நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
டெல்லி:
நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்கிறார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து நாட்டின் 14வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 17 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 20 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமாரைவிட அதிக வாக்குகள் பெற்று ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற்றார்.
மொத்தமுள்ள 10 லட்சத்து 98,882 வாக்குகளில் 5.50 லட்சத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்று ராம்நாத் கோவிந்த் முன்னிலை பெற்றிருந்தார். இதையடுத்து நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்கிறார். நாட்டின் முதல் தலித் குடியரசுத் தலைவராக 1997 முதல் 2002 வரை கே.ஆர்.நாராயணன் பணியாற்றினார். அவருக்கு அடுத்து 2-வது தலித் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை ராம்நாத் கோவிந்த் பெற்றுள்ளார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நண்பகல் 12.15 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் அனைத்து மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.