ்சாபி பொண்ணா நடிச்சேன். படம் பார்த்தவங்க, என்னை நிஜ பஞ்சாபி பொண்ணாவே பார்த்தாங்க. நிறைய பஞ்சாபி பட வாய்ப்புகள் கூட வந்தது. கதை எந்த மாதிரி நடிகைகளை கேட்குதோ, அவர்களை நடிக்க வைக்கலாம். அழகா இருக்காங்க, கலரா இருக்காங்கன்னு, கேரக்டருக்கு பொருத்தம் இல்லாதவங்களை திணிக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்.
காதலைப் பற்றியும், கல்யாணத்தைப் பற்றியும் என்ன சொல்றீங்க?
இப்பதான் பெரிய சோகத்துல இருந்து மீண்டு வந்து, மறுபடியும் சினிமாவுல நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். அதனால காதலைப் பற்றியும், கல்யாணத்தைப் பற்றியும் என்னால யோசிக்கக்கூட முடியலை. எனக்குப் பிடிச்ச கேரக்டர்ல ரசிச்சு நடிச்சு, ஆடியன்ஸ் கிட்ட நல்ல பேர் வாங்கினா போதும்னு நினைக்கிறேன்.