இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு: டெல்லியில் கோலாகல விழா





புதுடெல்லி: 

இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் நேற்று பதவி  ஏற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர்  பதவிப்பிரமாணம்  செய்து வைத்தார்.ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை  24ம் தேதியுடன் முடிவடைந்தது. இதை முன்னிட்டு புதிய ஜனாதிபதியை தேர்வு  செய்ய  நடந்த தேர்தலில் பாஜ அணி சார்பில் பீகார் முன்னாள் கவர்னர் ராம்நாத்  கோவிந்தும், காங்கிரஸ் அணி சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும்   போட்டியிட்டனர்.  இந்த தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பெற்று ராம்நாத்  கோவிந்த் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அவர் நேற்று  இந்தியாவின் 14வது  ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக காலை  10.30 அளவில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மனைவி  சவீதாவுடன் சென்று ராம்நாத் கோவிந்த்  மலர் அஞ்சலி செலுத்தினார். அதை  தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள ரெய்சினா ஹில்ஸ் பகுதிக்கு சென்றனர்.  ஜனாதிபதியின் ராணுவ  செயலாளர் மேஜர் ஜெனரல் அனில் கோஸ்லே அவர்களை வரவேற்று  அழைத்துச்சென்றார்.

அங்கு பிரணாப் முகர்ஜி அவர்களை வரவேற்றார்.  பின்னர் அங்கு இருந்த மேடையில் பிரணாப் மற்றும் ராம்நாத் கோவிந்த் ஆகியோர்  நின்றனர்.  அவர்களுக்கு ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் வரவேற்பு மரியாதை  செய்தனர். ஜனாதிபதியாக கடைசி மரியாதையை பிரணாப் ஏற்றுக்கொண்டார்.அதைத்  தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையில் இருந்து பிரணாப் மற்றும் ராம்நாத் கோவிந்த்  இருவரும் நாடாளுமன்றம் நோக்கிப் புறப்பட்டனர்.  குதிரைப்படை வீரர்கள்  அணிவகுப்புடன் அவர்கள் சென்ற கார் நாடாளுமன்றம் சென்றடைந்தது. அங்கு  நாடாளுமன்ற வாயில் எண் 5ல் துணை  ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, நாடாளுமன்ற  சபாநாயகர் சுமித்ரா மகாஜன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர்  ஆகியோர் பிரணாப்  மற்றும் ராம்நாத் கோவிந்த் ஆகியோரை வரவேற்று நாடாளுமன்ற  மைய மண்டபத்திற்கு அழைத்துச்சென்றனர்.

அங்கு நடந்த விழாவில் இந்தியாவின்  14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த்துக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி  கெஹர் பதவிப்பிரமாணம்  செய்து வைத்தார். ராம்நாத் இந்தியில் பதவிப்பிரமாணம்  எடுத்துக்கொண்டார். அதன்பின் ஜனாதிபதி பதவி ஏற்பு ஆவணத்தில் ராம்நாத்   கையெழுத்திட்டார். அப்போது மைய மண்டபத்தில் கூடியிருந்த தலைவர்கள் மேஜையை  தட்டி வாழ்த்து தெரிவித்தனர். பதவி ஏற்பு விழா நடந்த போது, வெளியே 21 குண்டுகள் முழங்க மரியாதை வழங்கப்பட்டது.
ராம்நாத்  கோவிந்த் பதவி ஏற்ற பின் பாரம்பரிய முறைப்படி பிரணாப் முகர்ஜி தனது  இருக்கையை மாற்றி அமர்ந்தார். பிரணாப் இருந்த இருக்கையில்  ராம்நாத்  கோவிந்த் அமர்ந்தார். பின்னர்தனது முதல் உரையை ஆற்றினார். அதை தொடர்ந்து  துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி உரையாற்றினார். விழா நிறைவடைந்ததை தொடர்ந்து   ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரணாப் மீண்டும் ஜனாதிபதி மாளிகைக்கு  புறப்பட்டனர்.

அப்போது விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பாஜ மூத்த  தலைவர் எல்.கே.அத்வானி, பாஜ தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள்,   காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங்,  தேவகவுடா, முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், முன்னாள்  சபாநாயகர்  மீராகுமார், பல்வேறு மாநில முதல்வர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வெளிநாட்டு  தூதர்கள்,  பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நன்றியும், வணக்கமும்  தெரிவித்துக்கொண்டு விடை பெற்றார்.

