ஐசிசி மகளிர் உலக கோப்பை பைனல்: 4வது முறையாக இங்கிலாந்து சாம்பியன்
லண்டன்:
இந்திய அணியுடனான ஐசிசி மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியில், 9 ரன் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஹீதர் நைட் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 228 ரன் குவித்தது. வின்பீல்டு 24 ரன், பியூமான்ட் 23 ரன், சாரா டெய்லர் 45 ரன் (62 பந்து), ஸ்கிவர் 51 ரன் (68 பந்து, 5 பவுண்டரி), கேதரின் பிரன்ட் 34 ரன் (42 பந்து, 2 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தனர். ஜென்னி கன் 25 ரன், லாரா மார்ஷ் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய பந்துவீச்சில் ஜுலன் கோஸ்வாமி 10 ஓவரில் 3 மெய்டன் உட்பட 23 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். பூனம் யாதவ் 2, ராஜேஷ்வரி 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்திய அணி மந்தனா (0), கேப்டன் மித்தாலி (17 ரன்) விக்கெட்டை விரைவாக இழந்து திணறியது. இந்த நிலையில் பூனம் ராவுத் - ஹர்மான்பிரீத் ஜோடி 3வது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி 95 ரன் சேர்த்தது. ஹர்மான்பிரீத் 51 ரன் (80 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். அடுத்து பூனம் கவுர் - வேதா கிருஷ்ணமூர்த்தி ஜோடி 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் 53 ரன் சேர்த்து வெற்றி நம்பிக்கையை கொடுத்தது.
பூனம் ராவுத் 86 ரன் எடுத்து (115 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீராங்கனைகள் பதற்றத்துடன் விளையாடி விக்கெட்டை பறிகொடுத்தனர். வேதா 35 ரன் (34 பந்து, 5 பவுண்டரி), தீப்தி ஷர்மா 14 ரன் எடுக்க, மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இந்தியா 48.4 ஓவரில் 219 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கடைசி 28 ரன்னுக்கு 7 விக்கெட் சரிந்தது குறிப்பிடத்தக்கது. 9 ரன் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 4வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. அந்த அணிக்கு அணிக்கு முதல் பரிசாக 4.5 கோடியும், 2வது இடம் பிடித்த இந்திய அணிக்கு 2.12 கோடியும் வழங்கப்பட்டது.
இந்திய வீராங்கனைகளுக்குரயில்வேயில் பதவி உயர்வு
மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் அபாரமாக விளையாடிய இந்திய அணி வீராங்கனைகளில் கேப்டன் மித்தாலி ராஜ், துணை கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் உட்பட மொத்தம் 10 பேர் இந்தியன் ரயில்வேயில் ஊழியர்களாக உள்ளனர். உலக கோப்பையில் இவர்களது சிறப்பான செயல்பாட்டை கவுரவிக்கும் வகையில், முன்கூட்டியே பதவி உயர்வு வழங்கப்படுவதுடன் ரொக்கப் பரிசும் அளிக்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார். இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் கிரிக்கெட் வீராங்கனைகள் விவரம்: மித்தாலி ராஜ், ஹர்மான்பிரீத் கவுர், ஏக்தா பிஷ்ட், பூனம் ராவுத், வேதா கிருஷ்ணமூர்த்தி, பூனம் யாதவ், சுஷ்மா வர்மா, மோனா மேஷ்ராம், ராஜேஷ்வரி கெயிக்வாட், நவ்ஷத் பர்வீன்.
பிரதமர் பெருமிதம்
மகளிர் உலக கோப்பை பைனலில் இந்திய அணி தோற்றாலும், நமது வீராங்கனைகள் தொடர் முழுவதும் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் பாராட்டுக்குரியது. அணியின் போராட்ட குணத்தை நினைத்து பெருமை கொள்கிறேன்... என்று பிரதமர் மோடி ட்விட்டர் இணையதளத்தில் தகவல் பதிந்துள்ளார்.கிரிக்கெட் நட்சத்திரங்கள் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவக், கவுதம் கம்பீர், யுவராஜ் சிங், முகமது கைப், சுரேஷ் ரெய்னா ஆகியோரும் இந்திய வீராங்கனைகளை பாராட்டி ட்வீட் செய்துள்ளனர்.
ஹர்மான்பிரீத்துக்கு டிஎஸ்பி பதவி
இந்திய அணி துணை கேப்டன் ஹர்மான்பிரீத் சிங்குக்கு பஞ்சாப் காவல்துறையில் டிஎஸ்பி பதவி வழங்கி கவுரவிக்கப்படுவார் என அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் மோகாவை சேர்ந்த ஹர்மான்பிரீத் ரயில்வேயில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதியில் ஆட்டமிழக்காமல் 171 ரன் விளாசிய அவர், நேற்று இங்கிலாந்துக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்.