5ம் தலைமுறைக்கும் ஈடுகொடுக்கும் அதிநவீனம் மிக்-35 போர் விமானம் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
சுகோவஸ்கி (ரஷ்யா):
ரஷ்யாவின் புதிய தயாரிப்பான மிக்-35 ரக அதிநவீன போர் விமானங்களை வாங்க இந்தியா பேச்சுவாரத்தை நடத்தி வருகிறது.
இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக ரஷ்யா நீண்ட காலமாக இருக்கிறது. இந்திய ராணுவத்தில் இப்போது பயன்படுத்தப்படும் போர் விமானங்களில் பல, ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டவைதான். எல்லையை சுற்றியுள்ள அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனாவுடன் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருவதால், ராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதோடு, ராணுவத்தில் இப்போதுள்ள போர் விமான ரகங்களில் பல, மிகவும் பழையதாகி விட்டன.
இந்நிலையில், ரஷ்யாவை சேர்ந்த மிக் விமான தயாரிப்பு நிறுவனம் மிக்-35 என்ற அதிநவீன போர் விமானத்தை தயாரித்துள்ளது. கடந்த ஜனவரி 26ம் தேதி இதன் வெள்ளோட்டம் வெற்றிகரமாக நடத்தி காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரஷ்யாவுடன் நட்பு பாராட்டும் 30க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த விமானத்தை வாங்கி ராணுவத்தில் சேர்க்க முனைப்பு காட்டி வருகின்றன. அதேபோல், இந்தியாவும் ஆர்வம் காட்டி வருகிறது. அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று துல்லிமாக தாக்குதல் நடத்தக் கூடிய இது, எதிரிகளின் கண்ணில் சிக்காமல் பறக்கக் கூடியது.
ரஷ்யாவில் உள்ள சுகோவஸ்கியில் ‘மேக்ஸ் 2017’ என்ற பெயரில் மாபெரும் விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட பிறகு மிக் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டரசெங்கோ அளித்த பேட்டியில், ‘‘மிக்-35 போர் விமானத்தை வாங்க இந்தியா ஆர்வம் காட்டுகிறது. இது தொடர்பாக எங்கள் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த அதிநவீன போர் விமானம் 5ம் தலைமுறைக்கும் ஈடுகொடுக்கக் கூடியது. விமானத்தை விற்பது மட்டுமின்றி, அதை 40 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பொறுப்பையும் மிக் நிறுவனம் ஏற்கிறது’’ என்றார்.