அதன்பின் ராம்நாத் கோவிந்தும்,  பிரணாப் முகர்ஜியும் காரில் ஜனாதிபதி மாளிகைக்கு ஊர்வலமாக  அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு ஜனாதிபதி  மாளிகையை பிரணாப் முகர்ஜி புதிய  ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ராம்நாத் கோவிந்த்துக்கு  சுற்றிக்காண்பித்தார். முக்கிய இடங்களை பற்றிய  குறிப்புகளை தெரிவித்தார்.
அதை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த பதிவேட்டில் பிரணாப்  கையெழுத்திட்டுவிட்டு விடை பெற்றார். புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்   தனது ஜனாதிபதி மாளிகையில் முறைப்படி குடியேறினார்.

பிரதமர் மோடி பாராட்டு

புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழா குறித்து பிரதமர் மோடி பாஜ தலைவர்கள், எம்பிக்கள் மத்தியில் உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு: இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ராம்நாத் கோவிந்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் பலம்,  ஜனநாயகம், பன்முகத்தன்மையை விளக்கி அவர் பேசிய முதல் உரை மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது.

ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியாக பதவி  ஏற்றதன் மூலம் பாஜ கொள்கையை உருவாக்கிய சியாம் பிரசாத் முகர்ஜியின் கனவு நனவாகி உள்ளது. சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியா 70  ஆண்டுகள் கழித்து தற்போது உயர்ந்த இடத்தை எட்டி பிடித்துள்ளது. 2022ல் உலகின் சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவெடுக்கும். இந்தியாவின்  கடைசி மனிதனுக்காகவும் நமது உழைப்பை உறுதி செய்ய வேண்டும். ஆகஸ்ட் 5ல் நடைபெறும் துணை ஜனாதிபதி தேர்தலில் எம்பிக்கள் கவனமாக,  செல்லாத ஓட்டு இல்லாத அளவுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கோவிந்துக்கு புதிய டுவிட்டர், வெப்சைட்
புதிய ஜனாதிபதி பதவியேற்ற ராம்நாத் கோவிந்திற்கு என்று தனியாக புதிய டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதே போல் புதிய  இணையதளமும் (வெப்சைட்) தொடங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவி ஏற்ற பின் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அனைத்து தலைவர்கள் முன்னிலையில் ராம்நாத் கோவிந்த் ஆற்றிய முதல் உரை: மண்குடிசை முதல்...:மிகவும் எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்துள்ள நான் நெடுந்தூரப் பயணத்துக்கு பின்னர் எனக்கு  அளிக்கப்பட்டுள்ள இந்தப் பதவியை மிகவும் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன்.  இந்த பதவி கிடைத்துள்ளது எனக்கு பெருமை அளிக்கிறது. நான் சிறிய  கிராமத்தில் பிறந்தவன். எளிமையான குடும்பத்தில் பிறந்து உயர்ந்த பதவிக்கு வந்துள்ளேன். பதவியை அளித்த அனைத்து இந்தியர்களுக்கும் நான்  கடமைப்பட்டுள்ளேன். எனது பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன். எனது பணியை திறம்பட செய்வேன்.

இந்தியா 75வது சுதந்திர தினத்தை 2022ல் கொண்டாட உள்ளது. அனைவருக்கும் வளர்ச்சி உறுதி செய்யப்படும் போது, நாடு வளர்ச்சி பெறும். முன்னாள்  ஜனாதிபதிகள் ராஜேந்திரபிரசாத், ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் காட்டிய வழியில் செயல்படுவேன். நம் நாட்டின் பன்முகத்தன்மை பெருமைக்குரியது. அதுதான் நமது பலம். மொழி, கலாச்சாரம், மதம் உள்ளிட்டவைகளில் நாம் வேறுபட்டு நின்றாலும்  இந்தியர்கள் என்பதில் ஒன்றுபட்டு நிற்கிறோம். நாட்டில் வசிக்கும் அனைத்து குடிமகனும் நாட்டை உருவாக்குகின்றனர். அனைவரின் பங்களிப்பும்  முக்கியமானது. கடைக்கோடி கிராமத்தில் வசிக்கும் இந்தியர் கூட பயன்பெறும் வகையில் இந்தியாவை புதிய உச்சத்திற்கு எடுத்து செல்வோம்.  அதிவிரைவில் நீதி கிடைக்க முயற்சி செய்வோம்.

சமாதானம், அமைதி, சுற்றுச்சூழல் சமநிலையில் புத்தர் உலகிற்கு காட்டிய வழியில் நடப்போம். உலகம் நமது குடும்பம் என்ற கொள்கையில்,  இந்தியாவுக்கு நம்பிக்கை உள்ளது. நாம் பல சாதனைகளை படைத்துள்ளோம். அமைதியான நாடான இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு நாம்  அழைத்துச் செல்ல வேண்டிய நேரம் இது. என் மீது நம்பிக்கை கொண்ட இந்த தேசத்தில் 125 கோடி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இன்றைய  உலகத்தில் இந்தியாவின் குரலுக்கு மதிப்பு உள்ளது. நமது கலாச்சாரம், மென்மையான சக்திக்கு அதிக பலம் உள்ளது. தீவிரவாதம், சட்டவிரோத பணப்பரிமாற்றம், பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் இந்தியாவின் கருத்தை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே  அனைத்து துறைகளிலும் வல்லமை பெற்ற நாடு என்னும் வகையில் நமது கனவு இந்தியாவை உருவாக்க வேண்டியது நமது தலையாய பணியாக  இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கோவிந்த் ஒரு பார்வை
* உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் 1945 அக்டோபர் 1ல் பிறந்தவர் ராம்நாத் கோவிந்த். 1974 மே 30ல் சவீதாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு  பிரசாந்த் குமார் என்ற மகனும், சுவாதி என்ற மகளும் உள்ளனர்.
* பொருளாதார பட்டம் பெற்ற கோவிந்த் சட்டமும் படித்துள்ளார். ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த போது மத்திய அரசு வக்கீலாக  பணிபுரிந்துள்ளார்.
* 12 வருடம் மாநிலங்களவை எம்பியாக பணிபுரிந்துள்ளார்.
* பாஜவில் 1991ல் இணைந்தார். அதற்கு முன் 16 வருடம் வக்கீலாக பணியாற்றினார். ஐஏஎஸ் தேர்வில் வென்ற பிறகும் பணியில் சேராமல் வக்கீல்  பணியை செய்தார்.
* உபி கதாம்பூர் எம்பி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.2007ல் உபி போகினிபூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி  அடைந்தார்.
* ஜநா சபையில் இந்தியா சார்பில் பங்கேற்று 2002 அக்டோபரில் உரையாற்றியுள்ளார்.
வலம் இருந்து இடம் மாறிய பிரணாப்
ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவுக்கு ராம்நாத் கோவிந்த்துடன் பிரணாப் ஒரே காரில் நாடாளுமன்றம் சென்றார். அப்போது ஜனாதிபதியாக இருந்ததால்  பிரணாப் காரின் வலது புறம் ஏறினார். கோவிந்த் இடப்புறம் அமர்ந்தார். பதவி ஏற்பு விழா முடிந்து மீண்டும் ஜனாதிபதி மாளிகைக்கு திரும்பிய போது  காரில் பிரணாப் இடப்புறமும், புதிய ஜனாதிபதி கோவிந்த் வலப்புறமும் ஏறி பயணம் செய்தார்கள்.
* புதிய ஜனாதிபதி பதவி ஏற்புவிழாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. முப்படையையும் சேர்ந்த 1000 வீரர்கள் பணியில்  ஈடுபட்டனர்.
* பதவி ஏற்பு விழா முடிந்து ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி மாளிகை சென்ற போது அவரை வரவேற்கும் வண்ணம் மழை பெய்து இருந்தது.
* பாஜ சார்பில் முதல்முறையாக ஜனாதிபதி பதவி ஏற்றவர் என்ற பெயரை ராம்நாத் கோவிந்த் பெற்றுள்ளார். அதே போல் இரண்டாவது தலித்  ஜனாதிபதி.
* அப்துல்கலாம் தங்கியிருந்த எண் 10, ராஜாஜி இல்லம் தற்போது பிரணாப் முகர்ஜிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad